இதழ்கள்
தமிழ் தூது · Tamil Thoodhu

ஜூலை 2026 இதழ்

ஜூலை 2026 · July 2026 · Issue 13
சிறப்பம்சங்கள் · Highlights
ஜூலை 2026 இதழ்

ஆசிரியர் பக்கம்

Dr. Mohana Suhadev, Editor-in-Chief

அன்பான வாசகப் பெருமக்களே!

நம் “தமிழ்த் தூது” இணைய இதழ் கடந்த மாதம் முதல் tamilthoodhu.com என்ற இணைய முகவரியில் வெளிவருகிறது. இது நமது இணைய இதழ் வரலாற்றில் அடுத்த பரிணாம வளர்ச்சியாக கருதப்படுகிறது.  “தமிழ்த் தூது” முற்றிலும் இலவசமே! வாசகர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நினைத்து தயங்க வேண்டியதில்லை. அதனால் வாசகர்கள் அனைவரும் நமது இணைய இதழில் தவறாமல் இணைய வேண்டுகிறேன். அப்பொழுது “தமிழ்த் தூது” இணைய இதழை தங்களின் இணைய முகவரியில் (email account) உடனே  பெற்றுக் கொள்ளலாம். 

இனிமேல் வாசகர்கள் இதுவரை வந்துள்ள அனைத்து இதழ்களையும் படிக்க முடியும். அத்துடன் உங்கள் பின்னூட்டங்களையும் உடனே இங்கே பதிவு செய்ய முடியும். அதிக அளவில் படைப்புக்களை அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்களையும் நாங்கள் வெளியிடுவதால் உங்கள் பெயரையும் அந்தப் பட்டியலில் காண முந்துங்கள். ஆனால் வாசகர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியல், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட செய்திகளோ, கட்டுரைகளோ “தமிழ்த் தூது” இதழில் இடம் பெறுவதில்லை.

வாசகர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று முடிந்த அளவில் நம் வாசகர் வட்டத்தை விரிவடையச் செய்து, நம் இணைய இதழை தமிழ் கூறும் நல்லுலகம் படித்துப் பயனடையச் செய்ய வேண்டும். உங்களின் படைப்புக்களை hitamilthoodhu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு அல்லது இங்கே பதிவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முனைவர் மோகனா சுகதேவ் (ஆசிரியர்)

01 / 07 / 2026

குறளின் குரல்

குறளின் குரல்
திருவள்ளுவர்

திருக்குறள் என்றால் என்ன?

திருக்குறள் என்பது தமிழ் மொழியின் மிகப் போற்றப்படும் பழமையான இலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதைத் திருவள்ளுவர் எழுதியுள்ளார். இதை “உலகப் பொதுமறை” என்றும் அழைப்பார்கள்.


திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும் தத்துவஞானியும் ஆவார். அவரை பொதுவாக “தெய்வப்புலவர்” என்று அழைக்கின்றனர்.


திருக்குறளை நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?

இந்தத் தமிழ் இலக்கியம் உலகளவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது 107-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களில் நம்மை வழிநடத்தும் ஒரு ஒளிவிளக்காக இது விளங்குகிறது.


குறள் என்றால் என்ன? அதன் அமைப்பு எப்படி?

“குறள்” என்பது இரு வரிகளைக் கொண்ட செய்யுளைக் குறிக்கும். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் உள்ளன. ஆகவே, மொத்தம் 1330 குறள்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

அதிகாரம்: ஆள்வினையுடைமை | குறள் எண்: 619

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் 

மெய்வருத்தக் கூலி தரும். 

Theyvaththaan aakaathu eninum muyarchidhan
meyvaruththak kooli tharum.

விதியின் பயனால் (ஊழ்) ஒரு காரியம் கைகூடாமல் போனாலும், அந்தத் தோல்வியைக் கண்டு மனம் தளராமல் ஒருவன் செய்யும் விடாமுயற்சி, அவனது உடம்பு வருந்தியதற்கான பலனையாவது (கூலி) தப்பாமல் கொடுத்துவிடும்.


குறள் கதை

முயற்சி திருவினை ஆக்கும்

கண்ணன் , பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் சிறுவன். விளையாட்டில் ஆர்வம் உள்ளவன். ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட அளவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு என்று மூன்று பரிசுகளும், இன்னும் பல பரிசுகளும் வாங்கி அவன் படிக்கும் பள்ளிக்கு பெருமையை சேர்த்து இருந்தான்.  

அவனுடைய வீடு மிகவும் சிறியது. ஓட்டு வீடு என்று சொல்லலாம். அடுக்களை தவிர ஒரே ஒரு அறை தான் இருந்தது. அது தான் படுக்கையறை, வரவேற்பறை, மற்றும் கண்ணன் படிப்பதற்கான அறை. வீட்டில், அவனுடைய அம்மா, அவனுடைய அப்பா தவிர இவன் மட்டும் தான் வசித்து வந்தார்கள். வலது பக்க  ஜன்னல் அருகில் வரிசையாக விளையாட்டில் கிடைத்த பரிசு கோப்பைகளை கண்ணன் அடுக்கி வைத்திருந்தான். வெளியில் இருந்து வந்த சூரியனின் கதிர் பட்டு கோப்பைகள் ஜொலித்துக்கொண்டு இருந்தன. இவை தவிர பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி என்று பல போட்டிகளில் அவனுக்கு கிடைத்த புத்தகங்கள் அங்கிருந்த ஒரு சிறிய மேசை மீது  அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 

கண்ணனுக்கு அவற்றை பார்க்க பார்க்க பெருமையாக இருந்தது.  அவை அவனுடைய உழைப்பின் பிரதிபலிப்பு அவற்றை பார்க்கும்போது ஒருபுறம் அவனுக்கு பெருமையாக இருக்கும். இன்னொரு புறம், அந்த பெருமையை தக்க வைத்துக்கொள்ள இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றிக்கொண்டே இருக்கும். 

சட்டென்று மணியை பார்த்த கண்ணனுக்கு தூக்கிவாரிப்போட்டது. மணி காலை 7.00 மணி. அவனுடைய தகப்பனார் ஒரு விவசாயி. விடிகாலை 5.00 மணிக்கு எழுந்து அவனுடைய தகப்பனாருடன் வயலுக்கு சென்றவன், தகப்பனார், ஏர்கலவை எடுத்துக்கொண்டு மாடுகளை விரட்ட தொடங்க, இவன், கிணற்றில் தண்ணீர் இறைத்து கால்வாயில் விட்டான். இது அவனுடைய அன்றாட வாழ்க்கை. சுமார் ஒரு மணி நேரம் வேலை பார்த்தவன், அவனுடைய தந்தை கொண்டு வந்திருந்த மண் கலையத்தில் இருந்த பழைய கஞ்சியை ஓரளவு   குடித்து விட்டு, தந்தையிடம் சொல்லிவிட்டு, வீட்டிற்கு விரைந்து வந்தவன் சிறிது கண்ணயர்ந்து விட்டான். தற்போது தான் மணியை பார்க்கிறான். 

பள்ளியில் 08.45 மணிக்கு இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் நான்கு ஆடுகளுக்கு அவன் தான் புல் தரவேண்டும். ஆறு கோழிகளுக்கு உணவு தரவேண்டும். அத்தனையும் செய்து முடித்து, குளித்து விட்டு, தோளில் புத்தகப்பையை சுமந்துகொண்டு நடக்கத்தொடங்கினான். 

