இதழ்கள்
தமிழ் தூது · Tamil Thoodhu

நீங்கள் எங்கிருந்தாலும் — தமிழுடன் இணைக்கும் பாலம்

ஜூன் 2026 · June 2026 · Issue 12
சிறப்பம்சங்கள் · Highlights
Wherever you are — your bridge to Tamil roots — cover

ஆசிரியர் பக்கம்

Dr. Mohana Suhadev Ph.D. (Editor)
முனைவர் மோகனா சுகதேவ் (ஆசிரியர்)Dr. Mohana Suhadev Ph.D. (Editor)

அன்பான வாசகப் பெருமக்களே!

உங்களின் பேராதரவுடன் “தமிழ்த் தூது” மின்னிதழ் தனது மூன்றாவது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் நமது முதல் “தமிழ்த் தூது” இணைய இதழ் வெளியானது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்பட்ட இணைய இதழ், வாசகர்களின் விருப்பத்தினால் 2026 ம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் மாதம் ஒருமுறையாக மாற்றப்பட்டது. அதனால் வாசகர்களும் மிக விருப்பமுடன் தங்கள் படைப்புகளை பெருமளவில் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

அத்துடன் நம் “தமிழ்த் தூது” இணைய இதழ் இனிமேல் tamilthoodhu.com என்ற இணைய முகவரியில் வெளிவரவுள்ளது. இந்த முறையில் வாசகர்கள் இதுவரை வந்துள்ள அனைத்து இதழ்களையும் படிக்க முடியும். அத்துடன் உங்கள் பின்னூட்டங்களையும் உடனே பதிவு செய்ய முடியும். அதிக அளவில் படைப்புக்களை அனுப்பும் முதல் ஐந்து வாசகர்களின் பெயர்களையும் நாங்கள் வெளியிடுவதால் உங்கள் பெயரையும் அந்தப் பட்டியலில் காண முந்துங்கள்.

ஆனால் வாசகர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியல், மதம் சம்பந்தப்பட்ட செய்திகளோ, கட்டுரைகளோ தமிழ்த் தூது இதழில் இடம் பெறுவதில்லை.

நமது தமிழ்த் தூது முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிடப்பட்டு வருகிறது. வாசகர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று முடிந்த அளவில் நம் வாசகர் வட்டத்தை விரிவடையச் செய்து, நம் இணைய இதழை தமிழ் கூறும் நல்லுலகம் படித்துப் பயனடையச் செய்ய வேண்டும். உங்களின் படைப்புக்களை hitamilthoodhu@gmail.com என்ற முகவரிக்கு பெயர், முகவரி, போன் நம்பர் மற்றும் சிறு போட்டோவுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முனைவர் மோகனா சுகதேவ் (ஆசிரியர்)

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு பல ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் எழுத்துப்பணியில் ஈடுபட்டவர். தற்பொழுது தமிழ்த் தூது இதழின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

குறளின் குரல்

Thiruvalluvar
திருவள்ளுவர்Thiruvalluvar

அதிகாரம் 13: அடக்கமுடைமை · குறள் 129

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

Theeyinaal Sutta-pun Ullaarum Aaraadhe

Naavinaar Sutta Vadu

நெருப்பினால் உண்டான காயம் உடலில் வடுவை ஏற்படுத்தினாலும், அது காலப்போக்கில் உள்ளுக்குள் ஆறிவிடும். ஆனால் ஒருவருடைய மனம் கடுமையான சொற்களால் புண்படுத்தப்பட்டால், அந்த வடு ஒருபோதும் ஆறாது.

நெருப்பு சுட்ட புண் உடலில் வடுவாக இருந்தாலும், காலப்போக்கில் உள்ளே ஆறி விடும். ஆனால், கடுமையான சொற்களால் ஒருவருடைய மனதைச் சுட்டால், அந்த வடு ஒருபோதும் ஆறாது.

புள்ளிமானின் கர்வம்

ஒரு காட்டில் மிகவும் அழகான புள்ளிமான் ஒன்று இருந்தது. அது எப்போதும் மிகவும் துள்ளலுடன் விளையாடிக் கொண்டு இருக்கும். அதே காட்டில் வசிக்கும் முள்ளம்பன்றி ஒன்றுக்கு அந்த மானை மிகவும் பிடிக்கும். அது தினம்தவறாமல் மான் விளையாடும் அழகை ரசித்து லயித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். அதற்கு வெகு நாளாக எப்படியாவது மானிடம் பேசி நட்புக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், புள்ளிமான் தன்னுடன் பேசுமா என்று தயக்கமாக இருந்தது. ஒருநாள் தன் தயக்கத்தை விட்டு மானின் அருகில் சென்ற முள்ளம்பன்றி “தோழா! எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். நீ விளையாடுவதைப் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும்” என்றது. அதைக் கேட்டு கர்வத்துடன் அதைப் பார்த்த புள்ளிமான், “என் அழகைப் பற்றி நீ சொல்ல வேண்டிய தேவை இல்லை. அது எனக்கே தெரியும். ஆனால் எனக்கு உன்னைக் கண்டாலே பிடிக்காது. உடல் முழுக்க முள்ளாக இருக்கும் உன்னைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. எனக்கு உன்னுடன் பேசவோ, பார்க்கவோ பிடிக்கவே இல்லை” என்று முகத்தைச் சுழித்துக் கொண்டு முள்ளம்பன்றியை வார்த்தைகளால் மிகவும் காயப்படுத்தியது. இதனால் மனவேதனை அடைந்த முள்ளம்பன்றி மௌனமாக விலகிச் சென்றது. அடுத்த நாள் மான் விளையாடிக் கொண்டிருப்பதைத் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது புதர் ஒன்றின் மறைவில் இருந்த வேடன் ஒருவன் மானை நோக்கி அம்பு எய்த தயாராக இருப்பதைக் கண்ட முள்ளம்பன்றி ஓடிச்சென்று வேடனின் காலில் தன் முள்ளால் உரசியது. வலியால் கத்திய வேடன் அம்பால் முள்ளம்பன்றியின் காலில் அடிக்க, அதுவும் வலியுடன் ஓடியது. சத்தம் கேட்டு அங்கு திரும்பிப் பார்த்த புள்ளிமான் வேடனைக் கண்டதும் ஓடி மறைந்தது. அடுத்த நாள் விளையாட வந்த மான் முள்ளம்பன்றியைக் காணாததால் அதன் இருப்பிடம் தேடிச் சென்றது. அங்கு முள்ளம்பன்றி காலில் வலியுடன் படுத்திருப்பதைக் கண்டது. “என்னால்தானே உனக்குக் காயம் ஏற்பட்டது. வலிக்கிறதா?” என கேட்டது. அதற்கு முள்ளம்பன்றி, “இது உடம்பில் ஏற்படும் காயம். நாள்பட நாள்பட ஆறிவிடும். ஆனால் நீ பேசிய வார்த்தைதான் எனக்கு மனதில் மிகவும் ரணமாக வலிக்கிறது.” அதனைக் கேட்ட புள்ளிமான் தன் தவறை உணர்ந்தது. உடம்பில் ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் வார்த்தையால் ஏற்படும் காயம் மறையாமல் நிலைத்திடும் என்பதை உணர்ந்து, மனதார முள்ளம்பன்றியிடம் மன்னிப்புக் கேட்டு விடைபெற்றது.

