ஆகஸ்ட் 2026 இதழ்


ஆசிரியர் பக்கம்
அன்பான வாசகப் பெருமக்களே!
நம் வாசகர்களிடமிருந்து வரும் “தமிழ்த் தூது” இணைய இதழ் குறித்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு ஆசிரியர் குழு சார்பாக எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
வாசகர்கள் சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள் ஆகியவற்றை நிறைய அனுப்பினாலும் புத்தக விமரிசனங்களும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாள நண்பர்கள் தங்கள் புத்தக விமரிசனங்களை பெருமளவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாசகர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று முடிந்த அளவில் நம் வாசகர் வட்டத்தை விரிவடையச் செய்து, நம் இணைய இதழை தமிழ் கூறும் நல்லுலகம் படித்துப் பயனடையச் செய்ய வேண்டும். உங்களின் படைப்புக்களை hitamilthoodhu@gmail.com என்ற முகவரிக்கு பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் சிறு போட்டோவுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் அவற்றை இந்த இணைப்பில் நேரடியாகவும் பதிவேற்றலாம்.
01/08/2026

குறளின் குரல்
திருக்குறள் என்றால் என்ன?
திருக்குறள் என்பது தமிழ் மொழியின் மிகப் போற்றப்படும் பழமையான இலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதைத் திருவள்ளுவர் எழுதியுள்ளார். இதை “உலகப் பொதுமறை” என்றும் அழைப்பார்கள்.
திருவள்ளுவர் யார்?
திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும் தத்துவஞானியும் ஆவார். அவரை பொதுவாக “தெய்வப்புலவர்” என்று அழைக்கின்றனர்.
திருக்குறளை நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?
இந்தத் தமிழ் இலக்கியம் உலகளவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது 107-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களில் நம்மை வழிநடத்தும் ஒரு ஒளிவிளக்காக இது விளங்குகிறது.
குறள் என்றால் என்ன? அதன் அமைப்பு எப்படி?
“குறள்” என்பது இரு வரிகளைக் கொண்ட செய்யுளைக் குறிக்கும். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் உள்ளன. ஆகவே, மொத்தம் 1330 குறள்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் | குறள் எண்: 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
Ennandri kondraarkkum uyvuṇḍaam uyvillai
Seynandri kondra magarkku.
எத்தனை நல்ல விஷயங்களைக் கெடுத்தவர்க்கும் அப்பாவத்திலிருந்து தப்பிக்கும் வழி உண்டு. ஆனால் ஒருவன் செய்த நன்மையை மறந்தவர்க்கு எவ்விதத்திலும் தப்பிக்க வழியில்லை.
குறள் கதை
எறும்பும் வெட்டுக்கிளியும்

ஒரு மரத்தில் எறும்பும் வெட்டுக்கிளியும் வசித்து வந்தன. அடைமழைக்காலம் வருவதற்கு இன்னும் சிறிது காலமே இருந்ததால் எறும்பு மிகவும் சுறுசுறுப்பாக உணவு சேகரிப்பில் ஈடுபட்டது. ஆனால் வெட்டுக்கிளி மிகவும் சந்தோஷமாக ஆடிப் பாடி பொழுதைக் கழித்து வந்தது.
எறும்பு வெட்டுக்கிளியிடம் “நண்பா! மழைக்காலம் வருகிறது.. நீ இப்படி பொழுதை வீணடிக்காமல் உணவைச் சேகரிக்கலாம் இல்லையா?” என்றது.
அதற்கு வெட்டுக்கிளி “மழைக்காலம் வருவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். எப்போதும் இப்படி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? நீயும் என்னோடு விளையாட வா.” என்றது.
“இல்லை. நான் வரவில்லை” என்று மறுத்த எறும்பு அதன் வேலையைப் பார்த்தது. மழைக்காலமும் வந்து விட்டது. எறும்பு தான் சேமித்த உணவை உண்டு வீட்டிலேயே இருந்தது.
வெட்டுக்கிளியோ உணவு எதுவும் கிடைக்காமல் வாடியது. அதன்மேல் பரிதாபம் கொண்ட எறும்பு தான் சேமித்த உணவை அதற்கும் கொடுத்து உதவியது.
மழைக்காலம் முடிந்ததும் எறும்பு மீண்டும் உணவைத் தேட ஆரம்பித்தது. வெட்டுக்கிளியோ என்றும் போல ஆடிப் பாடித் திரிந்தது.
ஒருநாள் எறும்பு சிறு ரொட்டித் துண்டு ஒன்றை தூக்க முடியாமல் தூக்கி வந்தது. வழியில் வெட்டுக்கிளியைக் கண்டதும் “நண்பா! என்னால் தூக்க முடியவில்லை. நீ கொஞ்சம் உதவி செய்கிறாயா?” என்றது.
அதற்கு வெட்டுக்கிளி “உனக்கு உதவி செய்யத்தான் நான் உள்ளேனா? அதெல்லாம் முடியாது. நீயே சுமந்து செல்.” என்று கூறி உதவ மறுத்து விட்டது.
வெட்டுக்கிளிக்கு தக்க சமயத்தில் உணவு கொடுத்து உதவி செய்தபோதும் வெட்டுக்கிளி அதனை மறந்து எறும்புக்கு உதவி செய்ய மறுத்து விட்டது.
எறும்பும் ரொட்டியை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு அதன் இருப்பிடத்திற்குச் சென்றது. மரத்தின் அடியில் விளையாடிக் கொண்டிருந்த வெட்டுக்கிளியின் மீது கிளை ஒன்று ஒடிந்து விழ, அதன் அடியில் சிக்கிக் கொண்டு அதன் உடல் நசுங்கிப் போனது.
வேதனையில் துடித்த வெட்டுக்கிளியின் மனது எறும்பு செய்த நன்மையை மறந்து, அதற்கு உதவி செய்யாமல் இருந்ததற்குத்தான் கடவுள் தனக்கு இந்த தண்டனையைக் கொடுத்து விட்டார் என்று வருந்தியது.
கதையின் நீதி:
பிறர் செய்த நன்மையை எப்போதும் நினைவில் வைத்து, முடிந்தவரை அதற்கு நன்றியுடன் கைம்மாறு செய்ய வேண்டும். நன்றியுணர்வு மனிதனின் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்றாகும்.

