நவம்பர் 2026 இதழ்

ஆசிரியர் பக்கம்

அன்புள்ள வாசகர்களுக்கு,
உங்கள் அனைவருக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்! உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியும், லட்சுமி கடாட்சமும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்த இனிய தீபாவளியாக இது அமையட்டும். நம் இளைய தலைமுறைக்கு புதுத் துணிகள், பட்டாசுக்கள், இனிப்புகள் இவைதான் தீபாவளி என்பது இல்லாமல் தீபாவளி பண்டிகையின் தத்துவத்தையும், அது கொண்டாடப்படும் காரணத்தையும் சொல்லுங்கள்.
தங்களின் படைப்புக்களை அனுப்பி வரும் எழுத்தாளர்களுக்கு மீண்டும், மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம். அவர்கள் தமிழ்த் தூது இணைய முகவரியில் தங்கள் ஈமெயிலைத் தந்து சேர்ந்து கொள்வது (subscribe) மிகவும் அவசியம். அப்பொழுதுதான் தமிழ்த்தூது ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஈமெயிலில் கிடைக்கும். அத்துடன் இன்னும் ஒரு முக்கியமான விஷயம்! எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கட்டாயம் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அவர்களின் படைப்பு ஏற்றுக்கொள்ளப்படாது.
நமது “தமிழ்த்தூது” மாத இதழ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களுக்காகவே முக்கியமாக வெளியிடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் அடுத்த தலைமுறை தங்களின் தாய்மொழியையும், அதன் நீண்ட, நெடிய கலாச்சார, பண்பாட்டு கூறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவே தமிழ்த்தூது இதழை பல சிரமங்களுக்கு இடையில் வெளியிடுகிறோம். அதனை உலகில் உள்ள நம் தமிழ் இன மக்களுக்கு பெருமளவில் அறிமுகப்படுத்தினால்தான் இளைய தலைமுறை பயனடையும். அதனால் நம் இணைய இதழை அவர்களுக்கு பகிர்ந்து நம் வாசக எல்லையை விரிவாக்க வேண்டுகிறோம்.
முனைவர் மோகனா சுகதேவ் (தலைமை ஆசிரியர்)
01/11/2026
ஆசிரியர் குழு: கௌரிசங்கர், அஞ்சலி சுகதேவ், அனுபமா சுனில், ஜெஃப்ரி ஜோஜூ.
குறளின் குரல்

திருக்குறள் என்றால் என்ன?
திருக்குறள் என்பது தமிழ் மொழியின் மிகப் போற்றப்படும் பழமையான இலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதைத் திருவள்ளுவர் எழுதியுள்ளார். இதை “உலகப் பொதுமறை” என்றும் அழைப்பார்கள்.
திருவள்ளுவர் யார்?
திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும் தத்துவஞானியும் ஆவார். அவரை பொதுவாக “தெய்வப்புலவர்” என்று அழைக்கின்றனர்.
திருக்குறளை நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?
இந்தத் தமிழ் இலக்கியம் உலகளவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது 107-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களில் நம்மை வழிநடத்தும் ஒரு ஒளிவிளக்காக இது விளங்குகிறது.
குறள் என்றால் என்ன? அதன் அமைப்பு எப்படி?
“குறள்” என்பது இரு வரிகளைக் கொண்ட செய்யுளைக் குறிக்கும். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் உள்ளன. ஆகவே, மொத்தம் 1330 குறள்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அதிகாரம்: வான் சிறப்பு குறள் எண்:15