அவனிடம் சைக்கிள் இல்லை. நடந்து தான் செல்லவேண்டும். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் தான் பள்ளிக்கு வர முடியும். அவனுடைய  வகுப்பிற்கு அவன் தான் மாணவர் தலைவன். சிறுவர்கள் தரும் நோட்டு புத்தகங்களை அடுக்கி வைக்கவேண்டும். ஆசிரியருக்கு தேவையான சாக் பீஸ் மற்றும் பலகை துணி போன்றவை ஏற்பாடு செய்யவேண்டும். இவை அனைத்தும் 09.00 மணி பிரேயர் தொடங்குவதற்கு முன்பாக அவன் செய்தாக வேண்டும். 

அவனோடு வகுப்பில் படிக்கும் 25 மாணவர்களில் மூவர்   சுரேஷ், கணேஷ் மற்றும் பாலன்.  சுரேஷ் அப்போது தான் காரில் வந்து இறங்கியிருந்தான். அவனுடைய காரின் ஓட்டுநர்  புத்தகப்பையை சுமந்து கொண்டு வந்து வகுப்பில் அவனுடைய இருக்கையில் வைத்து விட்டு சென்று விட்டார். கணேஷ் அண்ணனின் பைக்கில் வந்து மிடுக்காக இறங்கினான். ரஜனி காந்த் மாதிரி தலையை மீண்டும் மீண்டும் கோதிக்கொண்டு வந்தான். நடையை மாற்றிக்கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்தான். பாலனை பள்ளியில் விட்டு விட்டு காரில் திரும்பி சென்று விட்டார், அவனுடைய தமக்கை ஹேமா. அருகருகே அமர்ந்து இருந்த கணேஷ், பாலன் மற்றும் சுரேஷ் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 

பாலன்  பேசினான் - "டேய் கணேஷ்! எப்படிடா இந்த கண்ணன்  பரிசுகளாக வாங்கி குவிக்கிறான்? விளையாட்டு போட்டிகளில் பரிசுகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி - இப்படி அனைத்திலும் பரிசுகளை வாங்கி குவிக்கிறானே? எப்படிடா? விளையாட்டு மைதானத்தில், நான் நடந்து வரும்போது ஒரு மரத்தின் பின்னால் நின்று கொண்டு இரண்டு பெற்றோர்கள் பேசிக்கொண்டு இருந்ததை  கேட்டேண்டா; "பணக்கார பசங்கள் வயிறு முட்ட நன்றாக சாப்பிட்டு, உறங்கி, காரில் வந்து இறங்குறாங்க. வசதியிருந்தும், இப்படி போட்டின்னு வந்துட்டாலே எங்கேயாவது ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுகிறார்கள். இதுவரை இந்த பள்ளியில் வசதி வாய்ப்புகள் உள்ள பசங்க பரிசுகள் வாங்கி நான் பார்த்ததேயில்லை” - ன்னு பேசுறாங்கடா. எனக்கு கேவலமா இருக்குடா. " 

"ஆமாம்டா – சுரேஷ்! நீ காரில் ஜம்முனு வர்ற. நான் பைக்கில் வரேன். கண்ணன்  நடந்து நடந்து மூச்சு வாங்கிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு  வந்து சேருகிறான். என்ன ரகசியம்டா?"

"டேய் கணேஷ்! லன்ச் டயத்துல அவன்கிட்டேயே நாம் கேப்போம். என்ன சொல்றான்னு பார்ப்போம்." பாலனும் தலையாட்டினான். 

உணவு இடைவேளை வந்தது. 

கண்ணனின்  அருகில் அமர்ந்து சுரேஷும் கணேசும் தங்கள் சந்தேகங்களை கேட்கத் தொடங்கினார்கள். பாலன் உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தான்.

சிரித்துக்கொண்டே கண்ணன்  பதில் சொல்ல தொடங்கினான். 

"நண்பர்களா! - பரிசுகள் இவன் தான் வாங்கமுடியும்; அவனால் வாங்க முடியாது என்றில்லை. யார் வேண்டும் என்றாலும் வாங்கலாம். என்னால் முடியும்போது உங்களாலும் முடியும். முயற்சி செய்ய வேண்டும். உழைக்கவேண்டும். இவர்கள் மட்டும் தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளமுடியும் என்ற விதிமுறைகள் கிடையவே கிடையாது. . மனம் இருந்தால் மார்க்கம் என்றும் உண்டு” 

“பாருங்க. விடிகாலை 5.00 மணிக்கு நான் எழுந்திருந்து வயலுக்கு சென்று, கிணற்றில் ஒரு மணி நேரம் தண்ணீர் இறைக்கிறேன். செடிகளுக்கும், மரங்களுக்கும், வயலுக்கும் தண்ணீர் ஊற்றுகிறேன். என்னுடைய கைகளுக்கு பலம் வந்து சேருகிறது. ஆடுகளுக்கு மற்றும் கோழிகளுக்கு தீவனங்கள் வைக்கிறேன். எனக்கு பொறுமை கூடுகிறது. மனதில் அன்பு பெருகுகிறது. வயலுக்கு நடந்தே சென்று திரும்பி வருகிறேன். மேலும் பள்ளிக்கு நடந்தே வருகிறேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நான்கு  கிலோமீட்டர் தூரம் நடக்கிறேன். என்னுடைய கால்கள் வஜ்ரம் போல மாறி வருகின்றன. இப்படி உடலுக்கு வேலை கொடுத்து உழைத்துக்கொண்டு  இருப்பதால், எனக்கு சாதாரண காய்ச்சல் கூட வருவதில்லை. என்னுடைய உணவு மிகவும் எளிய உணவு தான். பெரும்பாலும் பழைய கஞ்சி தான். வயிற்றின் ஆரோக்கியத்திற்கு இது தான் சிறந்தது என்று மருத்துவர்கள் தற்போது சொல்லிக்கொண்டு வருகிறார்கள்".

"அதற்காக, உங்களை ஆடு மேய்க்க மற்றும் கோழிகளை பாதுகாக்க நான் சொல்லவில்லை. வயலுக்கு போக சொல்லவில்லை. உங்களிடமும் உடலை வருத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் என்னுடைய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.  அப்படி முயற்சி செய்யவும் வேண்டாம். உங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் என்ன என்று கண்டறிந்து அவற்றை பயன்படுத்துங்கள்”. 

“உங்கள் அனைவருடைய  வீடுகளிலும் தோட்டங்கள்  இருக்கும். தோட்டக்காரனுக்கு வேலை கொடுக்காமல்  தோட்டத்தில் இருக்கும்  செடிகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் நீங்கள்   அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீர் பாய்ச்சலாம். குப்பைகளை அகற்றலாம். குழிகள் தோண்டி புதிய செடிகளை நடலாம். களைகளை அகற்றலாம். இதன் மூலம் இயற்கைக்கு நீங்கள் உதவிகள் புரியலாம்."