இலக்கியச் சோலை
இந்தப் பகுதியில் பாரதியார், ஔவையார், அழ. வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்று தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடிய தேசியக் கவிஞர்களை முன்னிலைப்படுத்துவோம். ஒவ்வொரு இதழிலும் அவர்களின் புகழ் பெற்ற பாடல்களின் மொழிபெயர்ப்பையும் வழங்குவோம்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27 ஜூலை 1876 – 26 செப்டம்பர் 1954) 20ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் ஆவார். பக்திப் பாடல்கள், இலக்கியப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாடல்கள், வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் பாடல்கள், சமூகப் பாடல்கள், நாட்டுப்பற்றுப் பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், சிந்தனை மற்றும் தத்துவப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வகைகளில் அவர் சிறப்பான படைப்புகளை இயற்றியுள்ளார். அவரது படைப்புகள் எளிமை, இனிமை மற்றும் உயர்ந்த சிந்தனைகளால் இன்றளவும் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன.
மகாத்மா காந்தியடிகள்

வெண்பா
சத்தியத்தால் மன் அரிச் சந்திரனைத் தண்ணருளால்
புத்தபெரு மானையொத்த புண்ணியனை - உத்தமனாம்
அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு
சிந்தனைசெய் நெஞ்சே தினம்.
வேறு
மெய்யே நெஞ்சில் நாடிடுவார்.
விஞ்சும் பொறுமை போற்றிடுவார்.
வையம் மகிழ அருள் நெறியில்
வாழ்வு கண்டு வாழ்ந்திடுவார்,
தெய்வம் தொழுவார், நடுநீதி
திறம்பா தென்றும் காத்திடுவார்
ஐயமின்றிக் காந்தி மகான்
அன்ப ராவார் அறிவீரே.
-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

நமது பண்பாடு
நீங்கள் கோலம் போட விரும்புகிறீர்களா?

தமிழர்களின் நீண்ட பாரம்பரியத்தின்படி, கோலம் என்பது வெறும் அழகுக்காக வரையப்படும் சித்திரம் மட்டுமல்ல; அது நேர்மறையான ஆற்றலையும், வரவேற்பையும், இயற்கையோடு இயைந்த வாழ்வியலையும் குறிக்கும். தமிழர்களின் நீண்ட பாரம்பரியத்தின்படி, கோலம் என்பது வெறும் அழகுக்காக வரையப்படும் சித்திரம் மட்டுமல்ல; அது நேர்மறையான ஆற்றலையும், வரவேற்பையும், இயற்கையோடு இயைந்த வாழ்வியலையும் குறிக்கும்.
கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.
கோலங்களின் வகைகள்

ஓர் எளிமையான கம்பிக் கோலம்
கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும்.
1. கம்பிக் கோலம்
2. புள்ளிக் கோலம்
கம்பிக் கோலம்
கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும்.
புள்ளிக் கோலம்
புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே:
நேர்ப் புள்ளிகள்
ஊடு புள்ளிகள்
என்று கூறுவர்.
![]() | ![]() | ![]() |
இனி வரும் இதழ்களில் அழகான கோலங்கள் இடம் பெறும்.

உணவே மருந்து
கறிவேப்பிலை குழம்பு

கறிவேப்பிலை குழம்பு என்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான, இரும்புச்சத்து நிறைந்த ஒரு பாரம்பரியமான உணவாகும். இது காரம், புளிப்பு மற்றும் சுவை நிறைந்ததாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10-15 பற்கள்
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் தூள் / சாம்பார் தூள் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 3-4 ஸ்பூன்
சீரகம், மிளகு, வெந்தயம் - தலா 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வதக்குதல்: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, மிளகு மற்றும் சீரகத்தை நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். வதக்கிய கறிவேப்பிலையை மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. குழம்பு தாளித்தல்: கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
3. மசாலா சேர்த்தல்: வதங்கிய வெங்காயத்துடன் குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெயில் லேசாக வதக்கி, கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.
4. கொதிக்க விடுதல்: புளிக்கரைசலின் பச்சை வாசனை போனதும், அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார்.

பாட்டி வைத்தியம்

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய: பாகற்காயின் விதையை அரைத்து பாலுடன் கலந்து அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
இரத்த சோகை மற்றும் அரிப்பு தீர: வேப்பமரத்தின் இலைகளை அரைத்து சிறு உருண்டை சாப்பிட்டுவர இரத்தசோகை மற்றும் அரிப்பு நீங்கும்.
தலைவழுக்கை மாற: ஐந்து கிராம் மிளகையும், ஐந்து கிராம் உப்பையும் எடுத்துக் கொண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்றாக மொழுமொழுவென்று அரைத்துக்கிடைக்கும் விதையை இரவில் பனியில் வைத்து, காலையில் எடுத்து வழுக்கையுள்ள இடத்தில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு ஆறு மாதம் செய்து வர, வழுக்கை மறைந்து முடிவளர ஆரம்பிக்கும்.
வாய்ப்புண் நீங்க: அகத்திக்கீரையை பச்சையாக மென்று தின்றாலே, வாய்புண், தொண்டை வலி நீங்கிவிடும்.
தாய்மார்களின் மசக்கைக்கு: புதினாக் கீரையைக் கழுவி சுத்தம்செய்து புளி வைத்து துவையலாகச் செய்து சாப்பிட்டு வர வாந்தி, மயக்கம் நிற்கும்.
முகப்பருவை போக்க: சாதிக்காய், சந்தனம், மிளகு இம்மூன்றையும் மைய அரைத்து முகத்தில் தடவி வர உடனே குணமாகும்.
வயிற்றுப்போக்கு மாற: வெற்றிலையுடன் சிறிது ஓமம் சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடனே வயிற்றுப்போக்கு நீங்கும்.
பல் ஆட்டம் நிற்க: கடுக்காயைக் கஷாயம் செய்து தினசரி வாய் கொப்பளித்து வரவும்.