Keduppathoo-um kettaarkkuch saarvaaymat raangey, Eduppathoo-um ellaam mazhai. பெய்யாமல் உயிர்களைக் கெடுப்பதுவும், அப்படித் தவித்த உயிர்களுக்குத் துணையாக நின்று பெய்து அவர்களின் துயரம் எல்லாம் போக்க வல்லதும் மழையே ஆகும். |
குறள் கதை
மழையின் சிறப்பு
ஒரு காலத்தில் பரதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். போர்க் கலைகள் அனைத்தும் கற்று மிகவும் திறமையாக ஆட்சி செய்து வந்தான். அதனால் நாடும் செழிப்பாக இருந்து வந்தது.
ஒருசமயம் பெய்ய வேண்டிய பருவ மழை பெய்யாமல் பொய்த்துப் போனது. இதனால் மக்கள் விவசாயம் செய்யப் போதுமான நீர் இல்லாமல் தவித்தனர். தொடர்ந்து இதே போல் பருவமழை தவறியதால் நாட்டில் பசியும், நோயும் அதிகரித்தது.
மன்னனும் அரண்மனையில் உள்ள தானியங்களை எல்லாம் மக்களுக்கு கொடுத்து உதவினான். அதுவும் தீரும் நிலை உருவானது. மக்கள் எல்லாம் மன்னன் ஆட்சியைக் குறையும் குற்றமும் கூறத் தொடங்கினர். இந்த நிலை மாற மன்னனும் என்னென்னவோ செய்து பார்த்தான். வருண பகவானை வேண்டி சிறப்புப் பூஜை செய்தான். எது செய்தும் மழை பெய்யும் வழியைக் காணவில்லை.
அந்தச் சமயம் மகான் ஒருவர் அந்த நாட்டிற்கு வந்தார். அவரைக் காணச் சென்ற அரசன், "நான் மிகவும் திறமையுடன் ஆட்சி செய்து மக்களின் நலனுக்காக எல்லாம் செய்து நாட்டைப் பாதுகாத்தேன். இருந்தும் பருவமழை தவறியதால் மக்கள் பசியிலும், பிணியிலும் வாடுகின்றனர். இதனால் என் மேல் பழி விழுகிறது. இதற்கு நீங்கள்தான் ஒரு தீர்வு சொல்ல வேண்டும்" என்றான்.
இதனைக் கேட்ட மகான் "எல்லாவற்றையும் பாதுகாத்தாயே.... காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. ஏரி, குளங்கள் எல்லாம் காணாமல் போயுள்ளன. அவற்றைக் கவனித்தாயா? பிறகு எப்படி பருவமழை தவறாமல் வரும்?" என்று வினா எழுப்பினார்.
அதைக் கேட்ட மன்னன் அப்பொழுதுதான் தன் தவறை உணர்ந்தான். ஏரி, ஆறு போன்ற இடங்களில் இருந்த குடியிருப்புகளை அப்புறப்படுத்தித் தூர் வாரினான். அடுத்த நாட்டில் இருந்து இந்த நாட்டுக்குக் கால்வாய்களை அமைத்து நீரைக் கொண்டு வந்தான். படைவீரர்களை அழைத்து மரக்கன்றுகளை நட உத்தரவிட்டான்.
சில நாட்களிலேயே பருவ மழை பொழிய ஆரம்பித்தது. மக்களும் மகிழ்ச்சியுடன் வேளாண்மை செய்தனர். நாட்டில் பசி, பட்டினி, பிணி நீங்கிச் சந்தோஷமாக வாழ்ந்தனர். மன்னன் புகழ் ஓங்கியது.

இலக்கியச் சோலை
இந்தப் பகுதியில் பாரதியார், ஔவையார், அழ. வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்று தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடிய தேசியக் கவிஞர்களை முன்னிலைப்படுத்துவோம். ஒவ்வொரு இதழிலும் அவர்களின் புகழ் பெற்ற பாடல்களின் மொழிபெயர்ப்பையும் வழங்குவோம்.

சுப்பிரமணிய பாரதியார்
சுப்பிரமணிய பாரதியார் (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு தமிழ் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். கவிதைத் துறையில் அவர் பெற்ற சிறப்பிற்காக அவருக்கு “பாரதி” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடியாக விளங்கிய அவர், எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது பிறந்த நாள் டிசம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது கவிதைகள் இன்றும் பல தலைமுறையினருக்கு ஊக்கமளித்து வருகின்றன. அத்தகைய ஆற்றல் மிக்க கவிதைகளில் ஒன்றை இங்கே காண்போம்.
சின்னஞ்சிறு கிளியே!

சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே! (சின்னஞ்சிறு)
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! (சின்னஞ்சிறு)
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே (சின்னஞ்சிறு)
ஓடி வருகையிலே- கண்ணம்மா!
உள்ளம் குளிருதடீ;
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தழுவுதடி .
உச்சிதனை முகந்தால் - கருவம் கள்வெறி கொள்ளுதடீ | உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில் என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா |
சுப்பிரமணிய பாரதியார்