உடம்பில் ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் வார்த்தையால் ஏற்படும் காயம் மறையாமல் நிலைத்திடும்.

“திருக்குறள் கதைகள் 50” – லதாவின் புத்தகம்

இலக்கியச் சோலை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (27 ஜூலை 1876 – 26 செப்டம்பர் 1954) 20-ஆம் நூற்றாண்டில் கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவர் பக்திப் பாடல்கள், இலக்கியக் கவிதைகள், வரலாற்றுத் தழுவல்கள், சிறார் பாடல்கள், இயற்கைக் கவிதைகள், சமூகப் பாடல்கள் மற்றும் தத்துவக் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை வழங்கியுள்ளார்.

இயற்கை

இயற்கை உலகம் எவ்வாறு ஒரு தொடர்ச்சியான சங்கிலியாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய கவிஞரின் மென்மையான நினைவூட்டல். குளிர்ந்த மண், துளிர்க்கும் புல், மேயும் பசு, சுரக்கும் பால் என ஒவ்வொரு இணைப்பும் — இவை அனைத்திற்கும் காரணமான மழையில் தொடங்கி, வீட்டில் நாம் பகிர்ந்து கொள்ளும் ஒரு எளிய காப்பியில் நிறைவடைகிறது.

வானம் கறுத்தால் மழை பெய்யும்,

மழை பெய்தால் மண் குளிரும்;

மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்,

புல் தழைத்தால் பசு மேயும்;

பசு மேய்ந்தால் பால் சுரக்கும்.

பால் சுரந்தால் கன்று குடிக்கும்;

கன்று குடித்து மிஞ்சியதைக்

கறந்து கொண்டு வந்திடலாம்;

காப்பியில் விட்டுக் குடித்திடலாம்.

நமது பண்பாடு

பரமபத விளையாட்டு (ஏணியும் பாம்பும்)

ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும். பொதுவாக 8×8, 10×10, 12×12 எண்ணிக்கையில் சதுரக் கட்டங்கள் இருக்கும். சில கட்டங்களை ஏணிகளும், பாம்புகளும் இணைக்கும். ஏணிகள், பாம்புகளின் எண்ணிக்கை, அமைப்பு போன்றவையும் பலகைக்குப் பலகை வேறுபடலாம்.

வாழ்க்கைத் தத்துவம்

இந்த விளையாட்டு நமது திறமையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக, பகடையை உருட்டும்போது விழும் எண்களைப் பொறுத்தது. இதில் பல கட்டங்களை ஒரே துள்ளலில் கடந்து மேலேறுகிற ஏணி யோகமும் உண்டு; இருப்பதையும் இழந்து பாம்பு வழியாக கீழிறங்குகின்ற கஷ்ட நிலையும் உண்டு. வாழ்க்கையும் இந்த விளையாட்டைப் போலத்தான் — திடீரென்று உச்சத்தில் சென்று விடும்; நாம் நினைத்துப் பார்க்காத வேளையில் சரிந்து கீழே விழுந்து விடும்.

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொருட்டு, இவ்விளையாட்டைப் பெரும்பான்மையான வைணவர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்பவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்ற கருத்தையும் வலியுறுத்தும் பொருட்டு, இவ்விளையாட்டு அன்று வைணவர்களால் விளையாடப்படுகிறது.

விளையாடும் முறை

தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் காய்களை நகர்த்துவதே விளையாட்டின் அடிப்படை. இரண்டு முதல் பலர் வரை விளையாடலாம். இதை விளையாட சிறப்புத் தேர்ச்சிகள் எதுவும் தேவையில்லை. பொதுவாக, தொடங்குவதற்கு ஒருவர் தாயக்கட்டையில் “1” பெற வேண்டியிருக்கும். பின்னர் மாறிமாறித் தாயக்கட்டைகளை உருட்டிக் கிடைக்கும் எண்களுக்கு ஏற்ப காய் நகர்த்தப்படும். ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும், பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்தத் தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றியடையும்.

உணவே மருந்து

ஆப்பம் மற்றும் இடியாப்பம் ஆகியவை தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில், மிகவும் பிரபலமான பாரம்பரியமான, நீராவியில் வேகவைக்கப்படும் காலை அல்லது இரவு உணவு வகைகளாகும். இவை அரிசி மாவில் செய்யப்படுகின்றன. ஆவியில் வேகவைப்பதால் இவை ஆரோக்கியமான உணவாகும்.

சங்க காலத்திலிருந்தே ஆப்பம் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 300-ஆம் ஆண்டு வரையிலான பண்டைய தமிழ்க் கவிதைகளில் ஆப்பம் பரவலாக இடம்பெற்றிருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்பம்

ஆப்பம் என்பது மென்மையான மையப்பகுதியும், மொறுமொறுப்பான ஓரங்களையும் கொண்ட ஒரு கிண்ண வடிவ உணவு.

அரிசி மாவு, தேங்காய் மற்றும் ஈஸ்ட் அல்லது சமையல் சோடா சேர்த்து புளிக்கவைக்கப்பட்ட மாவு பயன்படுத்தப்படுகிறது. ஆப்பச்சட்டியில் மாவை ஊற்றி, சுழற்றி வட்டமான வடிவம் பெறச் செய்து வேகவைக்கப்படுகிறது.

தேங்காய்ப்பால் (Sweet Coconut Milk) அல்லது காரமான காய்கறி குருமாவுடன் (Veg Kurma) பரிமாறப்படுகிறது.