படிக்கலாம் வாங்க!
வராக நதிக்கரைக் காதல்

முதல் தலைமுறைக் காதலையும், மூன்றாம் தலைமுறைக் காதலையும் ஒரு வராக நதிக்கரையின் பக்கத்தில் அமைந்திருக்கும் பெரிய குளத்தின் பகுதியின் உலவ விட்டிருக்கிறார் நாவலாசிரியை. அன்பும், தியாகமும், தேசபக்தியும் கலந்த ஒரு நவீனக் காதல் கதை. கதையின் நாயகன் செண்பகராமன் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கிறான் என்பதை சுதந்திரப் போராட்டப் பின்னணியில் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.இயற்கை விவசாயம் குறித்தும், நாவலாசிரியை பேசுகிறார். இயற்கை விவசாயத்துக்கு உடனே நாம் மாற வேண்டும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயப் போராளிகள் நமக்கு அந்த வழியை ஏற்கனவே சொல்லிச் சென்றிருக்கின்றனர். நம் பாரம்பரியங்களை எல்லாம் மெல்ல மெல்லத் தொலைத்துவிட்டு, நாம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல சிக்கல்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறோம்.இயற்கைக்கு மாறான பல செயல்களைச் செய்து, செயற்கை குடிலுக்குள் நம்மை அமர்த்திக் கொண்டு இருக்கிறோம். நீர், நிலம், காற்று, உணவு என, மனிதன் உயிர் வாழத் தேவையான உயிர்க்கூறுகள் யாவும் ரசாயனக் கலப்பாகி வரும் நிலையில், இயற்கை விவசாய ஆர்வலர்கள் பலரும் பாரம்பரியத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். நம்மை மீட்டெடுக்க வேண்டும் என்றால், மீண்டும் பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்ப வேண்டியது மிகவும் அத்யாவசியம் என்கிறார்.– எஸ்.குரு
Rs. 140/-
முனைவர் மோகனா சுகதேவ்
உலகத் தமிழ் செய்திகள் | Global Tamil News
Both Nov 1, July 18 to be celebrated as Tamil Nadu Day 18 July 2026 In a bid to end the debate over the state’s foundation date, Chief Minister C Joseph Vijay announced that the government will celebrate Tamil Nadu Day on both November 1 and July 18. November 1 marks the 1956 creation of Madras State under the States Reorganisation Act, while July 18 honors the historic 1967 Assembly resolution moved by former Chief Minister C N Annadurai to change the state’s name to Tamil Nadu. |
தமிழ்நாடு நாள்: ஜூலை -18 ம் தேதி கொண்டாடப்பட வரலாற்றுக் காரணம் இதுதான்! 17 July 2026 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த நாளையே இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் இன்று ஜூலை 18-ஐ நாம் தமிழ்நாடு நாளென தொடர்ந்து 2வது வருடமாக கொண்டாட காரணமென்ன? சமீபத்தில் தமிழகம் - தமிழ்நாடு என மாநிலத்தின் பெயரில் அனல் பறக்கும் விவாதங்கள் ஆளுநருக்கும் முதல்வருக்கும் நடைபெற்றது என்பது நாடே அறியும். |
FeTNA 2026 — The Grand Tamil Convention Is Coming to New Jersey! 2 July 2026 The Federation of Tamil Sangams of North America (FeTNA) hosted its 39th Annual Tamil Convention from July 2–4, 2026, at the New Jersey Convention and Exposition Center, Edison, NJ — North America's largest Tamil cultural gathering. The convention was themed around two historic milestones: the 1,000th anniversary of Raja Raja Cholan's 'Kadaram' conquest and the 150th birth anniversary of Maraimalai Adigal, pioneer of the Pure Tamil movement. Events included classical dance and music performances, youth leadership forums, literary discussions, and community recognition programmes, drawing thousands of Tamil diaspora members from across the continent. |
பூந்தளிர் – Poonthalir
இந்த சிறுவர் பகுதியை திரு. கௌரிசங்கர் வடிவமைத்திருக்கிறார்.
This children's section has been designed by Mr. Gowrishankar.
01
தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி – Tamil – Tamil – English Dictionary
இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகளுக்கு சமமான அர்த்தங்கள் தரும் வேறு தமிழ் வார்த்தைகளை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த பயிற்சி உதவும். (In order to learn synonyms and the meaning in English, this section helps you learn five Tamil words, their Tamil synonyms and the English words equivalent in meaning.)
எண் S.No. | தமிழ் வார்த்தை Tamil Word | சமமான தமிழ் வார்த்தை Synonym | சமமான ஆங்கில வார்த்தை - Meaning in English |
1. | அபகீர்த்தி (Apakeerthi) | இகழ்ச்சி (Igazhchi) | Degradation |
2. | அபிலாசை (Abilaasai) | விருப்பம் (Viruppam) | Desire |
3. | அபிநயம் (Abinayam) | கூத்து (Koothu) | A dance movement |
4. | அபூர்வம் (Apoorvam) | அரியது (Ariyathu) | Rare |
5. | அபவாதம்(Apavatham) | பழிச்சொல் (Pazhichchol) | Defamatory word |
02
எதிர்பதங்கள் – Opposites
இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான எதிர்ப்பதங்களையும், அதற்கு ஈடான ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். (To learn the antonyms, five Tamil words, their meaning in English, Tamil words having opposite meaning for them and the equivalent English words for the opposite Tamil words have been provided here.)
எண் S.No. | தமிழ் வார்த்தை Tamil Word | Equivalent English word | தமிழில் எதிர்ப்பத வார்த்தை Opposite Tamil Word | Equivalent opposite English word |
1. | தைரியசாலி (Thairisali) | Courageous | கோழை (Kozhai) | Cowardice |
2. | அல்லல் (Allal) | Pain | இன்பம் (Inbam) | Happiness |
3. | இரவு (Iravu) | Night | பகல் (Pagal) | Day |
4. | சமதளம் (Samathalam) | Flat surface | கரடுமுரடான (Karadumuradana) | Rugged |
5. | சுத்தம் (Sutham) | Clean | அசுத்தம் (Asutham) | Dirty |
03
சொல்வகை - Match the words
இங்கு பதினாறு சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகைப்படுத்துங்கள். ஒரு வகைக்கு நான்கு சொற்கள். எனவே நான்கு வகைகள் கிடைக்கும். (இந்த பயிற்சி உங்களுடைய சொற்களை வகைப்படுத்தும் திறமையை வளர்க்கும்) Sixteen Tamil words are provided here. Arrange them according to the following four categories (Four words per category).
உருவாக்கப்படவேண்டிய வகைகள் - Categories to be formulated
காய்கறி வகைகள் (Vegetables)
| பழ வகைகள் (Varieties of fruits) | சமையல் பொருட்கள் (Varieties of kitchen items)
| வீட்டு உபகரணங்கள் (Household equipments)
|
பதினாறு சொற்கள்
மாதுளை (Pomegranate) | வெண்டைக்காய் (Lady’s finger) | கடுகு (Mustard) | நாற்காலி (Chair) |
மிளகு (Pepper) | ஆப்பிள் (Apple) | அலமாரி (Wardrobe) | மிளகாய் (Chilli) |
கட்டில் (Cot) | வெந்தயம் (Fenugreek) | பூசணிக்காய் (Pumpkin) | ஆரஞ்சு(Orange) |
அவரைக்காய் (Hyacinth beans) | மேசை (Table) | வாழைப்பழம் (Banana) | சீரகம் (Cumin) |
04
தமிழ் விடுகதைகள் – Tamil Riddles
01. நான் நடக்க மாட்டேன் - ஆனால் மனிதர்களை நடமாடச்செய்வேன் - நான் யார் ?
I never walk, however, I enable people make moves. Who I am ?
02. மழையோடு வருமாம் ஒரு மஞ்சள் புறா - அதை வெட்டினால் சொட்டு ரத்தம் கிடைக்காது - அது என்ன ?
The yellow pigeon arrives during rain, however, there is no blood when the pigeon is cut. Who is it ?
03.. நாம் கட்டளையிட்ட நேரத்திற்கு தொண்டை கிழிய கத்துவான் - யார் அவன் ?
As instructed by us, he will shout again and again till we stop. Who is he ?
04.. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் - அது என்ன ?
He is the judge who does not have a soul, however, he has the habit of pronouncing perfect judgment. Who is he ?
05. இளமையில் பச்சை - முதுமையில் சிகப்பு - குணத்தில் காரம் - யார் அது ?
He looks green during childhood and red once grown up. He is always rough and tough irrespective of his age. Who is he ?
05
மூளைக்கு வேலை
கீழ்க்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டு இங்கு கொடுக்கப்பட்ட வெளிர் (வெள்ளை) கட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அணைத்து வார்த்தைகளும் "உ" என்ற எழுத்தில் தான் தொடங்குகின்றன. வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளின் அருகில் தரப்பட்டுள்ளன. The meanings for the words are provided in English alongside Tamil words.
01. அணிந்து கொள் (Dressing)
02. ஆகாரம் (A meal)
03. தோற்றம் (Dawn))
04. கோபம் (Angry)
05. துணைக்கருவி (Supporting instrument)
06. தொல்லை (Nuisance)
உ | 2 | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
3 | |||||||||
4 | |||||||||
5 | |||||||||
6 | |||||||||
7 |
06
ஆவுரிஞ்சு கல்
(தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்)
ஆவுரிஞ்சு கல் என்பது ஒரு கல்லை குறிக்கும். ஏரி. குளம், கண்மாய் போன்ற நீர் நிறைந்த இடங்களின் அருகே ஒரு மரத்தடியில் ஒரு செங்குத்தான கல்லை நட்டி வைத்திருப்பார்கள். அந்த நீர் நிலைகளில் நீர் அருந்துவதற்கு வருகின்ற கால்நடைகள் - மாடுகள், ஆடுகள் போன்றவை - நீரை அருந்திவிட்டு மரத்தடியில் இளைப்பாறுவதற்கு முன்பாக அந்தக்கல்லில் தங்கள் உடம்பினை தேய்த்து உரசி இன்புறுமாம்.
ஆவுரிஞ்சு கல் என்பதனை ஆதீண்டு குற்றி என்றும் சொல்லுவார்கள். ஆ - என்பது பசுவை குறிக்கும்; தீண்டு என்பது உரசல்; குற்றி என்பது கல். முந்தைய காலங்களில், வீடுகளுக்கு பால் தரும் பசுக்களை தெய்வமாக வழிபாட்டு வந்தார்கள் நமது முன்னோர்கள். அவற்றின் உடல் வாதையை மனதில் கொண்டு இந்த மாதிரி ஒரு ஏற்பாட்டைச்செய்து வைத்திருந்தார்கள்.
இன்றும் இது போன்ற கற்களை சில கிராமங்களில் இருக்கும் பழங்காலத்து நீர் நிலைகளின் அருகில் நாம் காணலாம்.
07
உலக கால்பந்து போட்டி