நமது பண்பாடு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தீபாவளி பண்டிகை என்பது தீப ஒளித்திருநாள் ஆகும். தீபாவளி என்பது உற்சாகத்தை தரக்கூடிய நாளாகும். இது இருளை நீக்கி ஒளியை தரக் கூடிய நாளாகும். மக்களை துன்புறுத்திய நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை கொண்டாடுவதே தீபாவளி. வட மாநிலங்களில் ராம பிரான், நிலவு இல்லாத அமாவாசை நாளில் அயோத்திக்கு திரும்பியதால் அவரை வெளிச்சத்துடன் வரவேற்பதற்காக வீடுகள் தோறும் ஏராளமான ஒளி மயமான விளக்குகளை ஏற்றி, மக்கள் வரவேற்றதாகவும், அதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஆண்டுதோறும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன.
அதிகாலை எண்ணெய் தேய்த்துக் குளித்தல் (கங்கா ஸ்நானம்), புதிய ஆடைகள் அணிதல், பலகாரங்கள் தயாரித்து பரிமாறுதல், வீட்டில் விளக்கேற்றுதல் மற்றும் கடவுளை வழிபட்டு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது இதன் முக்கிய வழிமுறையாகும்.
தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகள்
அதிகாலை எண்ணெய் ஸ்நானம்: சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் 3:00 மணி முதல் 5:30 மணிக்குள்) நல்லெண்ணெயில் சீயக்காய் தேய்த்து புனித நீராடுதல் (கங்கா ஸ்நானம்) செய்யப்படும்.
புத்தாடைகள் மற்றும் வழிபாடுகள்: புத்தாடைகளை அணிந்து, கடவுளுக்குப் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளைப் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
பெரியவர்கள் ஆசி: குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவர்.
விளக்கு ஏற்றல் மற்றும் கோலம்: வீட்டின் வாசலில் வண்ணக் கோலமிட்டு, மாலை வேளையில் அகல் விளக்குகள் ஏற்றி வீட்டை ஒளியூட்டுவர்.
பரிசுப் பரிமாற்றம்: அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்குப் பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வர்.
பட்டாசு வெடித்தல்: காலையிலோ அல்லது மாலையிலோ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வர்.`

உணவே மருந்து
"உணவே மருந்து, மருந்தே உணவு" என்பது நம் முன்னோர்களின் வாக்கு. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவிலேயே உடலைக் குணப்படுத்தும் அத்தனை மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளன.
பாரம்பரிய உணவுமுறையில் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரும் ஒரு மிகச் சிறந்த ஆரோக்கியமான கொள்ளு ரசம் மற்றும் தூதுவளை துவையல் செய்முறையை இங்கே காண்போம்.
1. கொள்ளு ரசம் (காய்ச்சல், சளி மற்றும் உடல் எடை குறைய)

கொள்ளு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக்கூடியது. சளி, இருமலுக்கு மிகச் சிறந்த மருந்து.
தேவையான பொருட்கள்:
கொள்ளு (உடைத்தது அல்லது முழுசு) – 3 மேஜைக்கரண்டி
புளி – எலுமிச்சம்பழ அளவு
தக்காளி – 1
பூண்டு – 5 பற்கள்
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 1
கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
வறுத்து அரைக்க: கொள்ளுவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, சிறிது நீர் ஊற்றி குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் அந்த நீரைத் தனியாக எடுத்து, கொள்ளுவை லேசாக மசித்துக் கொள்ளவும்.
மசாலா தயாரிக்க: மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை அம்மியிலோ அல்லது மிக்ஸியிலோ கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கரைசல்: புளித் தண்ணீருடன், தக்காளி, தேவையான அளவு உப்பு மற்றும் வேக வைத்த கொள்ளு நீர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கைகளால் கரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க: கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்துள்ள மிளகு-சீரகக் கலவையைச் சேர்த்து வதக்கவும்.
கொதிக்க வைக்க: உடனே புளி-தக்காளி கரைசலை ஊற்றி, மசித்து வைத்துள்ள கொள்ளையும் சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போது (கொதிக்கக் கூடாது) கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கொள்ளு ரசம் தயார்.
2. தூதுவளை துவையல் (நுரையீரல் பலப்பட, ஆஸ்துமா குணமாக)

தூதுவளை சுவாசக் கோளாறுகளை நீக்கி, நுரையீரலுக்கு பலம் சேர்க்கும் ஒரு அற்புதமான மூலிகை.
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலைகள் – 1 கவளம் (முட்களை நீக்கியது)
உளுந்தம்பருப்பு – 2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் – 3 அல்லது 4
பூண்டு – 3 பற்கள்
சிறிய துண்டு புளி – சிறிதளவு
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உளுந்தம்பருப்பு, வரமிளகாய், பூண்டு ஆகியவற்றைச் பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த தூதுவளை இலைகளைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும் (இலை சுருங்கிவிடும்).
வறுத்த பொருட்கள், வதக்கிய இலைகள், புளி, தேங்காய் துருவல் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் தெளித்து துவையலாக (கெட்டியாக) அரைக்கவும்.
இந்தத் துவையலை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்.

பாட்டி வைத்தியம்
வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும்.
சீதபேதி குணமாக, ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து, மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் BP பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்.
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும்.
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.
வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும்.
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து, நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
லவங்கப் பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும்.

படிக்கலாம், வாங்க!