"உங்கள் வீட்டில் உள்ள கார்களை நீங்களே சுத்தம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் உடல் பலம் கூடும்.  ஆரோக்கியம் கூடும். அது மட்டும் அல்ல, உங்களுடைய பெற்றோர்களிடம் சொல்லி காரையும், பைக்கையும் தவிர்த்து விட்டு, உங்களுக்கென்று சைக்கிள்கள்  வாங்கிக்கொண்டு தினமும் பள்ளிக்கு சைக்கிளில் வாருங்கள். உடல் உறுதியடையும். கால்கள் வலுவடையும். மனதில் நம்பிக்கை பிறக்கும். தைரியம் கூடும். நீங்களும் போட்டிகளில் பங்கு பெற்று கோப்பைகள் பெறமுடியும்”. 

“உடல் உறுதியாக இருந்து ஆரோக்கியமும் சேர்ந்துவிட்டால், உங்களுக்கும், நம்பிக்கை வந்து விடும். போட்டி என்று அறிவித்து விட்டால், உடனே உங்கள் பெயரை சேர்த்து விடுங்கள். வெற்றி மற்றும் தோல்வி பற்றி  அப்போதைக்கு சிந்தனை செய்யாதீர்கள். சந்தோசமாக போட்டியில் பங்கு பெறுங்கள். முயற்சி செய்து கொண்டே இருந்தால் தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.” 

கண்ணன்  சொல்வதை பிரமிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தார்கள் சுரேஷ், கணேஷ் மற்றும் பாலன். 

அவர்கள் மூவரும் அன்றிலிருந்தே கண்ணன்  சொன்ன வழிகாட்டல்களை கடைபிடிக்க ஆரம்பித்தனர். முதலில் மறுப்பு தெரிவித்த அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகளின் நலன் கருதி பின்னர் அவர்கள் போக்கில் விட்டு விட்டனர். 

அந்த வருடத்திற்குள்ளாகவே, சுரேஷ், கணேஷ் மற்றும் பாலன்  உழைப்பிற்கான பலன்களை சிறிது சிறிதாக பெற ஆரம்பித்தார்கள். அந்த வருட இறுதியில் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்காக நடந்த  நால்வர் பங்கு பெறும் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயங்களில், அவர்களுடைய பள்ளிக்கு முதல் பரிசுகள் கிடைத்தன. 

பள்ளிக்கு அந்த வெற்றிகளை தேடித்தந்த  நான்கு மாணவ விளையாட்டு வீரர்கள்  - கண்ணன் , கணேஷ், சுரேஷ் மற்றும் பாலன். 

நீதி: "உழைப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்." 🌱🏆

இலக்கியச் சோலை

இலக்கியச் சோலை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைKavimani Desigavinayagam Pillai

இந்தப் பகுதியில் பாரதியார், ஔவையார், அழ. வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்று தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடிய தேசியக் கவிஞர்களை முன்னிலைப்படுத்துவோம். ஒவ்வொரு இதழிலும் அவர்களின் புகழ் பெற்ற பாடல்களின் மொழிபெயர்ப்பையும் வழங்குவோம்.

காக்காய்! காக்காய்!

காக்காய்! காக்காய்! பறந்து வா!
கண்ணுக்கு மை கொண்டு வா!
கொக்கு! கொக்கு! மெதுவாய் வா!
குழந்தைக்குப் பால் கொண்டு வா!

தோட்டத்தில் மேயும் பசு

தோட்டத்தில் மேயும் பசு
துள்ளித் திரியும் கன்று
பாட்டைப் படிக்கும் குயில்
பச்சை மரத்தின் கிளி
ஆட்டுக் குட்டி! நீயும் வா!
அன்பாய் ஓடி வா! வா!

மாமரம்

மாமரத்தில் மாம்பழம்
மஞ்சள் நிற மாம்பழம்
தேனைப் போல இனிக்கும்
தின்னத் தின்னத் தித்திக்கும்
நாமும் அதனை உண்போம்
நல்ல பலனைப் பெறுவோம்

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

நமது பண்பாடு

சிலம்பாட்டம்

சிலம்பாட்டம் தமிழர்களின் மிகத்தொன்மையான மற்றும் உலகப் புகழ்பெற்ற ஒரு தற்காப்புக் கலையாகும். ‘சிலம்பல்’ என்ற சொல்லுக்கு ‘ஒலித்தல்’ என்று பொருள். கம்புகள் வீசும்போது ஏற்படும் ஒலியின் காரணமாகவே இதற்குச் சிலம்பாட்டம் என்று பெயர் வந்தது. 

இதன் சிறப்புகள் மற்றும் விளையாடும் முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

சிலம்பாட்டத்தின் சிறப்புகள்:

  • பழமையான தற்காப்புக் கலை: இது சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. அகத்திய முனிவரால் இந்த கலை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. 

  • உடல் மற்றும் மன வலிமை: சிலம்பம் விளையாடுவதால் உடல் சுறுசுறுப்பு, கண்-கை ஒருங்கிணைப்பு, மூச்சுத் திறன் மற்றும் மன ஒருமுகப்பாடு அதிகரிக்கும். 

  • பெண்களுக்கான சிறந்த தற்காப்பு: ஆபத்துக் காலங்களில் தங்களைத் தற்காத்துக் கொள்ள பெண்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த ஆயுதமில்லா கலை.

  • பல்வேறு ஆயுதப் பிரிவுகள்: இதில் சாதாரணக் கம்பு மட்டுமின்றி, சுருள்வாள் (சுருள் கத்தி), மடுவு (மான்கொம்பு), ஈட்டி, கத்தி போன்ற பல ஆயுதங்களைப் பயன்படுத்தும் பிரிவுகள் உள்ளன. 

  • சர்வதேச அங்கீகாரம்: இன்று சிலம்பம் வெறும் தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாகவும் வளர்ந்துள்ளது.

சிலம்பம் கற்பதற்கும் விளையாடுவதற்கும் சில அடிப்படைப் படிகள் மற்றும் முறைகள் உள்ளன:

1. தேவையான உபகரணங்கள்

  • சிலம்பக் கம்பு: விளையாடுபவரின் புருவ உயரம் அல்லது நெற்றி உயரம் வரை உள்ள மூங்கில் கம்பு பயன்படுத்தப்படும்.

  • ஆடை: பொதுவாகப் பாரம்பரிய உடைகளான வேட்டி/துண்டு அல்லது தற்காலப் போட்டிகளுக்கான சீருடை மற்றும் பாதுகாப்பு கவசங்கள் (Chest guard, Helmet) அணியப்படும். 

2. அடிப்படைப் பயிற்சிகள் (சுவடுகள்)

சிலம்பம் விளையாடப் பழகுபவர்கள் முதலில் காலடி வரிசைகளைக் கற்க வேண்டும்.

  • வணக்க முறை: விளையாட்டைத் தொடங்கும் முன் குருவிற்கும், சபையோருக்கும், கம்பிற்கும் வணக்கம் செலுத்துதல்.

  • கால் சுவடுகள்: பின்னோக்கி நகர்தல், முன்னோக்கி நகர்தல் மற்றும் பக்கவாட்டில் நகர்வதற்கான காலடி முறைகள் (எடுத்துக்காட்டாக: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு சுவடுகள்).

  • கம்பு பிடிக்கும் முறை: வலது கை மேல்நோக்கியும், இடது கை கீழ்நோக்கியும் கம்பின் மையப்பகுதிக்குச் சற்று கீழே பிடிக்க வேண்டும்.

3. கம்பு வீசும் முறைகள் (அடி வரிசைகள்)

கம்பை உடலின் நாலாபுறமும் சுழற்றுவதற்குக் கீழ்வரும் முறைகள் பயன்படுகின்றன:

  • முன் வாரல், பின் வாரல்: கம்பை முன்னும் பின்னும் சுழற்றி அடித்தல்.