தற்போது நடந்து முடிந்த 2026 உலகக் கால்பந்து போட்டியில் உதை பட்டுக் கொண்டு இருந்த பந்து இதுவரை நாம் பார்த்துக்கொண்டு இருந்த, விளையாடிய மற்றும் தெரிந்து கொண்டு இருந்த பந்து அல்ல. 2026 உலக கால் பந்து போட்டியில் பயன்பாட்டில் இருந்த பந்து பலவகைகளில் வித்தியாசமானது.
இதை நாம் ஒரு அறிவியல் அதிசயம் என்றும் சொல்லலாம். அப்படி என்ன அதிசயிக்கத்தக்க விஷயங்கள் இந்த பந்தில் அடங்கியிருக்கின்றன?
உலக கால்பந்து போட்டிகளில் இடம்பெறும் பந்துக்கு பல சிறப்பம்சங்கள் உண்டு. ஒவ்வொரு உலககோப்பைபோட்டியின் போதும் அதற்கென்று பந்துகள் வித்தியாசமாக வடிவமைக்கப்படும். பந்துகள் தனித்துவம் பெற்றதாக இருக்கும்.
தற்போது முடிவடைந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்துவின் பெயர் "ட்ரையோண்டா". கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நடத்திய போட்டி என்பதைக்குறிக்கும் வகையில் மூன்று அலைகள் என்று பொருள் படும் ஸ்பானிஷ் வார்த்தையான "ட்ரையோண்டா" என்ற பெயர் சூட்டப்பட்டது.
பந்தில் காணப்படும் பச்சை நிறம் மெக்சிகோவையும், நீல நிறம் அமெரிக்காயும் , சிவப்பு நிறம் கனடாவையும் குறிக்கின்றன. அந்த நாடுகளை அடையாளப்படுத்தும் விதமாக கழுகு (அமேரிக்கா) நட்சத்திரம் (மெக்சிகோ) மேப்பிள் இலை (கனடா) ஆகியவை அந்த பந்தில் பொறிக்கப்பட்டு இருந்தன.
தங்கத்தால் ஆன சாம்பியன் கோப்பையைப் பிரதிபலிக்கும் விதத்தில் பந்தின் வடிவமைப்பிலும் தங்க நிறம் இழையோடுகிறது. இதுவரை பயன்படுத்தப்பட்ட பந்துகளில் இது தான் மிகவும் குறைந்த பகுதிகளைக்கொண்டது. "டெட்ரா ஹெட்ராஸ்" வடிவத்தில் நான்கு பகுதிகள் உருவாக்கப்பட்டு அவற்றை ஒன்றிணைத்து பந்து வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பந்து பாலியூர்தீனால் (Polyurethane) தையல் இல்லாமல் ஹீட் டெக்னாலஜி மூலம் பந்தின் வெளிப்புறம் நான்கு பேனல்களால் ஒட்டப்பட்டது.
விளையாடும்போது மழை பெய்தால் பந்து நீரை உறிஞ்சாது. Gripping அப்படியே இருக்கும். அதற்குக் காரணம் பந்தின் உள்ளே Polyester, EVA எனப்படும் ஸ்பான்ஜ் அடுக்குகளும், Butyl Rubber தயாரிப்பிலான காற்றுப்பையும் இருப்பது தான்.
மேலும் பந்தின் உள்ளே Connected Ball Technology தொழில் நுட்பம் இருப்பதால் IMU என்கிற Sensor உதவியால் பந்தின் வேகம், சுழற்சி, அது பயணிக்கும் இடத்தை துல்லியமாக கணக்கிட முடியும்.
பந்து ஒரு வீரரின் காலில் பட்டு, கோல் போஸ்ட்டை நெருங்கும் போது, Offside சந்தேகம் வந்தால் அந்த தகவல் அதே நொடி VAR எனப்படும் மூன்றாவது நடுவரான Video Assistant Referee அறைக்கு சென்று விடும். தவறான முடிவுக்கு வாய்ப்பேயில்லை.
இந்த பந்தின் எடை 410 கிராமிலிருந்து 450 கிராம். கிட்டத்தட்ட அரை கிலோகிராம் எடை கொண்டது. பல நாடுகளில் பந்துகள் தயாரிக்கப் பட்டாலும் பாகிஸ்தான் சியால்கோட்டில் ஃபார்வேட் ஸ்போர்ட்ஸ் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட கால்பந்துகள் தான் இந்தப் போட்டியில் இடம் பெற்றன என்பது கூடுதல் தகவல்.
08
இந்திய ரயில் - சிறப்பம்சங்கள்