கோகுலத்தில் பிறந்தது முதல் மதுராவில் கம்சனை அழிப்பது வரை உள்ள கிருஷ்ணரின் லீலைகள் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக, காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரி மலையைத் தூக்கியது, மற்றும் நண்பர்களுடன் காட்டில் மாடு மேய்த்த சாகசங்கள் சுவாரசியமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மிகக் கடினமான இதிகாச அல்லது ஆன்மீகத் தமிழ்ப் சொற்கள் இல்லாமல், இன்றைய தலைமுறை குழந்தைகள் தங்களை கிருஷ்ணன் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வகையில் "அம்மா யசோதை", "சுட்டி நண்பர்கள்" என எளிய அன்றாடத் தமிழ் நடையில் கதை சொல்லப்பட்டுள்ளது.
பேராசைப்படக் கூடாது, தீமையை எப்போதும் நன்மையே வெல்லும், நண்பர்களுக்கு ஆபத்தில் உதவ வேண்டும் போன்ற நற்பண்புகள் (Moral Values) கதையோடு கதையாக, அறிவுரை கூறாத பாணியில் கற்றுத்தரப்படுகின்றன.
தமிழில் இத்தகைய சித்திர இதிகாசக் கதைகளை வெவ்வேறு முன்னணிப் பதிப்பகங்கள் தங்களின் பிரத்யேகத் தொகுப்புகளாக வெளியிடுகின்றன. அவற்றின் தோராயமான சந்தை விலை விவரம்:
தமிழில் இத்தகைய சித்திர இதிகாசக் கதைகளை வெவ்வேறு முன்னணிப் பதிப்பகங்கள் தங்களின் பிரத்யேகத் தொகுப்புகளாக வெளியிடுகின்றன.
விலை: ₹150 (தோராயமாக)
பதிப்பகம்: முன்னணி சிறுவர் நூல் பதிப்பகங்கள்
உலகச் செய்திகள்
'கவியரசு' கண்ணதாசனின் நூற்றாண்டு விழா(1927–2026), தமிழ்நாட்டிலும் உலகளாவிய அளவிலும் பல்வேறு இலக்கிய மற்றும் பண்பாட்டு அமைப்புகளால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வாழ்வியல், தத்துவம் மற்றும் காதலைத் தன் எளிய வரிகளால் செதுக்கிய கவிஞரின் நூற்றாண்டையொட்டி மத்திய, மாநில அரசுகளும், உலகளாவிய தமிழ் அமைப்புகளும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நடவடிக்கை: மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்.......
காரைக்குடியில் 1000 கவிஞர்கள் சங்கமம்: கண்ணதாசன் பிறந்த சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட நூற்றாண்டு விழாவில், சுமார் 1000 கவிஞர்கள் ஒன்றிணைந்து கவியரசரைப் போற்றி கவிதாஞ்சலி செலுத்தினர்.
Tamil literary readers' meet at ICC(Indian Cultural Centre) Doha (Oct 2026)
ICC Tamil Literary Club presented the Tamil Literary Readers’ Meet as “Tamil Gathering, Tamil Exploration” on 3 October 2026 at the ICC Library Reading Room. In a warm and engaging circle of readers, more than seventeen literary sharings explored themes of life, love, language, history, human values and impermanence, beginning with Ikigai and concluding with the poignant reflection, “One who lived yesterday is not here today.” The evening brought together ICC leaders, Tamil enthusiasts and readers, with the participation of ICC Tamil Literary Forum, Qatar Muthamizh Mandram and Women’s with Passion, making the gathering a celebration of Tamil literature, voices and togetherness.
Indian Cultural Centre, Doha - Qatar's Post (link not found)
அச்சுப் பண்பாட்டு வரலாறு: அக்டோபர் 20, 1578-இல் இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழ் மொழி அச்சுக் கண்ட ('தம்பிரான் வணக்கம்' நூல்) வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை முன்னிட்டு, தமிழின் அச்சுப் பண்பாட்டு மைல்கற்கள் குறித்த விழிப்புணர்வுப் பகிர்வுகள் இணைய வழித் தமிழ் அமைப்புகளால் இந்த மாதத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டன.
பூந்தளிர் / Children’s Section
பூந்தளிர் / Children’s Section
இந்த சிறுவர் பகுதியை உங்களுக்காக திரு. கௌரிசங்கர் வடிவமைத்திருக்கிறார்.
This children's section has been designed for you by Mr. A. Gauri Sankar
தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி
Tamil – Tamil – English Dictionary
இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகளுக்கு சமமான அர்த்தங்கள் தரும் வேறு தமிழ் வார்த்தைகளை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த பயிற்சி உதவும்.
In order to learn synonyms and the meaning in English, this section helps you learn five Tamil words, their Tamil synonyms and the English words equivalent in meaning to those words.
எண் S.No. | தமிழ் வார்த்தை Tamil Word
| சமமான தமிழ் வார்த்தை Synonym
| சமமான ஆங்கில வார்த்தை - Meaning in English |