இடியாப்பம்

இடியாப்பம் (“நூல் புட்டு” என்றும் அழைக்கப்படுகிறது) மெல்லிய நூடுல்ஸ் போன்ற வடிவத்தில் இருக்கும்.

கொதிநீரில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து, இடியாப்ப உரலில் (Press) இட்டு இட்லி தட்டுகளில் நூடுல்ஸ் வடிவில் பிழிந்து நீராவியில் வேகவைக்கப்படுகிறது.

தேங்காய்ப்பால், கடலை கறி, அல்லது உருளைக்கிழங்கு ஸ்டூவுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • பச்சை அரிசி மாவு

  • தேங்காய் / தேங்காய்ப்பால்

  • ஈஸ்ட் / சமையல் சோடா

  • கொதிநீர் மற்றும் உப்பு

செய்முறை

  • ஆப்பம் செய்முறை: அரிசி மாவுடன் தேங்காய், ஈஸ்ட்/சமையல் சோடா மற்றும் உப்பு சேர்த்து மாவை புளிக்க வைக்கவும். ஆப்பச்சட்டியில் மாவை ஊற்றி சுழற்றி மூடி வேகவைக்கவும். மையம் மென்மையாகவும் ஓரங்கள் மொறுமொறுப்பாகவும் வரும்.

  • இடியாப்பம் செய்முறை: கொதிநீரில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்து, இடியாப்ப உரலில் இட்டு இட்லி தட்டுகளில் நூடுல்ஸ் வடிவில் பிழிந்து நீராவியில் வேகவைக்கப்படுகிறது.

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

  • மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
  • பொடுகைத் தடுக்க வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
  • தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்து, அந்த எண்ணெயைத் தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
  • கடலை மாவு மற்றும் வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் முகப்பருக்கள் நீங்கும். முகம் சொரசொரப்பு மற்றும் எரிச்சல் தணியும்.
  • பசும்பாலில் சிறிதளவு ஓமம் போட்டுக் காய்ச்சி அடிக்கடி காலையில் குடிக்க தொண்டை வலி, தொண்டை அடைத்தல் நீங்கும்.
  • இஞ்சியைப் பிழிந்து கொஞ்சம் உப்புப் போட்டுக் குடித்தால், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு நிற்கும்.

படிக்கலாம் வாங்க

சீனத்துத் தெனாலிராமன் கதைகள்

  • நூலாசிரியர்: எ. ஜோதி

  • பதிப்பகம்: நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி

  • பக்கங்கள்: 96

  • விலை: ரூ. 50.00

இந்த கதைப் புத்தகம் “சிறார் கதை களஞ்சியம்” என்ற வரிசையில் முப்பத்து நான்காவது நூல் ஆகும்.

கதை உலகில் ஆசிரியர் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தெனாலிராமன் கதைகள் போன்றே உலகின் பல நாடுகளிலும் கதைகள் இருப்பதை அறிந்து, அவற்றை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்.

சீன நாட்டின் வட கிழக்கில் சின்சியான் பகுதியில் வைகரி (Uyghur) இன மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களிடையே “ஈபாண்டி” என்பவனைப் பற்றி அதிகம் கதைகள் பேசப்பட்டு வருகின்றன.

அறிவுக்கூர்மை மற்றும் நகைச்சுவை உணர்வுகள் கொண்டவன் இவன். இரக்கப் பண்பும் இவனுக்கு உண்டு. இவனுக்கு “நஸிருத்தீன்” என்ற பெயரும் உண்டு.

சீனத்துக் கதைகள் என்பதால் இந்த கதைகளில் வரும் அரசனும், செல்வர்களும் கொடியவர்களாகவே காண்பிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் கொடுமைகளில் இருந்து ஏழை, எளிய மக்களை இவன் எப்படி தன்னுடைய அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி காப்பாற்றுகிறான்; மேலும், அவர்களுக்கு எப்படி நல்ல பாடங்களை கற்றுத் தருகிறான் என்ற வகையில், ஆசிரியர் மிகவும் அழகாகப் பதினான்கு கதைகளாகத் தந்துள்ளார். புதிர் கதைகள் மூளைக்கு வேலை கொடுத்து யோசிக்க வைக்கின்றன.

சிறுவர்கள் மட்டும் அல்லாமல் பெரியவர்களும் படித்து மகிழ்வதற்கான ஒப்பற்ற நூல் இது.

புதிர் கதைகள் மூளைக்கு வேலை கொடுத்து யோசிக்க வைக்கின்றன.

உலகளாவிய தமிழ் செய்திகள்

உலக செவிலியர் தினம்: ஜெத்தாவில் செவிலியர்களைக் கௌரவித்த உணவகம்

13 May 2026

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, ஜெத்தா ஷராபியாவில் உள்ள Chennai Express Restaurant சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. செங்கடல் தமிழ்ச் சமூக தன்னார்வலர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் இந்திய செவிலியர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.

Ulaga Tamilar / Gulf / News / “Ulaga Sevilyar Dhinam: Jeddhaavil Sevilyargalai Gauravitha Unavagam”.


நெதர்லாந்து பயணம்: பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட 11-ம் நூற்றாண்டு சோழர் தாமிர பட்டயங்கள்

பிரகமர் மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது, 11-ம் நூற்றாண்டு சோழர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற ஆனைமங்களம் தாமிர தகடுகள் (லெய்டன் தகடுகள்) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை கடந்த 300 ஆண்டுகளாக நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

https://www.dailythanthi.com/news/world/netherlands-hands-back-chola-dynasty-copper-plates-to-india


சமூக ஊடகங்களில் வைரலாகும் தமிழகக் கோயிலின் 1000 ஆண்டுகள் பழமையான உடற்கூறியல் சிற்பங்கள்

தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள கர்ப்பகால உடற்கூறியல் மற்றும் தாயின் கருவில் வளரும் குழந்தையை விளக்கும் மிகத் துல்லியமான பண்டைய சிற்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நவீன மருத்துவ ஸ்கேனிங் தொழில்நுட்பங்கள் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உள்ள தமிழர்களின் உடற்கூறியல் அறிவுக்கு இச்சிற்பங்கள் சான்றாகும்.

https://www.instagram.com/p/DYhjIlNCY9u/?img_index=5&igsh=MXMxbThub2FxOXVuMQ%3D%3D