உலகத்திலேயே மிகவும் அதிகமான அளவில் ரயில்கள் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு தனிப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில் நிர்வாகம் உலகிலேயே இந்தியாவில் தான் இருக்கிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 67500 கிலோமீட்டர்கள் தூரம் வரை ரயில் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு நாளைக்கு 13529 ரயில்கள் இந்தியாவில் இயக்கப்படுகின்றன. இவற்றில் அதிக தூரம் வரை பயணிக்கும் ரயில்கள் மற்றும் குறைந்த தூரம் வரை பயணிக்கும் ரயில்கள் அனைத்தும் அடங்கும்.
மேலே சொல்லப்பட்ட பயணிகள் ரயில்கள் மட்டும் அல்லாது 9146 சரக்கு ரயில்களும் தினமும் இயக்கப்படுகின்றன.
1832ம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவில் ரயில்களை பயன்படுத்தி பயணங்கள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. ஆனால் 1853ம் ஆண்டில் தான் முதல் ரயில் பயணம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முதல் ரயில் பயணம் மும்பை - தானே வழித்தடத்தில் நடத்தப்பட்டது. பலவிதமான ரயில் பயணங்கள் மேற்கொள்ளுவதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட 16 லட்சம் ஊழியர்கள் பணி புரியும் இந்திய ரயில் நிர்வாகம் தான் உலகிலேயே அதிக அளவில் ஊழியர்களை கொண்ட நிர்வாகமாகும்.
இந்திய ரயில் அமைப்பின் சில சிறப்பம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
01. சிக்னல் விளக்கு ஒன்றை ஏந்தி பிடித்துக்கொண்டிருக்கும் ஒரு யானை பொம்மை தான் இந்திய ரயில் நிர்வாகத்தின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
02. தினமும் இந்தியாவில் ரயில்கள் கடந்து செல்லும் தூரம் பூமியிலிருந்து சந்திரன் வரையுள்ள தூரத்தை விட மூன்றரை மடங்கு அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பூமியிலிருந்து சந்திரன் வரையுள்ள தூரம் 384400 கிலோமீட்டர்.
03. தினமும் 25 மில்லியன் பயணிகள், இந்தியாவில் ரயில் பயணம் மேற்கொள்ளுகிறார்கள்.
04. 1986ம் ஆண்டு முதல் கம்யூட்டர் மூலம் முன்பதிவு செய்த பயண சீட்டுகள் வழங்கத்தொடங்கினார்கள். இந்த முறை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தொடங்கப்பட்டது.
05. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டியை இணைக்கும் மலை ரயில் தான் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லும் ரயில் என்று கருதப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு 10 கிலோமீட்டர் தான்.
06. உலகிலேயே மிகவும் அதிக நீளமான ரயில் நடைமேடை உள்ள ரயில் நிலையம் உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கோரக்பூர் ரயில் நிலையமாகும்.
07. உலகிலேயே அதிக உயரத்தில் கட்டப்பட்ட ரயில் மேம்பாலம் காஷ்மீரை செனாப் என்ற நகரத்துடன் இணைக்கும் மேம்பாலம் தான்.
08. இந்தியாவில் 7500க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் உள்ளன.
09. ஐந்து மிகவும் சொகுசு வாய்ந்த ரயில்கள் இந்திய ரயில் நிர்வாகத்திடம் உள்ளது. இவற்றில் பலவிதமான வசதிகள் உள்ளன. பயணக்கட்டணம் சில சொகுசு ரயில்களில் விமான கட்டணத்திற்கும் கூடுதலாக இருக்கும்.
10. இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் அமைந்திருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் உலகிலேயே அதிகமான இன்டர்லாக் சிஸ்டம் கொண்ட ரயில் நிலையம் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசகர் பக்கம் | Readers' Corner