1 | ஆளுகை (Aalugai) | ஆட்சி (Aatchi) | Governance/Rule/Administration |
2 | ஆலிங்கனம் (Aalinganam) | தழுவுதல் (Thazhuvathal) | Embrace/Hug |
3 | ஆலங்கட்டி (Aalankatti) | கல்மழை (Kalmazhai) | Hail/Hailstone |
4 | ஆராதனை (Aarathanai) | வழிபாடு (Vazhipaadu) | Prayer /Worship |
5 | ஆரம்பம் (Aarambam) | தொடக்கம் (Thodakkam) | Beginning |
எதிர்ப்பதங்கள் – Opposites
இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான எதிர்ப்பதங்களையும், அதற்கு ஈடான ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
To learn the antonyms, five Tamil words, their meaning in English, Tamil words having opposite meaning for them and the equivalent English words for the opposite Tamil words have been provided here.
எண் S.No. | தமிழ் வார்த்தை/Tamil Word
| Equivalent English word
| தமிழில் எதிர்ப்பத வார்த்தை Antonym | Equivalent opposite English word |
1 | இரக்கம் (Irakkam) | Kindness | கொடூரம் (Kodooram) | Cruelty |
2 | இரைச்சல் (Iraichal) | Noise | அமைதி (Amaithi) | Peace |
3 | இரவு (Iravu) | Night | பகல் (Pagal) | Day |
4 | இறுதி (Iruthi) | End | ஆரம்பம் (Aarambam) | Beginning |
5 | இகழ்ச்சி (Ikazhchi) | Contempt | புகழ்ச்சி (Pugazhchi) | Commendation |
சொல்வகை - Match the words
இங்கு பதினாறு சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகைப்படுத்துங்கள். ஒரு வகைக்கு நான்கு சொற்கள். எனவே நான்கு வகைகள் கிடைக்கும். (இந்த பயிற்சி உங்களுடைய சொற்களை வகைப்படுத்தும் திறமையை வளர்க்கும்)
(Sixteen Tamil words are provided here. Arrange them as per the following four categories (Four words per category)
உருவாக்கப்படவேண்டிய வகைகள் - Categories to be arranged
பதினாறு சொற்கள்
புலி (Tiger) | ஆமை (Turtle) | கிளி (Parrot) | கப்பல் (Ship) |
விமானம் (Aircraft) | சிறுத்தை (Leopard) | பாம்பு (Snake) | மைனா (Myna) |
சிட்டுக்குருவி (House Sparrow) | பேருந்து (Bus) | பல்லி (Lizard) | காட்டெருமை (Wild Buffalo) |
சிங்கம் (Lion) | மயில் (Peacock) | கார் (Car) | பச்சோந்தி (Chameleon) |
தமிழ் விடுகதைகள் – Tamil Riddles
01. உறைக்குள் இருக்கும் - உயிரைப்பறிக்கும் - அது என்ன ?
It stays inside a sheath, however, it can take away one’s life – What is it ?
02. ஊசி நுழையாத காட்டில் ஒரு துரை நுழைந்து செல்கிறான் - அவன் யார் ?
The lord enters into a forest freely where even a needle cannot enter. Who is he ?
03. எங்களுடைய வீட்டுக்கிணத்தில் வெள்ளிக்கிண்ணம் மிதக்கின்றது -அது என்ன ?
In the well of our house, a silver bowl is found floating – What is it ?
04. எட்டி நின்று பார்ப்பான் - பெட்டிக்குள் போட்டுக்கொள்ளுவான் - அவன் யார் ?
He stands at a distance and watches, then captures what he sees inside a box. Who is he?
05. எட்டாத கொம்பில் ஒரு மிட்டாய் பொட்டணம் - அது என்ன?
On an unreachable branch of a tree, there is a packet sweet bundle – What is it ?
மூளைக்கு வேலை / Exercise for the Brain
கீழ்க்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டு இங்கு கொடுக்கப்பட்ட வெளிர் கட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து வார்த்தைகளும் "ஊ" என்ற எழுத்தில்தான் தொடங்குகின்றன.
The meanings for the words are provided in English within brackets.
01. தையல் உபகரணம் (Instrument used for sewing)
02. வாகனம் (A vehicle)
03. சம்பளம் (Salary)
04. வார்த்தல் (Moulding)
05. உறுதி (Determination)
06. பெரும் பொய் (Blatant lie)
ஊ |
|
|
|
|
|
|
|
| 1 |
|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
|
|
|
|
|
| 2 | |
|
|
|
|
|
|
|
| 3 | |
|
|
|
|
|
|
|
| 4 | |
|
|
|
|
|
|
|
| 5 | |
|
|
|
|
|
|
|
| 6 |
கட்டங்களில் மறைந்துள்ள வார்த்தைகள் / Words hidden in the boxes
கொடுக்கப்பட்டு உள்ள குறிப்புகளின் உதவியால் இங்கே உள்ள கட்டங்களை மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளால் நிரப்புங்கள். கட்டங்களை நிரப்பிய பின்னர், நிழலிட்ட கட்டங்களில் அடங்கியுள்ள எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்தால், திருக்குறள் - அறத்துப்பாலில் உள்ள ஒரு அதிகாரத்தின் பெயர் கிடைக்கும்.
(Using the clues provided, fill in the boxes with three-letter words. Once all the boxes have been filled, combine the letters in the shaded boxes, one after another, to reveal a beautiful Tamil sentence. What is the sentence?)