  • தடுத்தல் முறை: எதிராளி அடிக்கும் அடியைத் தன் கம்பால் தடுத்துத் தற்காத்தல்.

  • வெட்டு மற்றும் குத்து: எதிராளியின் உடலை நோக்கிப் பாயும் குறிப்பிட்ட அடி முறைகள்.]

4. போட்டி விதிகள்

முறையான போட்டிகளில் கீழ்வரும் விதிகள் பின்பற்றப்படும்:

  • வட்ட அரங்கம்: வீரர்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட வடிவ அரங்கிற்குள் (Circle) நின்று விளையாட வேண்டும்.

  • புள்ளிகள்: எதிராளியின் கம்பைத் தொடாமல், அவரது உடலில் குறிப்பிட்ட பகுதிகளில் (நெஞ்சு, முதுகு, தோள்பட்டை) கம்பால் தொடுவதன் மூலம் புள்ளிகள் வழங்கப்படும். 

  • தவறுகள்: எதிராளியைக் காயப்படுத்தும் நோக்கில் தலையிலோ அல்லது கால்களிலோ பலமாக அடிப்பது, கம்பைக் கீழே போடுவது தவறுகளாகக் கருதப்பட்டுப் புள்ளிகள் குறைக்கப்படும்.

உணவே மருந்து

பாரம்பரிய சர்க்கரைப் பொங்கல்

6 பேர்களுக்கு தேவையான பொருட்கள்:

2 கப் பச்சரிசி

1 உருண்டைவெல்லம்

அரை கப் டயமண்ட் கல்கண்டு

10 முந்திரி

15 கருப்பு திராட்சை

8 ஏலக்காய்

தேவைக்கு நெய்

தேவைக்கு தண்ணீர்

மொத்த நேரம் : 1 மணி நேரம்

செய்முறை:

  • வெல்லம்பாகு காய்ச்சிக்கொள்ளவும். பச்சரிசியை சுத்தம் பண்ணி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். நன்றாக அரிசி வேக வேண்டும்.

  • அரிசி குழைந்தவுடன் கல்கண்டு சேர்க்கவும். பின் வெல்லப்பாகு வடிகட்டி சேர்க்கவும். நன்கு கலந்து விடவும்.

  • ஏலக்காய் உரலில் தட்டி சேர்க்கவும்.

  • வேறு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான நெய் விட்டு, கொஞ்சம் அதிகமாக விட்டால் நன்றாக இருக்கும்.  

  • முந்திரி திராட்சை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.

  • சுவையான அருமையான கல்கண்டு கலந்த சர்க்கரை பொங்கல் ரெடி.

பாட்டி வைத்தியம்

பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்சினையைக் கட்டுப்படுத்த, உச்சந்தலையைச் சுத்தமாக வைத்திருப்பதும், மயிர்க்கால்களுக்கு ஊட்டம் அளிப்பதும் அவசியமாகும்.

இதற்கான மிகச் சிறந்த எளிய பாட்டி வைத்திய முறைகள் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பொடுகுத் தொல்லையை நீக்க:

  • வெந்தயம் மற்றும் தயிர்: வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, புளித்த தயிருடன் கலந்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்துக் குளிக்கவும்.

  • எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாற்றைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்து வரப் பொடுகு மற்றும் அரிப்பு நீங்கும்.

  • வேப்பிலை மற்றும் கற்பூரம்: தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வேப்பிலை மற்றும் கற்பூரம் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தடவி வரப் பூஞ்சை தொற்று அழியும். 

முடி உதிர்தலைத் தடுத்து வளரச் செய்ய:

  • சின்ன வெங்காயச் சாறு: சின்ன வெங்காயத்தை அரைத்துச் சாறு எடுத்து, அதை முடி வேர்களில் தடவி 15 நிமிடம் கழித்து அலசினால் புதிய முடிகள் வளரும்.

  • கறிவேப்பிலை எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் மருதாணி இலைகளைப் போட்டுக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தேய்த்து வர முடி உதிர்வு நிற்கும். [3] 

  • நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தி: உலர்ந்த நெல்லிக்காய் பொடி மற்றும் செம்பருத்திப் பூக்களை அரைத்துத் தலைக்கு 'பேக்' (Pack) ஆகப் போட்டுக் குளிக்க முடி அடர்த்தியாகும்.

முக்கியப் பராமரிப்புக் குறிப்புகள்:

  • இயற்கை ஷாம்பு: கெமிக்கல் ஷாம்புகளுக்குப் பதிலாகச் சீயக்காய் அல்லது பூந்திக்கொட்டை தூளைப் பயன்படுத்திக் குளிக்கவும்.

  • சூடான தண்ணீர்: தலைக்குக் குளிக்க மிக அதிகச் சூடான தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது; இது வேர்களைப் பலவீனமாக்கும்.

  • உணவு முறை: இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம், தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

படிக்கலாம் வாங்க!

புத்தகத்தின் பெயர் - சிறுவர்களுக்கு கண்ணன்  கதைகள் 

ஆசிரியர் பெயர் -   எ. ஜோதி 

பதிப்பகம் - நன்மொழிப்பதிப்பகம், புதுச்சேரி.  

விலை - ரூபாய் 50.00 

இந்த கதைப்புத்தகம் சிறுவர் கதைக்களஞ்சியம் என்ற வரிசையில் பதினாறாவது  நூல் ஆகும். 

கதை உலகில் ஆசிரியர் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.  கண்ணன் கதைகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 

குழந்தையாகக் கண்ணனாகக் கோகுலத்தில் தவழ்ந்து விளையாடியது, சிறுவனாகக் குறும்புகள் பல செய்தது, அரக்கர்கள் பலரைக் கொன்றதோடு கம்சனையும் கொன்றது. இது முதல் பகுதி. 

ருக்மணியைத் திருமணம் செய்ததும் பிற நிகழ்ச்சிகளும் இரண்டாம் பகுதி. 

மகாபாரதப்போரும் அதன் தொடர் நிகழ்ச்சிகளும் மூன்றாம் பகுதி. 

கண்ணன் கோகுலத்தில் குழந்தையாக விளையாடியதும் குறும்புகளை செய்து வந்ததும், அசுரர்களைக் கொன்றதும் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் கதை ஆகும். 

சுவையும், விறுவிறுப்பும் நிறைந்த இத்தகைய கதைகளை ஆசிரியர் அவருக்கே உரிய இனிய நடையில் எழுதி உள்ளார். சிறுவர் சிறுமிகள் விரும்பிப்படிப்பார்கள். சிறுவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் படித்து மகிழ்வதற்கான ஒப்பற்ற நூல் இது.

உலகளாவிய தமிழ் செய்திகள்

கடந்த மாதம், வான்கூவர் தீவு தமிழ்ச் சங்கம் (VITS) தனது முத்தமிழ் விழாவை ஜூன் 13 அன்று விக்டோரியாவில் கோலாகலமாக நடத்தியது. கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், இசை, மற்றும் கண்ணையும் செவியையும் நாவையும் மகிழ்விக்கும் விருந்து என அந்நாள் சிறப்புற அமைந்தது. அதன் சிறப்பம்சங்களில் ஒன்று, அஞ்சலி மற்றும் அவரது நான்கு வயது மகள் அதினா ஆகியோர் நிகழ்த்திய இதயம் கவர்ந்த நடன நிகழ்ச்சி.