மதங்களை கடந்தது மனிதம்
அந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களுக்கு அந்த சிறுவனின் அழுகை சோகமயமாக்கியது. எட்டு வயதான சிறுவனின் பெயர் நரேன்..
ராமனும், சீதாவும் ரொம்ப வருடமாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள்.
அவர்கள் வீட்டிற்கு அருகில், ரஹீம் பாய் அவர்கள் குடும்பமும் இருந்தது.
ராமனும், ரஹீம் பாயும் நல்ல நண்பர்கள். வெளியே டீ கடையில் தினம் சந்திப்பவர்கள். இருவருக்குள்ளும் நல்ல புரிதலும் நட்பும் இருந்தது.
ஒருவாரமாக நண்பரை காணாமல் டீ கடையில் கேட்க, அவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்றார்கள். ஏதேனும் உதவி தேவை படலாம் என்று அவர் வீடு இருக்கும் இடம் கேட்டு தேடி போனார்.
அங்கே.. .. ..
ரஹீம் பாய் மனைவி பிரசவத்தில் இறந்து விட்டாள். குழந்தை வேறு குறைபாடோடு பிறந்திருந்தது.
ரஹீம் பாய்க்கும் உடல் நலம் சரிஇல்லை. மருத்துவர்கள் புற்றுநோய் அறிகுறி தெரிவதாகவும் அதற்கான பரிசோதனை செய்யும்படியும் எழுதி கொடுத்தார்கள்.
ரஹீம்பாய் மனைவி போன வருத்தத்தில், பிறந்த குழந்தை வைத்து கொண்டு மிகவும் கஷ்டபட்டார்.
தன்னை பார்க்க வந்த நண்பனிடம் ரஹீம், “நண்பா! எனக்கு ஒரு உதவி செய்.
என் குழந்தையை வளர்த்து ஆளாக்குங்கள். குழந்தைக்கு குறைபாடு இருக்கு னு மருத்துவர்கள் சொன்னார்கள். எனக்கு உடம்பு சரி இல்லை என்னுடைய ஆயுள் முடியுது. நானும் அல்லாவிடம் போய்விடுவேன். அங்கே என் மனைவி காத்திருக்கிறாள்” என்றார்.
“அப்படி சொல்லாதே ரஹீம்! உன் குழந்தையை நான் வளர்க்கிறேன் அவன் எப்படி இருந்தாலும்” என்றார் ராமன்.
“நீ வா! நான் மருத்துவரிடம் அழைத்து போகிறேன்” என்றார்.
“இல்லை, என்னை இப்படியே விட்டு விடு. நான் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு போகிறேன் அங்கே பார்த்துக்கொள்வார்கள். நீ இனிமே என்னை சந்திக்க வராதே.
நீ குழந்தையை எடுத்து செல். இதில் அவன் பிறந்த நேரம் மற்ற விவரங்கள் இருக்கு.” என்று ஆஸ்பத்திரியில் குடுத்த விவரங்களை கொடுத்தார் ரஹீம்.
“இல்லை, நான் கூட வருகிறேன்” என்றதும், “வேண்டாம் நண்பா! உன்னோட கவனம் குழந்தை மீது இருக்கட்டும்” என்றார் ரஹீம். அவருக்கு தெரியும் தன் மரணம் தன் நண்பன் தாங்க மாட்டான் என்று.
வீட்டிற்கு குழந்தை எடுத்து வந்து,குழந்தைக்கு நரேன் என்று பெயர் வைத்து மிகவும் சந்தோஷமாக வளர்த்தனர்.
நரேனும் நன்றாக வளர்ந்து வரும்போது தெரிந்தது மனவளர்ச்சி குறைபாடு உள்ளவன் என்று. அதற்காக வீட்டிலேயே அடைத்து வைக்காமல் வெளியே தான் போகும் இடங்களுக்கு அழைத்து சென்றனர்.
அன்று, நண்பர் வீட்டு விசேஷத்துக்கு கிளம்பும் போது தான் இப்படி சத்தமாக அழுது கொண்டு, அவனை ஆறுதல் படுத்த முயன்ற அம்மா அப்பாவை அடித்துக் கொண்டிருந்தான்.
கையில் கிடைத்த பொருட்களை மற்றவர்கள் மேலும் வீசினான். அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சிலர் ” பரவாயில்லைங்க ” என்று சொன்னார்கள். சிலர் கோவப்பட்டார்கள்.
“பையனை வீட்டுல விட்டு வந்திருக்கலாமே சார் ” கூட்டத்தில் `ஒருவர் கேட்டார்.
” எப்பவும் சாதுவா இருப்பான், சில சமயம் இந்த மாதிரி நடந்துக்கறான்.”
“இந்த மாதிரி குழந்தைங்களை வளக்கறதுக்கு ரொம்ப பொறுமை வேணும்ல. உங்களை தான் பாராட்டணும் ராமன்!”
“பொறுமையா இருந்தா தான் சமாளிக்க முடியும். வேற வழி இல்ல” என்றார் ராமன்.
“கடவுள் ஏன் தான் இப்படி குறையோட குழந்தைகளை படைக்கிறான். வருத்தமா இருக்கு” என்றார் ஒருவர்.
“அப்படி சொல்லாதீங்க. என்ன பெரிய குறை ? இவங்க குழந்தைங்க . நமக்கு கொஞ்ச வருசத்துல குழந்தைப் பருவம் முடிஞ்சுடும் . இவங்க ஆயுசு முழுக்க குழந்தைங்க. அவ்வளவு தானே?” என்றார் ராமன்.
"நரேன் ரொம்ப கொடுத்து வச்சவன் இப்படி அப்பா அம்மா கிடைத்ததற்கு”
என்றார் நண்பர்.
அதோடு “இன்னொரு குழந்தை பெற்றுகொள்ளுங்கள். இரண்டும் சேர்ந்து வளரும் போது இவனும் சரியாக வாய்ப்பிருக்கு” என்றார் அவர்.
அதற்கு ராமன், “எங்களுக்கு தான் குழந்தை பாக்கியமே இல்லையே!!!”
"அப்போ நரேன் உங்க குழந்தை இல்லியா???”
“இல்லை, இவன் நான் தத்தெடுத்தவன். என் நண்பர் ரஹீம் குழந்தை. பெற்றவர்களை பறிகொடுத்த குழந்தை. நான் தத்தெடுத்து வளர்க்கிறேன்”
என்றார் ராமன்.
“என்ன ராமன் சொல்றீங்க? நரேன் உங்க சொந்த மகன் இல்லியா?”
“இல்ல சார்! எங்களுக்கு அஞ்சாறு வருஷமா குழந்தையே இல்லை.
அப்போ என் நண்பனுக்கு குழந்தை பிறந்தபோது அவன் மனைவி பிரசவத்தில் இறந்து விட்டாள். அவனும் புற்றுநோய் வந்து போய்விட்டான். அவர்கள் குழந்தை தான் நாங்கள் தத்தெடுத்து வளர்க்கிறோம். எங்கள் உறவினர்களுக்கு இது பிடிக்கவில்லை. வேற்று மதம், குறைபாடு உள்ள குழந்தை என்று எங்களுடன் உறவை வெட்டிவிட்டனர்.
குறைபாடுள்ள ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது வெறும் வளர்ப்பு முறை அல்ல; அது மனித நேயத்தின் ஆகச்சிறந்த, உன்னதமான வடிவம். பொதுவா குழந்தைகள் அனைவருக்கும் அன்பு, பாதுகாப்பு மற்றும் ஒரு நல்ல குடும்பம் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அது இன்னும் சற்றே கூடுதலாகத் தேவைப்படுகிறது. நீங்கள் நண்பராக கிடைத்தது என் பாக்கியம்” என்றார்.
“ஒரு சாதாரண குழந்தையை வளர்ப்பதை விட, குறைபாடுள்ள குழந்தையை வளர்ப்பதற்கு அசாத்தியமான பொறுமை, மனவலிமை மற்றும் மருத்துவக் கவனிப்பு தேவைப்படும்.” என்றார் நண்பர்.
“உண்மைதான்! இதையெல்லாம் ஒரு சுமையாகக் கருதாமல், கடமையாகச் செய்யும் போது அது தெய்வீகமாக மாறுகிறது” என்றார் ராமன்.
எங்கோ ஆதரவற்றோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு குழந்தைக்கு, ஒரு குடும்பத்தின் அன்பு கிடைக்கும் போது அக்குழந்தையின் சுயவிசுவாசம் பல மடங்கு உயர்கிறது.
அன்பும், சரியான வழிகாட்டுதலும் கிடைத்தால் அத்தகைய குழந்தைகள் கலை, விளையாட்டு, கல்வி எனப் பல துறைகளில் சாதனையாளர்களாக உருவெடுக்கிறார்கள்.
"அன்பிற்கு அரவணைப்பைத் தவிர வேறு எந்த எல்லையும் இல்லை."
நண்பர் கண்களில் கண்ணீர். “இப்படி ஒரு குழந்தை வளர்க்க உண்மையில் உங்களை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. நரேன் ரொம்ப புண்ணியம் செய்திருக்கான்” என்றார் நண்பர்.
“இவன் எங்கள் உயிர், இவன் கிடைக்க நாங்கள் தான் புண்ணியம் பண்ணிருக்கணும்” என்றார் ராமன்.
இவர்கள் பேசும் போது கொஞ்சம் கொஞ்சமா சாந்தமாகி நண்பரை பார்த்து ரொம்ப அழகா சிரித்தான் நரேன்.
அந்த கள்ளங்கபடமில்லா சிரிப்பில் நெகிழ்ந்துபோனார் நண்பர்.
“மாமாக்கு வணக்கம் சொல்லு.” என்றதும் அழகா சிரித்துக்கொண்டே கைகூப்பி “நமஸ்காரம் மாமா!” என்றான் மழலை வார்த்தைகளில். நண்பர் கண்களில் ஆனந்த கண்ணீர். அந்த மழலை குரல் அவர் உள்ளம்வரை ஊடுருவியது. தன் நண்பனின் "மதங்களை தாண்டி மனிதநேயம்" நினைத்து | ![]() |
காலக்கொடுமை