|
|
|
| தமிழில் அர்த்தம் | Meaning in English |
01 |
|
|
| உதடு | Lip |
02 |
|
|
| சோறு | Rice meal |
03 |
|
|
| அச்சம் | Fear |
04 |
|
|
| தமிழ் மாதம் | A Tamil month |
05 |
|
|
| கூடு | Cage |
06 |
|
|
| தருமம் | Charity |
07 |
|
|
| ஒரு மலர் | A flower |
மாறிப்போன சொல் வழக்குகள்
சிவ பூஜையில் கரடி:
குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கொண்டு ஒரு நல்ல காரியம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் வருகிறார். அவரை பார்த்ததும், எல்லோரின் முகங்களும் சுருங்குகின்றன. அப்படி அந்த நபர் என்ன செய்து விட்டார்? அவர் யார்? - அவர் தான் சிவ பூஜையில் கரடி.
அதாவது, ஏதாவது ஒன்றை சொல்லி நடக்கவேண்டிய காரியத்தை கெடுக்கக்கூடிய கைங்கர்யத்தை கட்டிக் கொண்டவர். அவர் அப்படியே பழகிப்போனவர். அவர் உள் நுழைந்தவுடன், அப்படியே பேச்சை மாற்றிவிடுவார்கள். உண்மையில், இந்த சொல் வழக்குக்கும், இவருடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இல்லை.
"சிவ பூஜையில் கரடி" என்பது ஆன்மிகம் சம்பந்தமானது. குறிப்பாக சிவாலயங்களில் உற்சவர் ஊர்வலமாக வரும்போது, பலவிதமான வாத்தியங்களை இசைப்பார்கள். இன்றைய கால கட்டத்தில், தவில், மத்தளம், நாதஸ்வரம் போன்றவற்றை இசைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், கேரளா மாநிலத்து செண்டை; பாண்டு வாத்தியங்கள் போன்றவையும் பங்கு பெற ஆரம்பித்துவிட்டன. பழைய காலங்களில், சிவன் ஊர்வலம் என்றால், அதற்கென்றே தனி இசை கருவிகள் இசைப்பதுண்டு. தூரத்தில் இருந்து கேட்போரும், அந்த வாத்தியத்தின் இசையை கேட்டு விட்டு, அந்த ஊர்வலம் சிவன் உற்சவர் சம்பந்தப்பட்டது என்று சொல்லிவிடுவர். இப்பொழுது அந்த மாதிரி வாத்தியங்கள் வாசிப்பது இல்லை. வாசிப்பவர்களும் குறைந்து விட்டனர். கருவிகளும் இருப்பதாக தெரியவில்லை.
அப்படியாக சிவன் ஊர்வலம் செல்கையில், கண்டிப்பாக வாசிக்கவேண்டிய கருவி - கரடிகை. சுவாமிக்கு அலங்காரம் நடக்கும். அதன் பிறகு தீபாராதனை காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த நேரத்தில் பக்தர்களின் கவனத்தை கவருவதற்காக, கரடிகை இசைப்பார்கள். இதன் மூலம், சிவனுக்கு தீபாராதனை நடக்கிறது என்று பக்தர்கள் புரிந்து கொள்ளுவார்கள் மற்றும் அதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ளுவார்கள்.
"சிவ பூஜையில் கரடிகை" என்பது நாளடைவில் "சிவ பூஜையில் கரடி" என்று மாறிவிட்டது. “சிவ பூஜையில் கரடிகை” என்பது ஒரு சிக்னல். சிவ பூஜையில் கரடி என்பது பிராடு; ரீல் விடுதல், கரடி விடுதல் என்பது தான். அதாவது முற்றிலும் சம்பந்தம் இல்லாத சொல் வழக்குகள்.
அற்பனுக்கு வாழ்வு வந்தால், அவன் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்:
சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவன் ஒருவனுக்கு லாட்டரியில் பணம் கிடைத்து விடுகிறது. அவன் எதிர்பார்ப்புக்கு அதிகமாக பணம் வந்து சேருகிறது. அவன் சிறிது தலையை தூக்கி வைத்துக்கொண்டு நடக்கிறான். அவனது குடும்பத்தாரும் மற்றவர்களிடமிருந்து விலகி நடக்க ஆரம்பிக்கிறார்கள். இது மனித இயல்பு. சிறிது காலம் கழிந்த பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு வர சாத்தியக்கூறு இருக்கிறது. ஒரு சிலர் வருவதில்லை. அவர்களுடைய இந்த நிலையை குறிப்பதற்கு இந்த சொல் வழக்கை பயன்படுத்துவது வழக்கம்.
"அற்பனுக்கு வாழ்வு வந்தால், அவன் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்."
இரவு நேரங்களில் மழை வந்தால் எல்லோரும் குடை பிடிக்கத்தான் செய்வார்கள். அது ஒரு புறம் இருக்க, அவர்களுடைய நடவடிக்கையை குறிப்பாக சொல்வதற்கு இந்த சொல் வழக்கை பயன்படுத்துவது வழக்கம்.
உண்மையில் இது திரித்து சொல்லப்படுகின்ற சொல் வழக்கு தான்.
பிறருக்கு கொடுத்து உதவுகிற குணம் என்பதை கொடை என்று சொல்வார்கள். அதை விரும்பி செய்வதை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள் என்று சொல்வார்கள். அதாவது மனதில் எந்தவிதமான கர்வமும், ஆணவமும் இல்லது செய்வதை அர்ப்பணிப்புடன் செய்வது என்று சொல்கிறோம். அப்படியானால் உண்மையான் சொல் வழக்கு என்பது தான் என்ன?
“அர்ப்பணிப்பு குணம் உள்ளவர்கள் நேரம் காலம் பார்க்காமல் கொடை கொடுப்பார்கள்" என்று அர்த்தம். மாவீரன் கர்ணன் போல் என்று எடுத்துக்கொள்ளலாம்.
"அர்பணிப்பவனுக்கு வாழ்வு வந்தால் அவன் அர்த்த ராத்திரியில் கூட கொடை தருவான்" என்பது தான் உண்மையான பழமொழி.
மழை மாதங்கள் என்றால் என்ன?