பூந்தளிர் — சிறுவர் பகுதி

சொல் அகராதி

  • அல்லல் (Allal) — துன்பம் (Thunpam)

  • அலுவல் (Aluval) — தொழில் (Thozhil)

  • அவகாசம் (Avakasam) — தக்க தருணம் (Thakka Tharunam)

  • அழகு (Azhagu) — சிறப்பு (Sirappu)

  • அழை (Azhai) — கூப்பிடு (Koopidu)

எதிர்ச்சொற்கள்

  • கோபம் × பொறுமை (Porumai)

  • தூரத்தில் × அருகில் (Arukil)

  • இரைச்சல் × மௌனம் (Mounam)

  • வெப்பம் × குளிர் (Kulir)

  • பிறப்பு × இறப்பு (Irappu)

விடுகதைகள்

  1. பார்க்க அழகு; பாம்புக்கு எதிரி — அது என்ன? (மயில்)

  2. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகிறான் — யார் அவன்? (கரண்டி)

  3. வெள்ளை ராஜா அணிந்திருப்பது கருப்பு கோட்டு — யார் அவர்? (உளுந்து)

  4. அவள் பச்சை நிறமுள்ள அழகி. சாயம் பூசாமல் அவளுக்கு சிவந்த உதடு — யார் அவள்? (கிளி)

  5. ஒரு வீட்டிற்கு இரண்டு வாசல் படிகள் — அவை என்ன? (மூக்கு)

சொல் பொருத்துக

எழுதுபொருட்கள்

  • காகிதம்

  • பேனா

  • புத்தகம்

  • பென்சில்

போக்குவரத்து

  • சைக்கிள்

  • கார்

  • விமானம்

  • கப்பல்

நகைவகைகள்

  • தங்கம்

  • வெள்ளி

  • பிளாட்டினம்

  • வைடூரியம்

காய்கறிகள்

  • மிளகாய்

  • கத்திரிக்காய்

  • வெண்டைக்காய்

  • புடலங்காய்

சொல் புதிர்

  • 1. விருப்பம் — ஆசை

  • 2. இரவு நேர பறவை — ஆந்தை

  • 3. சாப்பாடு — ஆகாரம்

  • 4. நகைவகை — ஆபரணம்

  • 5. வசதியானது — ஆடம்பரம்

  • 6. எடுத்துக் கொள்ளுவது — ஆக்கிரமிப்பு

கதைகள்

முடிந்தளவு உதவி

— தமிழ்செல்வன் ரத்ன பாண்டியன்


முடிந்தளவு உதவி

ஆண்டு விடுமுறை ஆரம்பித்தாகி விட்டது. குடியிருப்பில் பத்து–பன்னிரெண்டு சிறுவர்கள் கோகோ விளையாட்டு — “ஓடு… பிடி… டக்குன்னு ஓடணும்டா” — என கத்திக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தார்கள். பார்க்க ரொம்ப ஜாலியாக இருந்தது. பள்ளிக்கூடங்களுக்குத் தேர்வு முடிந்து விட்டாலும், கல்லூரித் தேர்வுகள் ஆரம்பிக்காத காரணத்தால் இவர்களது விளையாட்டு கல்லூரி போகும் ஒரு மாணவிக்கு ரொம்ப இடைஞ்சலாக இருந்தது. அவளது அப்பா மாணிக்கவாசகர் வெளியே வந்து பசங்களைக் கன்னா பின்னா என திட்ட ஆரம்பித்தார். திட்டு வாங்கியதில் ஷ்ரவணும் ஒருவன். பசங்கள் முணுமுணுத்துக் கொண்டே வேறு இடம் நோக்கி நகர்ந்தனர்.

அடுத்த நாள், மாணிக்கவாசகர் ரேஷன் கடையில் பத்து கிலோ அரிசியும், இரண்டு கிலோ சீனியும் வாங்கிக் கொண்டு, தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக சைக்கிளில் வலம் வந்த ஷ்ரவண், இவர் தூக்க முடியாமல் வேர்த்து விறுவிறுத்து வருவதைக் கண்டவுடன், சைக்கிளில் இருந்து இறங்கி, “அங்கிள், அரிசியை நான் சைக்கிள் பின்னாடி வைத்து உங்க வீட்டிலே சேர்த்துடறேன்; நீங்க மெதுவா வாங்க” என அவரது சம்மதத்துக்காக முகத்தையே பார்த்தான். மாணிக்க வாசகருக்கு முதல் நாள் நினைவு மனசுக்குள் கொப்பளித்தது. அரிசியைச் சைக்கிளின் பின்புறம் வைத்துக் கட்டினார். “உனக்கு என் மேல் கோபம் இல்லையா?” என ஷ்ரவண் முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டார். “அதெல்லாம் அப்பப்ப வரும். பிறகு அதையே நினைச்சுக்கிட்டிருப்பதில்லை அங்கிள். முடிஞ்சளவு மற்றவர்களுக்கு உதவி பண்ணனும்னு எங்கப்பாவும் அம்மாவும் அடிக்கடி சொல்வாங்க, அதான்” என புன்னகைத்து விட்டுச் சைக்கிளில் ஏறினான். மாணிக்கவாசகர், கோப நிகழ்வுகளை மனசுக்குள் சுமப்பது பெருங்கெடுதல்தான் என நினைவூட்டிய ஷ்ரவணையும், உதவும் மனதை அவனுக்குக் கற்றுத் தந்த அவனது பெற்றோரையும் மனசுக்குள் பாராட்டினார்.

சுண்டக்கா பிம்ரக்

— லால்குடி வெ நாராயணன்


சுண்டக்கா பிம்ரக்

“என்னது… சுண்டக்கா பிம்ரக்கா? அப்படினா என்னப்பா?” — பத்து வயது பேரன் வருண் வியப்புடன் கேட்டான்.

தாத்தா ராமசாமி வாய்விட்டுச் சிரித்தார். “அது ஒரு மந்திரச் சொல்டா வருண். நாம எப்போதெல்லாம் ஒரு விஷயத்தைப் பெருசா நினைச்சு பயப்படுறோமோ, அப்போ இந்தச் சொல்லைச் சொன்னா அந்தப் பயம் சுண்டக்காய் மாதிரி சின்னதா ஆகிடும். அதுதான் இந்த 'பிம்ரக்' மந்திரம்!”