பூந்தளிர் / Children's Section

தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி

(Tamil – Tamil – English Dictionary)

எண்

S.No.

தமிழ் வார்த்தை 

Tamil Word

சமமான தமிழ் வார்த்தை

Synonym

சமமான ஆங்கில வார்த்தை

Meaning in English

A

B

C

1

அபயம் (Abayam)

அடைக்கலம் (Adaikkalam)

Help 

2

அபாயம் (Abaayam) 

ஆபத்து (Aapathu)

Danger 

3

அபசகுனம் (Abasagunam) 

தீயகுறி (Theeyakuri)

Bad signal

4

அபகரி(Apakari)

கவர்ந்து செல் (Kavarnthu

chel)

Confiscate

5

அப்பால் (Appaal)

அந்தப்பக்கம்

(Anthapakkam)

Other side

எதிர்பதங்கள் – Opposites 

எண்

S.No.

தமிழ் வார்த்தை

Tamil Word  

Equivalent English word

தமிழில் எதிர்ப்பத வார்த்தை

Opposite Tamil Word

Equivalent opposite English word

A

B

C

D

1

வெளிச்சம் (Velicham)

Bright

மங்கலானது (Mangalanathu) 

Dull 

2

புத்திசாலி (Putthisali)

Intelligent 

முட்டாள் (Muttaal )

Fool 

3

வெப்பம் (Veppam)

Hot 

குளிர்(Kulir)

Cold 

4

கடுமையானது (Kadumaiyanathu)

Tough 

இலகுவானது (Ilakuvanathu)

Easy 

5

அருகில் (Arukil) 

Nearby 

தூரத்தில் (Thoorathil)

At a distance 

சொல்வகை  - Match the words 

இங்கு பதினாறு சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகைப்படுத்துங்கள். ஒரு வகைக்கு நான்கு சொற்கள். எனவே நான்கு வகைகள் கிடைக்கும். (இந்த பயிற்சி உங்களுடைய சொற்களை வகைப்படுத்தும் திறமையை வளர்க்கும்) 

Sixteen Tamil words are provided here. Arrange them according to the following four categories (Four words per category)

உருவாக்கப்படவேண்டிய வகைகள்  - Categories to be formulated

எழுதுபொருட்கள்

Writing Materials

போக்குவரத்து சாதனங்கள் 

Varieties of transport

நகைவகைகள் 

Jewelry types

காய்கறிகள்

Vegetables  

பதினாறு சொற்கள்

கப்பல் (Ship)

தங்கம் (Gold)

மிளகாய் (Chilli)

காகிதம் (Paper)

வெள்ளி (Silver)

கத்திரிக்காய்

(Eggplant)

பேனா  (Pen)

சைக்கிள் (Cycle)

வெண்டைக்காய்

(Lady’s finger)

புத்தகம் (Book)

கார் (Car)

பிளாட்டினம் (Platinum) 

பென்சில் (Pencil )

விமானம் (Aircraft) 

வைடூரியம் (Vaidooriyam)

புடலங்காய்

(Snakeguard)

[விடைகள்  கடைசி பக்கத்தில் – Answers in the last page]

தமிழ் விடுகதைகள் – Tamil Riddles 

1. தொட்டுப்பார்க்கலாம்; ஆனால் எட்டிப்பார்க்க முடியாது - அது என்ன ?

You can touch, however, you cannot see it – What is it ?

2. வீட்டில் இருப்பான் காவலாளி - வெளியில் சுற்றுவான் அவனுடைய கூட்டாளி - யார் அவர்கள் ? 

The guard is at the house and his companion roams outside – Who are they? 

3. நடந்து கொண்டு இருந்தவன் நின்று விட, கத்தியால் அதன் தலையை சிறிது சீவினேன் - இப்போது நடக்க ஆரம்பித்தான். யார் அவன் ? 

He stopped walking. I started cutting his hair. Now he walks properly. Who is he ?

4. விரல் இல்லாமல் இருக்குமாம் ஒரு கை - அது என்ன ?

This hand has no fingers. What is it ?

5. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணையில்லை - யார் அவர் ?

The man who is skilled in spinning thread, has no clothes to wear. Who is he?

[விடைகள்  கடைசி பக்கத்தில் – Answers in the last page] 

மூளைக்கு வேலை

கீழ்க்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டு  இங்கு கொடுக்கப்பட்ட வெளிர் கட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து வார்த்தைகளும் “இ" என்ற எழுத்தில் தான் தொடங்குகின்றன. The meanings for the words are provided in English within brackets. 

  1. சங்கீதம் (Music)

  1. ஓயாது (Repeatedly)

  1. உணவில் பயன்படுத்தும் பொருள் (One of the food ingredients)

  1. புலனுறுப்பு  (Sensory organ)

  1. காலை சிற்றுண்டி (Morning breakfast Item) 

  1. மாயவித்தை (Magical activity)

மூளைக்கு வேலை

1

2

3

4

5

6

[விடைகள்  கடைசி பக்கத்தில் – Answers in the last page]

______________________________________________________________________________________________________________________________________

திருக்குறள் பற்றிய சில சுவையான தகவல்கள்

01. திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.

02. திருவள்ளுவருக்கு  தங்க நாணயம் வெளியிட்டவர் எல்லீஸ் துரை

03. “கடுகைத்துளைத்து ஏழ் கடலைப்புகட்டி குறுகத்தரித்த குறள்,” என்று பாராட்டிய புலவரின் பெயர் இடைக்காடர்

04. திருவள்ளுவமாலை - இதை 53  புலவர்கள் பாடியுள்ளார்கள்

05. திருக்குறள் உரைக்களஞ்சியம் - இதை எழுதியவர் தண்டபாணி தேசிகர்

06. திருக்குறளுக்கு சமீப காலங்களில் உரை எழுதிய மூவர் - திரு மு. வரதராசனார்; திருதிரு மு. கருணாநிதி மற்றும் திரு சாலமன் பாப்பையா

07. தமிழ் நாட்டில்  திருவள்ளுவர் மணிமண்டபம் அமைந்துள்ள இடம் - வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை.

08. திருவள்ளுவர் தினம் பிரதி வருடம் தைத்திங்கள் இரண்டாம் நாள் கொண்டாடப்படுகிறது.

09. இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடிகள்.

10. கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை 01.01.2000  முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.


மழை நேரம்

முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் அமைந்திருந்தது அந்த சிறு பள்ளிக்கூடம். மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் அவரவர் வீடுகளுக்கு  செல்லும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. 

திடீர் என்று  வெளியில் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் இருபது   மாணவர்களும், மாணவிகளும் தங்களுடைய வகுப்பறையில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனித்துக்கொண்டு இருந்தனர்.

மாணவர்கள் மற்றும் மாணவிகளை உற்சாகப்படும் நோக்கத்தில், கமலா டீச்சர் “இயற்கையை எப்படி நேசிப்பது" என்பது பற்றிய பாடம் சொல்ல நினைத்தார் . திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக மழைக்காற்று வீசத்தொடங்கியது. மண் வாசனையும் வந்தது. சூழ்நிலை மனதிற்கு இதமாக இருந்தது.

கமலா  டீச்சருக்கு ஒரு யுக்தி தோன்றியது. "இன்று மழையை அடிப்படையாக வைத்து ஒரு வினாடி வினா விவாதம் நடத்தலாம் என்று."