பருவ மழையை அன்றும் இன்றும் நம்பியே நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம். மற்ற பல தேசங்களை விட இந்திய நாடு இந்த வகையில் கொடுத்து வைத்தது என்று சொல்ல வேண்டும்.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய நாடுகளில் மழை சீசன் என்று குறிப்பாக சொல்லுவதற்கு மாதங்களே இல்லை. இந்தியாவில் மழை பொய்த்தது என்பது ஒரு சில வருடங்களில் தான். இதை உணர்ந்தே முன் காலத்தில் ஆண்ட அரசர்கள் மழைத்தண்ணீர் தேக்கி வைக்கும் ஏரிகளை அதிகம் உருவாக்கினார்கள். மழை பொய்த்து போகும் காலங்களில் அவை விவசாய நிலங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் பயன் தரும் என்ற நினைவில்.
இந்தியாவில் மழை வரும் பருவங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் - தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வட கிழக்கு பருவக் காற்று.
1) மழை எப்படி உருவாகிறது?
சூரிய வெப்பத்தில் நிலம் சூடாகிறது; தண்ணீர் சூடாகிறது மற்றும் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் காற்றும் சூடாகிறது. கடல் நீர் சூடாகி சூடான காற்றுடன் கலந்து ஆவியாகி வானத்தை நோக்கி சென்று ஒரு சில தூரத்தில் மேகமாக மாறுகின்றன. மேலும் மேலும் ஆவி சேரும் போது மேகம் கனத்து போகிறது. அதாவது நீர் நிறைந்து விடுகிறது. இந்த நீர் பூமியின் மேற்பரப்பில் வந்து விழுந்து ஆக வேண்டும். எங்கு விழுவது? தண்ணீர் சூடாவது போல நிலப்பரப்பும் சூடாகிறது. நிலத்தின் மேல் உள்ள காற்றும் மேலே செல்ல ஆரம்பிக்கிறது. அதன் காரணமாக காற்றின் அழுத்தம் அந்த நிலப்பரப்பில் குறைகிறது. அந்த குறைபாடை சமன் செய்ய வேண்டும். Balancing - இந்த நேரத்தில் நீரால் நிறைந்து இருக்கும் மேகமானது அந்த குறைந்த காற்றழுத்த பகுதியை நோக்கி நகர்கிறது. நிலத்தை நெருங்கும்போது அது மழையாக பரிணமிக்கிறது. இதைத்தான், குறைந்த காற்றழுத்த பகுதி என்று சொல்லுவார்கள். இது மாறிக்கொண்டே இருக்கும். மதியம் ஒரு மணியளவில் குறைந்த காற்றழுத்தம் உள்ள பகுதி, அடுத்த ஒரு மணி நேரத்தில் மாறக்கூடும்.
2) தென் மேற்கு பருவக்காற்று:
இது இந்தியாவின் தென்மேற்குப்பகுதியில் அரபிக்கடலில் உருவாகிறது. குறிப்பாக சொல்லப்போனால், தமிழகத்தின் தெற்கு மூலை மற்றும் கேரளா மாநிலம். இங்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக வெப்பத்தால் தண்ணீர் ஆவியாகி உருவாகும் மேகக்கூட்டம் நிலப்பகுதியை நோக்கி நகர்கிறது. நிலம் சூடாகும் வரை காத்திருக்கிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக நிலப்பகுதி குறைந்த காற்றழுத்தப்பகுதியாக மாறுகிறது. அதன் காரணமாக ஜூன் முதல் வாரத்தில் மழை பொழிய ஆரம்பிக்கிறது. இந்த மழையின் காரணமாக, தமிழகத்தின் தெற்கு பகுதி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு கிடைக்கும் மொத்த மழையளவில் 75 சதவீதம் இந்த மழையின் மூலமாகத்தான். மழை பொழிந்து பொழிந்து பலவீனமாகி போகிறது. பிஹார் மற்றும் அசாம் வரை சென்ற பின் அது தனது திசையை மாற்றுகிறது.