ராமசாமி ஒரு நகைச்சுவை எழுத்தாளர். எதையுமே தமாஷாகச் சொல்லி மற்றவர்களைச் சிரிக்க வைப்பதில் கில்லாடி. அன்று மாலை வருண் தனது கணக்குத் தேர்வை நினைத்து அழுது கொண்டிருந்தான். “தாத்தா, எனக்கு இந்த மேத்ஸ் (Maths) வரவே மாட்டேங்குது. நாளைக்கு எக்ஸாம்ல தோத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்கு” என்றான்.

ராமசாமி அவன் அருகில் அமர்ந்து, “வருண், இங்க பாரு; இந்த மேத்ஸ் ஒரு பெரிய ராட்சசன் கிடையாது. இது வெறும் 'சுண்டக்கா பிம்ரக்' விஷயம் தான். நீ கணக்கைப் பார்த்துப் பயப்படாம, அதை ஒரு விளையாட்டுன்னு நினைச்சுப் பாரு” என்றார். அவர் சொன்ன அந்த விசித்திரமான வார்த்தையைக் கேட்டு வருணுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

மறுநாள் வருண் தேர்வு எழுதி விட்டுத் திரும்பியபோது முகம் மலர்ச்சியாக இருந்தது. “தாத்தா! நீங்க சொன்னது நிஜம்தான். ஒவ்வொரு கஷ்டமான கேள்வியைப் பார்க்கும்போதும் மனசுக்குள்ள 'சுண்டக்கா பிம்ரக்'னு சொல்லிக்கிட்டேன். பயம் போயிடுச்சு, கணக்கும் ஈஸியா வந்துடுச்சு!” என்றான் குதித்துக் கொண்டே.

அந்தச் சமயம் ராமசாமியின் மகன் ரமேஷ் கவலையோடு உள்ளே வந்தான். “என்னப்பா ஆச்சு?” என்று ராமசாமி கேட்க, “ஆபீஸ்ல ஒரு பெரிய புராஜெக்ட் (Project) கை நழுவிப் போயிடுச்சுப்பா. ரொம்ப நஷ்டம் வரும் போல இருக்கு” என்று ரமேஷ் புலம்பினான்.

ராமசாமி மெல்ல அவன் தோளைத் தொட்டு, “ரமேஷ், வாழ்க்கைங்கிறது ஏறுமுகம், இறங்குமுகம் நிறைந்தது தான். இன்னைக்குப் போனது நாளைக்கு வரும். இப்போ இந்த நஷ்டத்தை நினைச்சு வருத்தப்படுறது உன் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். இதையும் ஒரு 'சுண்டக்கா பிம்ரக்'னு நினைச்சுட்டு அடுத்த வேலையைப் பாரு” என்றார்.

ரமேஷ் முதலில் யோசித்தான். பிறகு தன் தந்தையின் அந்த விடாப்பிடியான பாசிட்டிவ் (positive) மனநிலையைப் பார்த்துச் சிரித்து விட்டான். “ஆமாம்பா, இது வெறும் சுண்டக்காய் விஷயம் தான். நான் ஏன் இதை இவ்வளவு பெருசா எடுத்துக்கிட்டு கவலைப்படணும்?” என்று உற்சாகமானான்.

ராமசாமி தன் டைரியைத் திறந்து அன்று ஒரு குறிப்பு எழுதினார்: “பிரச்சனைகளை ராட்சசனாகப் பார்த்தால் நாம் சிறியவர்கள் ஆகிவிடுவோம்; பிரச்சனைகளைச் 'சுண்டக்காய்' ஆகப் பார்த்தால் நாம் அதன் மேல் ஏறி நின்று ஜெயிப்போம்!”

அருவி

— மாலா மாதவன்

வாசகர் பக்கம்

அருவி

கலையானது கவிபாடுது களையானதாம் அருவி
மலைமீதிலே மணியாரமாய் மடிசாய்ந்ததாம் அருவி
அலைபோலவே வரிவாகவே அகம்தொட்டதாம் அருவி
தலைசாய்த்திடும் தடம்பார்த்திடும் தணியாததாம் அருவி
குழலாட்டிடும் குளிராட்டிடும் குறும்பானதாம் அருவி
அழகானதாய் அணியாரமாய் அலையோசைபோல் அருவி
சுழன்றோடிடும் சுழித்தோடிடும் சுனையாகிடும் அருவி
உழவாளரும் உலவாளரும் உவந்தாடிடும் அருவி
எதுமூலமாம் அதுகாணவே அலைபாய்ந்திடும் அருவி
எதுவாகினும் எழில்மேவிடும் இசைபாடிடும் அருவி
மதுமோகன குழலோசையில் மனம்சாய்த்திடும் அருவி
புதுக்கோலமாய் புவிமீதினில் புதிதாய்விழும் அருவி
தொடர்மாமழை தொடும்போதினில் தொடர்ந்தாடிடும் அருவி
அடர்மாயிருள் அணியாகிட அசைந்தாடிடும் அருவி
திடமாமலை தலைவாரலாய் திகழ்ந்தோடிடும் அருவி
உடல்மீதினில் உறவாடிடும் உயிராகிடும் அருவி
தமிழ்பாடிடும் தரைமீதினில் தவழ்ந்தாடிடும் அருவி
தமிழ்போலவே தரமானது தடம்பார்த்திடும் அருவி
குமிழ்போலவே புரண்டோடிடும் குதித்தாடிடும் அருவி
அமிழ்ந்தாடுவீர் அசைந்தாடுவீர் அழகானதாம் அருவி


அத்தை ரகசியம்

— இந்து நடராஜன்

பங்குனி மாதம் வந்தாலே ஊரே திருவிழா கொண்டாட்டம் தான். தினமும் ஸ்வாமி காலை, மாலை இரு வேளையும் அழகழகான அலங்காரத்துடன் விதவிதமான வாகனத்தில் ஊர்வலமாக வந்து, தன்னைத் தேடி கோயில் வர முடியாத பக்தர்களுக்குக் காட்சி தருவார். அதிலும் நந்தி மேல் அமர்ந்த கோலமும், ரிஷப வாகனமும் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று தேர் முடிந்து வீட்டிற்கு வந்த விருந்தினர் யாவரும் கிளம்பி விட்டனர். என் கணவர் இரவுப் பணி என்று கிளம்பி விட்டார். மகன், ஏதோ புதுப் படம் இரவுக் காட்சி பார்க்க நண்பர்களுடன் போனதால், கேட்டைப் பூட்டச் சென்ற போது தான் வாசலில் கேட்டின் அருகே நின்றிருந்த அந்த வயதான மனுஷியைப் பார்த்தேன்.