இளைஞர் உலகம் - இயந்திர உலகம் (மாலுமி)

அண்ணா ராகவ் படுக்கையில் சாய்ந்த வண்ணம் தனது ஸ்மார்ட் போனில் தங்கையுடன் சாட் செய்து கொண்டு இருந்தான்.
“இன்னைக்கு எங்க ப்ரொபசர் வந்தார் அண்ணா, ஆனால் பாடம் ஒண்ணுமே நடக்கலை. அவர் வொய்ஃப் போனை மாத்தி எடுத்து வந்துவிட்டார். இரண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை போன். அதுவும் ஸ்பீக்கர் போனில் இருந்து மாற்றவும் தெரியலை. எல்லாத்துக்கும் ஹைலைட் என்னன்னா ... ஒரு அம்மா ‘உன்னோட அன்பு மைசூர் போண்டா இன்னிக்கு வெட்டிங் ஆனிவர்சரிக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வருவாரு?’ன்னு கேக்கறாங்க. அது அவர்தான்னு அவருக்கு புரியக்கூட இல்லை. சரியான அப்பாவி”.
“உங்க காலேஜ்ல படிப்பை தவிர எல்லாம் பண்ணுவீங்க போலிருக்கு”.
கீழேயிருந்து அம்மாவின் குரல் கேட்டது. "ராகவ், வித்யா ரெண்டு பேரும் கீழே சாப்பிட வாங்க, அப்பா வந்தாச்சு".
இருவரும் அதே வீட்டின் முதல் மாடியின் வெவ்வேறு அறைகளில் இருந்து, கைகளில் ஸ்மார்ட் போனோடு, படிகளில் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தவாறு, இறங்கி வந்து கொண்டிருந்தனர். இளைய தலைமுறை செல்கின்ற திசை புரிபடாமல் திகைத்து நின்ற அப்பாவுக்கு, அம்மாவின் ஆணை ஆறுதல் அளித்தது.
“இனிமேல் உங்களுக்கு வீட்டில் அவசிய தேவைக்கு மட்டும்தான் போன். அப்பாவோட லைப்ரரில, பக்கத்தில் இருக்கிற நூலகத்திலிருந்து புத்தகத்தையெடுத்து படிங்க. இன்னும் புஸ்தகங்கள் வாங்கி வாங்க. உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம்தான் வாழ்கைக்கு முக்கியம். புரிஞ்சுதா?” | ![]() |
சிரிக்கலாம், வாங்க!

![]() |
காகமும், கிளியும்

தான் மிகவும் கருப்பாக அழகில்லாமல் இருப்பதாக வருத்தப்பட்டுக்கொண்டிருந்தது காகம் , | அழகான கலரான கிளியை கூண்டில் பார்க்கும் வரை. | ![]() |
ஓவியம்

ஓவியம்

ஓவியம்

ஓவியம்

ஓவியம்

ஓவியம்

ஐரோப்பா பயணம் போகலாமா? (பகுதி.4)
ஐரோப்பா பயணம் போகலாமா?
(பகுதி.4)

இந்திய உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு ‘Illumination of Eiffel Tower’ பார்க்கக் கிளம்பினோம். இதற்கு தனிப் பேருந்து. எங்கள் ஓட்டுநர் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது. அத்தோடு எங்கள் பேருந்தை அந்த இடத்தில் நிறுத்த அனுமதி இல்லை என்று சொன்னார்கள்.
காலநிலையைப் பொறுத்து இருட்டும்போது ஈபிள் கோபுரத்தின் எல்லாத் தளங்களிலும் பளீரென்று விளக்குகள் எரிகின்றன. தங்கத்தால் வடித்தது போல் ஈபிள் டவர் தகதகக்கிறது. 20,000 பல்புகளின் ஒளியில் ஜொலிக்கின்றது. அந்த இடத்திலிருந்து பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய்க் குவிகிறார்கள்.
அங்கே ஒரு இளைஞன் பஞ்சாபி பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தான். எங்கள் குழு ஜெய்ஸ்ரீ (வந்ததிலேயே அவள் தான் சின்னப்பெண்) செமயா ஆடினாள். அதைப்பார்த்து எல்லாருக்கும் உற்சாகம். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான்.
ஆப்பிரிக்கத் தம்பிகள் நம் பாண்டி பஜார் மாதிரி ஒரு ஷீட் விரித்து கூவிக் கூவி மினியேச்சர் ஈபிள் டவர்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஃபிரிட்ஜில் ஒட்டும் மேக்னெட் பேரம் பேசிக் கொண்டிருக்கும்போதே பரபரவென்று கடையைச் சுருட்டினான். காசு குடுக்க அவசரப்படுத்தினான். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே ‘One more euro’ என்று நச்சரித்தான். கொடுத்து முடிப்பதற்குள் ஆளைக் காணோம். போலீஸ் தலை தெரிந்ததும் ஓடி விட்டான். அந்த ஊர் போலீஸீக்கு மாமுல்னா என்னான்னு தெரியாது போல,
மிகச்சரியாக ஒன்பது மணி ஆனதும் ஒரே உற்சாகக் கூச்சல். இப்போது தங்கப்பெண்ணின் உடல் முழுக்க அக்னி நட்சத்திரங்கள். ஐந்து நிமிடங்கள் ஒரு மாய உலகத்தில் இருப்பது போன்ற தோற்றம். பளிச் பளிச்சென்று நட்சத்திரங்களாய் அந்த உலோக கோபுரம் மின்னிய நிமிடங்கள் மறக்க முடியாதது. தொலைதொடர்புக்காக அன்று கட்டியது, ஒரு நாட்டின் பெருமையாய், பெருமிதமாய், கம்பீரமாய் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றது.
‘பொன்மகள் வந்தாள்’ பாட்டு நினைவுக்கு வர, தங்க விண்மீன்கள் விடைபெற்றதும் அங்கிருந்து கிளம்பினோம்.
அன்று இரவு மீண்டும் நல்ல தூக்கம். காலை க்ரொசான்ட், பிரட், இத்யாதி.
அறையைக் காலி செய்து லக்கேஜூடன் பேருந்தில் ஏறினோம். ஒவ்வொரு முறையும் பஸ் கிளம்பும் முன், ரமேஷ் ஒரு கணபதி சுலோகம். நவீன் வெங்கடேசப் பெருமாளை அழைப்பார். கோரஸான வேண்டுதலோடு பாரீஸூக்குத் தென்மேற்கே 18 கி,மீ, தொலைவில் உள்ள Versailles அரண்மனையை நோக்கிப் புறப்பட்டோம்.
Versailles Palace