மாணவர்கள் மற்றும் மாணவிகளை பார்த்து பேசத்தொடங்கினார். "குழந்தைகளே. நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள். வெளியில் தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது. நீங்கள் நன்றாக யோசித்து, மழை பெய்வதை பற்றி பொது மக்கள் அவரவர்  பார்வையில் எப்படி சொல்லுவார்கள் என்று பொருத்தமாக ஆளுக்கொரு பதிலை சொல்லுங்கள்” 

 "சொல்கிறோம் டீச்சர்" - என்றனர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கோரஸாக.

 முதலாவதாக ஹேமா  சொல்ல ஆரம்பித்தாள்.

"மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸ் – மழை நார்மலாக பெய்கிறது - என்று சொல்லுவார். 

 பாலன்: இரும்பு வியாபாரி - மழை மிகவும் கனமாக பெய்கிறது - என்பார். 

 சுரேஷ்: பூக்கடை பாட்டி - மழை பொல பொலவென்று பெய்கிறது - என்பார்  

 கணேஷ்:  துணி துவைக்கும் டோபி - மழை நன்றாக வெளுத்துக்கட்டுது -  என்று சொல்லுவார்.

 கண்ணன்:  வீட்டு வேலைக்காரி - மழை பிசு பிசுன்னுது பெய்யுது- என்று சொல்லுவார்.

 ரமேஷ்: கோவில் பூஜாரி - மழை திவ்யமா பெய்யுது - என்று சொல்லுவார்

 வின்சென்ட்: செருப்புக்கடைக்காரர் - மழை செம அடி அடிக்குது -  என்று சொல்லுவார்.

 தாமரை: பேண்ட் வாத்தியக்காரர் - மழை கொட்டோ கொட்டுதுன்னு கொட்டுது - என்று சொல்லுவார்.

 பதமினி: சலூன் கடை வைத்திருப்பவர் - மழை சும்மா புடி புடின்னு புடிக்குது - என்று சொல்லுவார்

 வினோதினி: ஜூஸ் கடைக்காரர் - மழை அப்படியே பிழிந்து பிழிந்து எடுக்குது - என்று சொல்லுவார்.

 பத்மா:    கணவர்  - மழை வாங்கு வாங்குன்னு வாங்குது - என்று சொல்லுவார்

 சரோஜா: மனைவி - மழை சும்மா சும்மா அடிச்சிக்கிட்டு இருக்குது -  என்று சொல்லுவார்.

வாசகர் பக்கம் (Readers' Corner)

வாங்க, சிரிக்கலாம்!

லால்குடி வெ.நாராயணன்

பெண்களைப் பார்த்தவுடனே ஈ என்று இளிக்கும் தலைவர் இப்போ ஏன் வாய திறக்காம நிக்கறார்?
முன்வரிசையில் இரண்டு பல் விழுந்துடுச்சாம்!

என்னது நம்ம‌ வாத்தியார் நல்ல‌ சங்கீதம் தெரிஞ்சவரா?
ஆமா, வகுப்புல‌ பாடம் எடுக்கும் போதெல்லாம் சம்பளம் பத்தலன்னு பஞ்ச பாட்டு பாடுறாரே

என்னது? உங்க ஆசிரியருக்கு தற்பெருமை அதிகமா?
ஆமா! பாடம் நடத்தும் போது நடு நடுவே அவரே கை தட்டிப்பார்


எவரிடமும் போய் நிக்கமாட்டேன்னு வீராப்பு பேசிய நம்ம வாத்தியார் ஏன் இப்ப 

தலைமையாசியரிடம் பல் இளிச்சுக்கிட்டு நிக்கறார் ?
புதுசா பல் செட்டு கட்டியிருக்கிறாராம்! 


நம்ம தலைவர் யாருக்கும் தலைவணங்க மாட்டார்! தெரியுமா?
எப்படி வணங்குவார்? அப்புறம் விக் ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சுடுமே!

வாசகர் பங்களிப்பு

Paintings by school children

Amika Kumari

G. Sabarinathan

G. Shanmugapriya

Casandra

சிறுகதை - கல்யாணி

அலுவலகத்திலிருந்து திரும்பிய மதனுக்கு, கல்யாணியின் சோர்ந்த முகத்தைக் கண்டதும், அவள் எதுவும் சொல்லாமலே அன்று என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்தது.

கல்யாணி டீச்சராக இருக்கும் அதே பள்ளியில்தான் பக்கத்துவீட்டு பாமாவும் வேலை செய்கிறாள். அதென்னமோ ஆரம்பம் முதல் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். ஒருவரைக்கண்டால் ஒருவருக்கு ஆகாது. 

இருவருடைய கணவன்மார்களும் கூறும் அறிவுரைகள் அவர்கள் காதில் விழுந்தால் தானே. எலியும் பூனைபோல் ஒருவரை ஒருவர் கடித்துக் குதற நேரம் பார்த்திருப்பர்.

அன்றைய தினம் பள்ளியில் அரசு மேலாளர் வந்து இன்ஸ்பெக்ஷன் செய்திருக்கிறார். கல்யாணியின் வகுப்பில் ஒரு மாணவன் சீறுடை சரியாக அணிந்து வரவில்லை. அதை கவனிக்காததால் கல்யாணிக்கு அந்த ஆபீசர் மெமோ கொடுத்திருந்தார். 

மதிய உணவு இடைவேளையில் ஆசிரியர்கள் கூடி உணவு உண்ணும்போது இதைப் பற்றி பாமா கிண்டலடித்ததும், இருவருக்கும் வாக்குவாதம் பலமாகி வாய்ச்சண்டையில் முடிந்தது. இதுவே இன்றைய கல்யாணியின் சோகத்துக்குக் காரணம். கல்யாணியின் கணவன் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் மனம் சமாதானப்படவில்லை.

நான்கு நாட்கள் கடந்தன. அதே மதிய உணவு வேளை. பாமா, கல்யாணி, மற்றும் பாமாவின் எதிரியான இன்னொரு டீச்சரான கல்பனா மூவரூம் உணவருந்திக் கொண்டிருந்தனர். 

பாமாவைப்பற்றி மற்ற இருவரும் ஏதேதோ கலாய்த்தபடி இருந்தனர். பாமா காதிலேயே போட்டுக்கலை. கல்யாணி கை கழுவ எழுந்தபோது , பாத்ரூமில் கால் தடுக்கி வழுக்கி விழுந்தாள். 

உடனே கல்பனா அவளைக் கவனிக்காமல்,  உதவிக்கு வாட்ச்மேனை அழைக்க ஓடி விட்டாள். ஆனால் பாமாவோ  உடனடியாக கல்யாணியை எழுப்பி, நீர் கொடுத்து, முதலுதவி செய்து, ப்ரின்சிபாலிடம் விவரம் சொல்லி, ஆட்டோ பிடித்து ஆஸ்பத்ரிக்கு அழைத்துச் சென்று, கையில் ஃப்ராக்சர் என்றறிந்து ஆவள் கணவனுக்கு போன் செய்து வரவழைத்து, இரவு ஆபரேஷன் ஆகும்வரை கூடவே இருந்து, ஒரு சொந்த சகோதரியைப்போல் அன்பைப்பொழிந்தாள்.