அட, நான் யாரென சொல்லலையே? மயிலாப்பூர் சித்திரக் குளத்தில் கபாலி, கற்பகாம்பாள் பார்க்கவே வீடு வாங்கி குடி வந்தவள். “சம்பூர்ணம்” என்ற பெயரை சுருக்கி வீட்டில் “சம்பு” என்று கூப்பிடுவார்கள்.

அந்த மனுஷிக்கு எண்பது வயது மதிப்பிடலாம். கட்டியிருந்தது ஒரு சாதாரண நூல் புடவை. கழுத்திலோ காதிலோ எதுவும் இல்லாத மூளித் தோற்றம். ஆனால் முகத்தில் ஒரு ஒளி தெரிந்தது. “அம்மா, என் பெயர் ராஜலட்சுமி, உன்னோடு கொஞ்சம் தனியே பேச வேண்டும்” என்றார்கள்.

காலம் கெட்டுக் கிடக்கு. வீட்டில் யாரும் இல்லாத இரவு நேரத்தில், முன் பின் தெரியாத இந்த மனுஷியை வீட்டுக்குள் கூப்பிடலாமா, வேண்டாமா என்ற என் யோசனையை சரியாகப் புரிந்து கொண்டு, “இப்படியே நான் கேட்க வந்ததை கேட்கிறேன், மா. நீ பயப்படாதே. உன் கணவர் பெயர் சிதம்பரம் தானே” என்றார்கள்.

நான், “ஆமாம். அவரைத் தெரியுமா உங்களுக்கு?” என்றேன். “இல்லையம்மா, நான் தேர் பார்த்து விட்டுத் திரும்பும் வழியில் உன் கணவரைப் பார்த்தேன். அசப்பில் என் அப்பா ஜாடை இருந்தது. அவர் அப்பா பெயர் சந்திரசேகரா? உன் மாமனார், மாமியார், அவர்களின் அப்பா, அம்மா — யாவரும் எங்கே இருக்காங்க? எனக்கு அவங்களை உடனடியாகப் பார்க்கணும்.”

“ஆமாம் மா, சரியாச் சொல்றீங்களே. நீங்க அவருக்கு உறவா?” “என் மாமனார் சமீபத்தில் தவறிட்டார். மாமியார் இரண்டு வருடங்கள் முன்பு. அவங்க அப்பா, அம்மா யாரும் இப்போ உயிரோட இல்லை” என்றேன்.

“என்னன்னு சொல்றது, சொல்லவே நா கூசுது. நான் அவனுக்கு அத்தை உறவும்மா.”

“என்னது அத்தையா? அவங்க அப்பா இவர் ஒற்றைப் பிள்ளை என்று தான் என் திருமணத்தின் போது சொன்னார்கள். இந்த முப்பது வருட மண வாழ்க்கையில் இப்படி ஒரு அத்தை இருந்ததாக யாரும் சொல்லவே இல்லையே.”

“சிறு வயதில் என் வீட்டில் வேலை செய்த ராமன் என்பவரின் மேல் ஆசை வர, வீட்டை விட்டு ஓடிப் போய் மணமுடித்து வட நாட்டில் செட்டிலாகி விட்டேன். அந்த அவமானத்தை எப்படி வெளியில் சொல்ல முடியும் அவர்களால்?”

“இப்போ என் கணவர் தவறி விட்டார். நான் செய்த தவறை என் மகள் செய்து, என் பெற்றோரின் மனவேதனையை நான் உணருமாறு செய்து விட்டாள். அவள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று வைத்திருந்த சொத்து எல்லாம் அவளுக்கே கொடுத்து விட்டு, இங்கே வந்து ஒரு வாடகை வீட்டில் இருந்த படியே அவர்களைத் தேடினேன்.”

“என் தவறுக்கு மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்தேன். எல்லோருக்கும் தகப்பன் அந்த ஈசனிடம் தான் கேட்டுக் கதறணும் போல. இந்த பாவத்திற்கு இன்னும் எத்தனை ஜென்மம் நான் எடுப்பேனோ தெரியலை.”

“இப்போ இங்கு நடந்த, நாம் பேசிய எந்த விஷயத்தையும் யாருக்கும் சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணும்மா, தயவுசெய்து” என்றாள் கண்ணீருடன்.


விடுமுறையிலே செல்ல ஒரு பயணக் கட்டுரை: ஐரோப்பா பயணம் போகலாமா? (பதிவு 2)