யுனஸ்கோவின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் இந்த அரண்மனை 17வது நூற்றாண்டின் பிரெஞ்சு கலாச்சாரத்தின் தலைசிறந்த சின்னமாக விளங்குகிறது. பதினான்காம் லூயி அவர்களால் கி,பி,1623 ல் வேட்டையாடத் தங்குமிடமாகக் கட்டப்பட்டு அதன் பின்னர் கி.பி.1661ல் அரண்மனையாக மாற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற ஆண்டான கி.பி.1710 வரை அரண்மனையாகத் திகழ்ந்துள்ளது. இந்த அரண்மனை பற்றிய விபரங்களை நவீன் சுருக்கமாக விளக்கியபின், ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் படலம் ஆரம்பமானது.
பேருந்தின் முன்பகுதியிலிருந்த மைக்கில் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பைச் சொன்னார்கள். பெரும்பாலும் அவரவர் மகன் அல்லது மகளின் தூண்டுதலால் அவர்களே பணம் கட்டி பெற்றவர்களை உலகம் சுற்றிப் பார்க்க அனுப்பியிருந்தார்கள். ஸ்ரீ ஜானகி் டூர்ஸ் பற்றித் தாங்கள் யார் முலம் கெள்விப் பட்டோம் என்பதைச் சொன்னார்கள்.
திருமதி சித்ரா தனது ஐம்பதாவது பிறந்த நாள் வரவிருப்பதாகவும், திருமதி. ஜெய்ஸ்ரீ தனது அறுபதாவது பிறந்த நாள் வரவிருப்பதாகவும் அதற்காகவே இப்பயணம் மேற்கொண்டதாகச் சொன்னார்கள். இருவருக்கும் அனைவரது சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இந்த அறிமுகம், ஒவ்வொருவரைப் பற்றியும் அனைவரும் அறிந்துகொள்ள வசதியாக இருந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் நெருக்கம் ஏற்பட்டது.
அறிமுகப் படலம் முடிவதற்குள் அரண்மனை வந்து விட்டது. ஏற்கனவே அனைவரது பாஸ்போர்ட் எண்களை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்து விட்டார்கள்.
இறங்கியுவடன் முந்தைய தினம் சிட்டி டூருக்கு வந்த இர்னியும் மற்றொரு பிரெஞ்சு வழிகாட்டியும் தயாராக இருந்தார்கள். எங்கள் எல்லாரது கழுத்திலும், காதிலும் உபகரணங்களை மாட்டிக் கொண்டோம். அந்த வழிகாட்டி அவரது மைக்கில் பேசுவது எங்கள் ஹெட்செட்டில் கேட்கும். எங்கள் வழிகாட்டி பரபரவென்று சொல்லிக்கொண்டே போனார். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்த அவரையும் விடாமல் அவர் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டே அங்கிருந்த சித்திரங்களையும், சிலைகளையும் பார்த்தோம். ஒவ்வொன்றும் அற்புதமாக, ரசிக்கும் வண்ணம் இருந்தது. ஹெட்செட் நழுவினாலோ, வழிகாட்டி குறிப்பிட்ட தூரம் விட்டு விலகினாலோ எதுவும் கேட்காது. இதுல புகைப்படங்கள் எடுக்க வேறு நின்று விடுவோம். தலையில் ஜானகி டூர்ஸ் நீலத்தொப்பியைக் கழற்றாமல் இருந்ததால் குழுவினரை அடையாளம் காண முடிந்தது.
திறந்திருக்கும் நேரம் திங்கங்கிழமை தவிர காலை 9.00 முதல் மாலை 5.30 வரை. ஆன்லைனில் முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
கண்டு ரசித்தவை :
கண்ணாடி அரங்கம். 357 கண்ணாடிகளைக் கொண்ட கண்கவர் கலைக்கூடம்.அடுத்து, அரசர் மற்றும் அரசிக்கான பிரம்மாண்டமான கலைக்கூடங்கள். கலைநயம் மிக்க படுக்கை அறைகள், அரசரைச் சந்திக்க வரும் விருந்தினர்களுடன் அளவளாவும் பிரம்மாண்ட வளாகம்.
இவற்றை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மேலேயுள்ள வண்ண வண்ண சித்திரங்களைப் பார்க்கவா, எதிரே தெரியும் மெகா சைஸ் ஓவியங்கள் மற்றும் தீர்க்கமான சிலைகளைப் பார்க்கவா, வழிகாட்டி காதுக்குள் கதைத்துக் கொண்டிருப்பதைக் கேட்கவா, எதுவும் புரியவில்லை. கேட்பதை விட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். கண்ணால் சிறைபிடித்ததை அலைபேசியில் சிறைபிடித்துப் பகிர்ந்துள்ளேன். அந்தக் காலத்தில் எல்லா அரசர்களும் ஏராளமான மனைவிகளுடன் உல்லாசமாக இருந்திருப்பது புரிகிறது. மன்னரின் படுக்கை பெரிதாகவும், ராணியின் படுக்கை சற்றே சிறிதாகவும் இருந்தது. இதை வைத்துத் தான் king size bed, queen size bed என்று சொல்றாங்களோ!
அதற்கடுத்தாற் போல் கண்ணைக் கவர்வது இந்த அரண்மனைக்கு எதிரே 800 ஹெக்டேரில் பிரம்மாண்ட தோட்டம் அமைந்துள்ளது. இதனை வடிவமைத்தவர் Andre Le Notre. பதினான்காம் லூயி மன்னரது விருப்பப்படி கட்டியது. இப்போதும் மிக அழகாகப் பராமரிக்கிறார்கள். Fountain Show எல்லாம் உண்டாம். நேரமில்லாததால் மேலிருந்து பசேலென்று குளிர்ச்சியாய்த் தெரிந்த பூங்காவைக் கண்களுக்குள் படம் பிடித்துக்கொண்டு கிளம்பினோம். அடுத்து பெல்ஜியத்தில் சந்திக்கலாம்! | ![]() |








வாசகர் கருத்துக்கள்0