அது மட்டுமா, வலது கை முறிந்ததால் அவளுக்கு சரியாகும் வரை, அவள் கணவன் இல்லாத நேரத்தில் வலது கையாக செயல்பட்டாள். பள்ளிக்கு ஒரு மாதம் விடுமுறை போட்டு, பலவித உதவிகள் செய்தாள்.

ஆரம்பம் முதல் அவள் செய்யும் அனைத்து உதவிகளையும் ஏற்றுக்கொள்ளும்போது கல்யாணி குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகினாள். முதலில் உன் உதவி தேவையில்லை என முறைத்துக் கொண்டவள், பிறகு கணவனின் வற்புறுத்தலால் வாயை மூடிக்கொண்டாள்.

நாளாக நாளாக கல்யாணிக்கு பாமா மேல் அன்பும் அக்கறையும் வளர ஆரம்பித்தது. "சே. சுபாவத்தில் மிக நல்லவளாக இருக்கிறாள். நான்தான் தேவையில்லாமல் சண்டை,  வெறுப்பு வளர்த்துவிட்டேனோ" என எண்ணி நாணினாள்.

மூன்று மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. இப்போ வாடி போடி என்று கூப்பிடும் அளவுக்கு நெருங்கிய தோழிகளாகி விட்டனர் இருவரும். 

கல்பனாவின் வகுப்பறையை கடக்கும்போது அவள் திருக்குறள் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

என்ற குறளை மாணாக்கர்களுக்கு விளக்கும்போது, பாமாவின் நினைவு அவள் மனதில் அலைமோதியது, தவிர்க்கமுடியாததுதானே?

-பத்மா ராகவன் 

பெங்களூர்

ஐரோப்பா பயணம் போகலாமா? (பதிவு.3)

சிட்டி ரெசிடென்சியில் எங்கள் அறைக்குள் நுழைந்ததும் குளிரூட்டி இல்லாமலே சில்லென்றிருந்த தட்பவெப்ப நிலையும், மெத்தென்றிருந்த படுக்கையும், விமானத்தில் உட்கார்ந்தே பயணித்த களைப்பும் சேர்ந்ததால் படுத்தவுடன் கண்கள் தானாக மூடிக் கொண்டன. மறுநாள் அதிகாலை ஐந்தரைக்கே எழுந்து கெட்டிலில் வெந்நீர் வைத்து, கொண்டு போயிருந்த Narasus 3 in one பாக்கெட்டில் காபி கலந்தால் அதிகம் இனித்தது. ஹோட்டலில் வைத்திருந்த instant coffee powder ஐக் கலந்து சுமாரான காபியை குடித்து, குளித்து சாப்பிடக் கீழே இறங்கினோம்.

காலைச் சிற்றுண்டி தங்கும் விடுதியில் இலவசம். அதிகாலை 7 மணிக்கே ஆரம்பித்து விடுகிறது. பல வகையான குரசான்ட் (croissant), ரொட்டி, அதன் மேல் தடவிச் சாப்பிடப் பல்வேறு வகையான ஸ்பிரெட்கள், சாலட்கள், பழங்கள், விதவிதமான கார்ன் பிளேக்ஸ், சுடச்சுட பால், காபி, பழச்சாறுகள் என்று வகை வகையாக வரிசை கட்டி நின்றன.

பின்னால் ஒரு குரல் “அது என்ன பால்கோவாவா?” உடனே பளீரென்று பதில் குரல் “அது scrambled egg மா!” “முட்டையா?” விறுவிறுவென நடையைக் கட்டினார். நானும் உஷாராகி, தெரிஞ்ச ஐட்டம்களை மட்டும் தட்டில் நிரப்பிக் கொண்டேன். எட்டு மணிக்கு எல்லாரும் தயாராகி ஜீன்ஸ் படத்தில் ஐஷ்வர்யா ராய் ‘அதிசயம்’ என்று வியந்து ஆடும் Iron Lady of Paris ஐப் பார்க்கக் கிளம்பினோம். பாரீஸ் நகரத்தின், ஏன் ஐரோப்பாவின் முக்கிய அடையாளம் இது.

ஈபிள் கோபுரம் அமைந்துள்ள Champ De Mars க்கு வந்து அண்ணாந்து பார்த்தால் இந்த கோபுரத்தின் மீது சாய்வாக இரண்டு மின்தூக்கிகள் இயங்கிக் கொண்டிருந்தன. மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோபுரத்தின் உயரம் 330 மீட்டர். Gustave Eiffel என்னும் பொறியாளரால் 1887ல் கட்டத் தொடங்கி 1889ல் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. 18038 உருக்குத் துண்டுகளைக் கொண்டு 5 லட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் எடை 10,000 டன். ஏழு ஆண்டுகளுக்கொரு முறை பிரத்தியேகமான பெயின்ட் மஞ்சள் மற்றும் பிரௌன் கலவையில் மூன்று விதமாக (அடிப்பகுதிக்கு அடர்த்தியான நிறத்திலும், மேலே போகப்போக அடர்த்தி குறைந்த நிறத்திலும்) கையினால் பூசப்பட்டு பராமரிக்கப் படுகிறது. ஒவ்வொன்றையும் எங்கள் பயண மேலாளர் நவீன் அழகாக விளக்கினார்.

கட்டணம் செலுத்தி வரிசையில் காத்திருந்து மின்தூக்கியில் ஏறினோம். அது இரண்டாம் அடுக்கில் எங்களை இறக்கி விட்டது. சுற்றிச் சுற்றி வந்து கண்ணாடித் தடுப்பின் வழியே தெரிந்த பாரீஸின் அழகைப் பார்வையால் பருகினோம். ஒரு பக்கம் சீன் நதியும், அதன் நடுவே மிதக்கும் படகுகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. மற்ற பக்கம் எங்கு திரும்பினாலும் கான்கிரீட் காடுகள்! பசுமை கொஞ்சமே கொஞ்சம் தெரிந்தது.

புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மற்றொரு மின்தூக்கியில் ஏறி மூன்றாவது அடுக்குக்கு வந்தால் கைக்கெட்டும் தூரத்தில் மேகம்! சிலுசிலுவென்று காற்று வீச சீன் நதியும், அதன் குறுக்காக வரிசையான பாலங்களும் பொம்மை போல் குட்டியாய்த் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் காங்கிரீட் காடுகளின் மினியேச்சர் வடிவம்! மனதில் இனம்புரியாத பரவசம். உலகின் பேரதிசயத்தின் உச்சியில் நின்று பாரீஸ் நகரத்தைப் பார்க்கும்போது பிரமிப்பும், மகிழ்ச்சியும் மனதில் பிரவாகமாகப் பொங்கியது. அங்கிருந்த உணவகத்தில் காபி குடித்தால் கட்டுப்படியாகாதென்றுகையோடு கொண்டு போயிருந்த தேநீரைப் பருகினோம். அது ஆறிப்போயிருந்தாலும் உலக பிரம்மாண்டத்தில் நின்று பருகுவது ரசனை மிக்கதாயிருந்தது.