— வசந்தா கோவிந்தராஜன்

பொடி இட்லிகளை விழுங்கிய களைப்பில் ரிலாக்ஸாக சென்னை விமான நிலையத்தில் உட்கார்ந்து, அளவளாவிப் பொழுதைப் போக்கினோம். போர்டிங் ஆரம்பித்தது. எட்டரை மணிக்கு அபுதாபி செல்லும் எத்திகாட் விமானத்துக்குள் நுழைந்தோம். என் மகனின் நண்பன் கார்த்திக் குடும்பமும் எங்களுடன் அபுதாபி வரை பயணித்தார்கள். விமானத்தில் ஒரு ஆப்பிரிக்க அழகியும், விழிகளில் சோகம் சுமந்த ஒரு பளிச்சென்ற பெண்ணும் வரவேற்றார்கள். உடையில் சிக்கனம் காட்டவில்லை. எத்திகாட் சீருடைக்காகவே கூடவே இரண்டு மீட்டர் செலவிடுகிறது போல! விமானம் பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் ஆப்பிரிக்க அழகி 'வெஜிடேரியன்?' என்று கேட்டு சுடச்சுடத் தட்டை நீட்டினாள். நமக்குத்தான் எதையும் வேண்டாம் என்று சொல்லிப் பழக்கம் இல்லையே! ஆறரைக்கு நாலு இட்லி விழுங்கியிருந்தாலும் (இப்போது பத்து மணி) எண்ணெய் இல்லாத வடைகள் என்னைப் பார்த்துச் சிரித்ததில் மயங்கி முதலில் ஒரு வடையை உள்ளே தள்ளினேன். உலர்ந்த ரொட்டியை ஒதுக்கி விட்டு சூடான வெஜ் புலாவ், சில்லென்றிருந்த பழத்துண்டுகள், ரசமலாய் மாதிரியிருந்த ஸ்வீட் என வரிசையாய் வயிற்றுக்குள் அனுப்பி வைத்தேன். உண்ட மயக்கத்தில் உறங்க ஆரம்பிக்கும் போதே அபுதாபி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இரண்டு மணி நேரத்தில் பாரீஸுக்கு அடுத்த விமானம். அபுதாபி விமான நிலையத்தில் போருக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை — இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்குள்ள விமான நிலைய டாய்லெட்டில் இருந்த ஹேன்ட் ஸ்பிரேயை ஏக்கமாய்ப் பார்த்தேன். இன்னும் பனிரெண்டு நாட்களுக்கு பேப்பர் ரோல் மட்டுமே! Sree Janaki Tours ஸ்ரீப்ரியாவின் ஆலோசனைப்படி, bidet என்னும் வஸ்துவை வாங்கி வந்திருந்தோம். அது ரப்பர் பாட்டிலோடு தண்ணீரை ஸ்பிரே செய்யும் இணைப்பு கொண்டது. அதை வைத்துச் சமாளிப்போம்! என தேற்றிக் கொண்டேன். செக்யூரிட்டி செக்கிங் முடிந்து ரமேஷ் தலைகளை எண்ணி சரிபார்க்கும் போதே போர்டிங் ஆரம்பித்து விட்டது. மீண்டும் எத்திகாட் விமானம். முழு நீள உடை அணிந்த பணிப் பெண்கள். விமானத்தில் ஏறிய உடனே ஆழ்ந்த உறக்கத்துக்குப் போய் விட்டேன். பின் சுடச்சுட உப்புமா, வழக்கமான காய்ந்த ரொட்டி, சில்லென்ற பழங்கள், பாயசத்தில் மிதந்த குலோப் ஜாமூன்! (என்ன ஸ்வீட்னு புரியலை! ரொம்ப நல்லா இருந்தது!) நம் நேரப்படி காலை பத்து மணி. 30.3.26 காலை எட்டு மணிக்கு (அங்குள்ள நேரம்) பாரீஸில் காலடி எடுத்து வைத்தோம். (“பெருஸ்ஸா மார்ஸ்ல கால் வைச்ச மாதிரி அலட்டிக்காதன்னு” யாரோ முணுமுணுக்கறது காதுல விழறது!) அனைவரின் ஐரோப்பா கனவு பலித்து விட்டது. ஹூரேன்னு கத்த ஆசைப்பட்டு அடக்கி வாசிச்சோம். இமிகிரேஷனில் நீண்ட க்யூ. முதலில் கணேசன் சார் பிள்ளையார் சுழி போட்டார். அப்புறமென்ன, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடகடவென இமிகிரேஷன் முடிந்தது. எங்களுக்குப் பரிசோதனை செய்த அந்த அலுவலர் (Afro American மாதிரித் தெரிந்தார்) உடல் நலமில்லை போல. ஒவ்வொரு இமிகிரேஷன் முடிந்ததும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த நபரை அழைத்தார். (“தம்பி, நன்னா இருப்பா!” — மனசுக்குள் ஆசீர்வதித்தேன்!) வெளியே வந்து திரும்பவும் எங்கள் counter (ரமேஷுக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர்!) தலைகளை எண்ணினார். எங்களை ஏற்றிக் கொள்ள Raf Trans என்னும் சொகுசுப் பேருந்து கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது. இன்முகத்துடன் வரவேற்ற ஓட்டுநர் திரு. சிக்கோரா ஜேக், அனைவரது பிரம்மாண்டப் பெட்டிகளையும் பேருந்தின் கீழடுக்கில் நுழைத்தார். பேருந்தின் கீழடுக்கு ஒரு பெரிய யானையை உட்கார வைக்கலாம் போல இருந்தது!

நேராக சீன் (Seine) நதிக்கரையில் இறங்கினோம். “குளிக்காமல், கொள்ளாமல் ஊர் சுத்தக் கிளம்பிட்டீங்களான்னு” கேக்காதீங்க! நாங்க என்ன பெருமாள் சேவிக்கவா போறோம்? (எங்கள் மைன்ட் வாய்ஸ்!) சீன் நதி பிரான்சின் இரண்டாவது பெரிய நதி. இது Langres Plateau-வில் உற்பத்தியாகி ஏறத்தாழ 777 கி.மீ. ஓடி இங்கிலீஷ் கால்வாயில் கலக்கிறது. பாரீஸ் நகரின் நடுவே ஹாவென்று அகலமாய் ஓடும் இந்த நதி அந்நகருக்கு அழகூட்டுகிறது. அங்கே எங்களை ஏற்றிக்கொள்ளத் தயாராக நின்றது Bateaux Mouches என்ற சொகுசுப் படகு (cruise). மேல்தளத்திலும், கீழ்தளத்திலும் பரவலாக உட்கார்ந்து கொண்டு இளந்தென்றலை அனுபவித்தோம். (நம்ம கூவம் நதியை சுத்தமாக்கி இப்படியொரு படகு சவாரி விட்டால்? என்ற எண்ணம் எழுந்தது. அதெல்லாம் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.) இரண்டு பக்கமும் பிரம்மாண்டக் கட்டிடங்கள் மற்றும் சிலைகள்! ஆற்றின் குறுக்கே பாலங்கள், பாலங்கள், பாலங்கள்! பாலங்களில் நடப்பவர்கள் நின்று, படகில் இருந்த எங்களைப் பார்த்து கையசைத்து உற்சாக ஆட்டம் போட்டார்கள். நாங்களும் சளைத்தவர்களா? ஒவ்வொரு பாலத்தைக் கடக்கும்போது உற்சாகக் கூச்சலோடு கையசைத்து சின்ன ஆட்டம்! வழிநெடுக ஏராளமான சிலைகள் இருந்தாலும், நியூயார்க்கில் உள்ளது போல் (அதைவிடச் சிறிய வடிவில்) சுதந்திர தேவி சிலை வசீகரித்தது. உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர், நூறு அண்டா காம்ப்ளான் குடித்த குழந்தை போல் நெடுநெடுவென்று வளர்ந்து, எங்கிருந்து பார்த்தாலும் கண்ணில் பட்டது. இங்குள்ள கட்டிடங்களையெல்லாம் பழமை மாறாமல் அப்படியே பராமரிக்கிறார்கள். ஜன்னல்களுக்குப் புதிய வண்ணம் பூசக்கூடாது என்று அப்படியே பாரம்பரியத்தைப் பேணுகிறார்கள். எங்கள் tour manager நவீன் கண்ணில் படும் ஒவ்வொன்றையும் சுவாரஸ்யமாக விளக்கினார். இவருக்குத் தெரியாத விஷயம் எதுவுமே இருக்காதோ? எப்படி இத்தனையும் நினைவில் வைத்துக் கொள்கிறார்? வல்லாரைக்கீரை அதிகம் சாப்பிடுவாரோ? என வியந்தேன். படகு சவாரி முடிந்து நேராக ஒரு ராஜஸ்தானி ரெஸ்டாரென்ட் வந்தோம். அங்கே சுடச்சுட சப்பாத்தி, இரண்டு சைட் டிஷ், சுட்ட அப்பளம், சாலட், சாதம், தயிர், ஊறுகாய், சூடான ஜிலேபி எல்லாம் வரிசை கட்டிக் காத்திருந்தது. இந்தப் பயணம் முழுக்க இந்திய உணவகங்களில் சுத்த சைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். வெங்காயம், பூண்டு சாப்பிடாதவர்களுக்கு பிரத்தியேகமாக சமண உணவும் கிடைத்தது. எல்லா உணவகங்களிலும் சப்பாத்தி, இரண்டு மூன்று சைட் டிஷ்கள், சாலட், தயிர் சாதம், ஊறுகாய் (அவ்வப்போது ரசம்), ஒரு இனிப்பு கண்டிப்பாக இருக்கும். வயிற்றை நிறைத்துக் கொண்டு பாரீஸ் நகர வீதியில் மரம் முழுக்க ரோஜா வண்ண மலர்கள் நிறைந்திருந்த மரத்தின் முன்னே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நேராகத் தங்கும் விடுதி சிட்டி ரெஸிடென்சிக்கு வந்து சேர்ந்தோம். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கான சாவிகளை வாங்கிக் கொண்டு, மின்தூக்கிக்காகக் காத்திருந்து, பெரிய பெரிய சூட்கேஸ்களை உருட்டி உள்ளே சேர்த்து, இருபது அறைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டோம். சுத்தமான, அழகான, சற்றே விஸ்தாரமான அறைகள். “அப்பாடா” என்று சாய்ந்து (வெட்டி முறிச்சிட்ட! மனசுக்குள் ஒரு குரல்!) கொஞ்ச நேரம் (!) ஓய்வெடுத்த பின் ஒரு குளியல் போட்டு இரவு டின்னருக்குத் தயாரானோம். இரவும் மற்றொரு இந்திய உணவகத்தில் ரசத்தோடு சாப்பாடு. தலைநீட்டும் ஈபிள் டவர். இரவு எட்டு மணிக்குத் தான் இருட்ட ஆரம்பிக்கிறது. பாரீஸில் மக்கள் பெரும்பாலும் முழுநீள உடை, ஸ்வெட் ஷர்ட் அணிந்து நடந்து அல்லது சைக்கிளில் செல்கிறார்கள். சுஜாதா கதைகளில் வருவது போல் சிக்கன உடையில் யாரும் நடமாடவில்லை. குளிர்காலம் என்பதாலா? வெயில் காலத்தில் வந்தால் ஹவாய் பீச்சில் பார்த்த காட்சிகள் கண்ணுக்குத் தென்படலாம். எல்லாரும் சிக்கென்று இருக்கிறார்கள். நாம்தான் ஆட்டோ, டாக்ஸி என்று உடல் எடையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறோமோ? மீண்டும் அறைக்கு வந்தாச்சு. கவுண்ட்டர் தன் வேலையை முடித்து விட்டார். பாரீஸில் தூக்கம் வந்ததா, கனவு வந்ததா — என்று நாளை சொல்கிறேன். தொடரும்...


வாங்க, சிரிக்கலாம்!

— கோவிந்தராஜன்

சோமு: என் மனைவி எப்பொ சொன்னாலும், எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காம உப்புமா செஞ்சு தருவா...

ராமு: உப்புமாவுல வண்டும், புழுவுமா இருக்குறப்பவே நினைச்சேன், சலிக்காமத்தான் செஞ்சிருப்பாங்கன்னு!

சோமு: ????


பாலு: மச்சி, உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?

மனோ: அந்தக் கொடுமையை ஏன் மச்சி கேட்குற? இன்னும் இல்லை.

பாலு: காலா காலத்துல பண்ணிடணும் மச்சி...

மனோ: எங்க மச்சி? பொண்ணு பார்க்க போனா – “துவைக்கத் தெரியுமா? சமைக்கத் தெரியுமா?”ன்னு கேக்குறாங்க!


டாக்டர்: உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன் தான். ரெண்டு நாள் மட்டும் அவங்களால் பேச முடியாது!

ஒருவர்: அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேச முடியாது டாக்டர்?

டாக்டர்: ????


ரமணன்: நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராவோ, இல்லே ஒரு பைலட்டாவோ ஆகலாம்-னு இருக்கேன்...

வேலு: எப்படியோ ஜனங்களை மேலே கொண்டுபோகறதுல குறியா இருக்க!!

ரமணன்: ??????


நோயாளி: டாக்டர், தூரத்துல உள்ளது தெரியமாட்டேங்குது டாக்டர்...

டாக்டர்: அப்படின்னா பக்கத்துல போயி பாக்க வேண்டியது தானே...


நோயாளி: ?????????

டாக்டர்: நாங்க கொடுத்த பில்லை ஏன் தூக்கிப் போட்டிங்க?

நோயாளி: நீங்க தானே டாக்டர், 'உங்க இதயம் வீக்கா இருக்கு, கவலை தற்ற விஷயங்களை தூக்கி எறிங்க'-ன்னு சொன்னீங்க!


கைவினைப் படைப்புகள்

— ஸ்பூர்த்தி

கைவினைப் படைப்புகள்
கைவினைப் படைப்புகள்

எழுத்துப் பயிற்சி - ஞ்

Let's learn to write

ஞ்
Pronunciation help ny as in canyon
Group Mellinam
Examples இஞ்சி - Ginger மஞ்சள் - Yellow
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்
ஞ்

© 2026 Tamil Thoodhu · tamilthoodhu.com

வாசகர் கருத்துக்கள்0