இதனை வடிவமைத்த Gustave Eiffel அவருக்கென்று இத்தளத்தில் கட்டப்பட்டுள்ள அறைக்குத் தன் நண்பர்களை அழைத்து வருவாராம். அங்கே வந்த நண்பர்களில் தாமஸ் எடிசனும் ஒருவராம். மனமேயில்லாமல் கீழிறங்கி Gustave Eiffel சிலையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். எங்கள் குழுவினர் அத்தனை பேரையும் அந்த பிரம்மாண்ட கோபுரத்தின் கீழே ஜானகி டூர்ஸ் ரமேஷ் புகைப்படமும், வீடியோவும் எடுத்தார். இந்திய உணவகத்துக்குக் கிளம்பினோம். அங்கே சுடச்சுட ரசத்தோடு சாப்பாடு தயாராக இருந்தது. வட இந்திய உணவகத்தில் ரசம் எப்படி என்று பார்த்தால் நம்ம ஜானகி டூர்ஸ் ப்ரியா ஏற்கனவே அவங்களுக்கு ரசம் recipe அனுப்பி செய்யச் சொல்லி இருக்காங்க! தமிழன்டா! உணவகங்களில் சாப்பிட்டு முடித்து வரிசையாக டாய்லட் போய் நாற்பத்தோரு யூரோக்களை மிச்சப்படுத்தினோம். இந்தியன்டா! எங்கள் ஓட்டுநர் ஜேக் நம்ம உணவைக் கண்ணீர் வழியச் சாப்பிட்டார். அடுத்த நாளிலிருந்து எங்க Tour manager நவீன் அவருக்கென்று பிரத்தியேகமாக non spicy food ரெடி பண்ணச் சொல்லி விட்டார்.

ஆர்க் டி டிரியோம்ப் (Arc de Triomphe)

மதிய உணவுக்குப் பின் city tour க்கு பஸ்ஸில் கிளம்பினோம். தெளிவாகச் சொல்லும் நவீன் இருந்தாலும் பிரான்ஸ் நாட்டு வழிகாட்டி தான் ஊரைச் சுத்திக் காட்டணுமாம். அதனால் Irni என்னும் ஃபிரெஞ்சுப் பெண் பஸ்ஸில் ஏறினார். இந்தியா கேட் போல் தோற்றமளிக்கும் Arc de Triomphe பேரரசர் நெப்போலியனால் 1806ல் கட்ட ஆரம்பித்து 1836ல் கட்டி முடிக்கப்பட்டது. போரில் வீர மரணமடைந்த பிரெஞ்சு ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் உச்சிக்குச் செல்ல வேண்டுமெனில் முன்னரே பதிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு ஏறத்தாழ பத்து யூரோ நுழைவுக்கட்டணம். அதன் மேல் தளத்திலிருந்து பார்த்தால் சீராக வடிவமைக்கப்பட்டுள்ள 12 பெருஞ்சாலைகளும் 360 டிகிரியில் தெரியும். இதில் ஒரு சிறு அருங்காட்சியகம் இருக்கின்றது. மாலை தோறும் இதன் மேல் தளத்தில் ஏற்றப்படும் தீபம் அணையாத சுடருடன் விளங்குகிறது. நாங்க அந்த வளைவுக்கு முன்னே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பாரீஸ் வீதிகளைப் பார்க்கும்போது பாண்டிச்சேரி நினைவுக்கு வந்தது.

சூட்கேஸ் வடிவக் கட்டிடம், அகழியோடு காட்சி தந்த பண்டைய கோட்டை, Notre Dame Cathedral of Paris, Louvre Museum என்று பேருந்திலிருந்த படியே பார்த்தோம். ஒவ்வொன்றுக்கும் இறங்கி ஏற நேரமில்லை. எங்கும் குப்பையைப் பார்க்க முடியவில்லை. மக்கள் பொதுவாக நடந்தோ, சைக்கிளிலோ செல்வதால் வாகன நெரிசல் இல்லை, சத்தமில்லை, புகையில்லை.

இங்கே எல்லாரும் பிரெஞ்சு மட்டுமே பேசறாங்க. நம்ம ஊர்ல ஆட்டோக்காரர் முதல் காய்கறிக்காரர் வரை ஆங்கிலம் புரிந்து கொள்வார். இங்க ‘எங்க ஊருக்கு வந்தால் எங்க மொழி பேசுங்க!’ன்னு ஆங்கிலம் பேசுவதில்லை. நகரை வலம் வந்து முடித்த பின் வணிக வளாகத்தில் எங்களை இறக்கி விட்டபின் உள்நாட்டு வழிகாட்டி விடைபெற்றார். வாசனை திரவியம் வாங்க ஆர்வத்தோடு உள்ளே நுழைந்தோம். (நான் சும்மா பார்க்க மட்டுமே)

அங்கேயிருந்த ஒரு ஒடிசலான பெண் எங்களை பாதாளத்துக்கு அழைத்துச் சென்றாள். அது வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையாம். பாவம், கஷ்டப்பட்டு அரை மணி நேரமாக தண்ணி குடிக்காமல் விளக்கினாள். இருட்டான பாதாள அறையை ஒட்டி ஒரு திறந்த முற்றம். நம் காரைக்குடி செட்டிநாடு முற்றம்போல் இருந்தது.

மேலே சுட்டிக்காட்டி விளக்கினாள். அதில் ஜீபூம்பா ஜாடி போல் பெருசு பெருசாய் அடுக்கி வைத்திருந்தார்கள். நான் அவள் சொல்வதைக் கவனிக்கவில்லை. கீழே விதவிதமான குமிழ்களில் வாசனை திரவியங்கள் ஊற்றி விலை ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். தலை சுற்றிப் போனது. சும்மாவே எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வம் கிடையாது. விலையைப் பார்த்தபின் அதைத் திரும்பிப் பார்க்கவேயில்லை. வாசனையில் ஆசையுள்ள சிலர் வாங்கிக் கொண்டார்கள்.

அடுத்தது தங்க கோபுரம் பார்க்கலாம்...

வாசகர் பங்களிப்பு

விடைகள் / Answers

சொல்வகை  - Match the words

வகைகள்  - Categories

எழுதுபொருட்கள்

(Writing Materials)

போக்குவரத்து சாதனங்கள் 

Varieties of transport

நகைவகைகள் 

Jewelry types

காய்கறிகள்

Vegetables

1

காகிதம் (Paper)

சைக்கிள் (Cycle)

தங்கம் (Gold)

மிளகாய் (Chilli)

2

பேனா  (Pen)

கார் (Car)

வெள்ளி (Silver)

கத்திரிக்காய் (Eggplant)

3

புத்தகம் (Book)

விமானம் (Aircraft) 

பிளாட்டினம் (Platinam) 

வெண்டைக்காய்

(Lady’s finger) 

4

பென்சில் (Pencil ) 

கப்பல் (Ship)

வைடூரியம் (Vaidooriyam) 

புடலங்காய்

(Snakeguard)

தமிழ் விடுகதைகள் – Tamil Riddles 

  1. முதுகு – Back (Body) 

  1. பென்சில் – Pencil 

  1. சிலந்தி – Spider

  1. பூட்டு - சாவி – Lock and Key 

  1. தும்பிக்கை – Trunk (Elephant)

மூளைக்கு வேலை

சை

1

ஞ்

சி

2

ட்

லி

3

டை

வி

டா

து

4

ந்

தி

ரி

ம்

5

ந்

தி

சா

ம்

6

எழுத்துப் பயிற்சி - ட்

Let's learn to write

ட்
Pronunciation help t as in cat d as in road
Group Vallinam
Examples பட்டம் - Kite வண்டி - Cart
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்
ட்

© 2026 Tamil Thoodhu · tamilthoodhu.com

வாசகர் கருத்துக்கள்0