3) வட கிழக்கு பருவக்காற்று:
தென் மேற்கு பருவக்காற்று திசை மாறும் போது அது வட கிழக்கு பருவக்காற்றாக மாறுகிறது. இப்போது அது வடகிழக்கு திசையிலிருந்து, தெற்கு நோக்கி நகர்கிறது. அதாவது மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழகத்தின் கிழக்கு பகுதிகள் இந்த மழையால் பயன் பெறுகின்றன. இந்தியாவில் மொத்த மழையளவில் இது 25 சதவீதம் தான். இந்த மழை அக்டொபர்- நவம்பர் மாதங்களில் பொழியத்தொடங்கிறது.
மழை இயற்கையின் வரப்பிரசாதம். வீடுகளில் மற்றும் அபார்ட்மெண்டுகளில் தண்ணீர் overhead டாங்குகளில் நிரப்பி வைத்து தேவைக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ளுவது போல இங்கும் அணைகளில் தேக்கி வைத்து தேவைக்கு தகுந்தவாறு கொடுத்து உதவுகின்றன அரசாங்கங்கள்.
வாசகர் பங்களிப்புகள்/ Readers' Contributions
சிறுகதை
நல்லதொரு குடும்பம்
"கல்யாணி!அடியே கல்யாணி"
கம்பீரக்குரல் கேட்டதும் சிவகாமிப்பாட்டி வந்திருப்பது புரிந்து, "அச்சச்சோ. வம்புக்கார பாட்டி வந்துட்டாளே. இன்னிக்கு என்ன கொடயப்போறாளோ" என கதி கலங்கினாள் கல்யாணி.
"ஏண்டி..ரெண்டாம்புள்ளக்கி கல்யாணம் ஆகி மாட்டுப்பொண் வந்தாளா? எப்டி இருக்கா?என்ன சீர் செஞ்சா?"
"எல்லாம் நன்னா நடந்துது. பொண்ணு மகாலெட்சுமிதான். இதோ கூப்பட்றேன்..ராது. வாம்மா. பாட்டிக்கு நமஸ்காரம் பண்ணு"
"என்னடீஇது. கன்னங்கரேல்னு கரிக்கட்டை யாட்டம்?..ஒம்புள்ள எத்தன செவப்பு? பெரிய மாட்டுப்பொண் என்ன லட்சணம்? அவசரப்பட்டுட்டியே. சீர் செனத்தி ஜாஸ்தி குடுத்துட்டாளாக்கும். அதான் போய் விழுந்துட்டியோ?"
கண்கலங்க உள்ளே ஓடிய ராதுவை பாத்தபடி, "ஐயோ. என்ன இப்டிப் பேசறேள்? இவ மகா லெட்சுமி சொரூபம். மனசெல்லாம் தங்கம்..அவளே தங்கம். தங்கத்தோட தங்கம் சேந்து வந்திருக்கு." என்றாள் கல்யாணி
"என்னமோடிம்மா.ரெண்டு மாட்டுப்பொண்கள்குள்ள ஏத்த தாழ்வு வரப்டாது. "
"அதெல்லாம் ஒண்ணும் வராது. நான் ஏன் இருக்கேன். பாத்துக்கறேன்"
"ஆமாமாம்! நீ இங்கிதம் தெரிஞ்சவளாச்சே. கெட்டிக்காரி. என்ன இவ்ளவு பட்சணம் குடுக்கறே. நல்ல மனசு ஒனக்கு. வர்ட்டா!"
"ஏம்மா. நான் லவ் பண்ண, குருக்களாத்துப்பொண்ண, நம்ம செலவுல கல்யாணம் பண்ணி கூட்டி வந்திருக்கோம். அண்ணி பெரிய பணக்கார வீட்டுப்பொண்ணு. என்ன காம்ப்ளெக்ஸ், காம்ப்ளிகேஷன் வருமோ. இந்த கெழவி வேற பத்த வச்சுட்டுப் போய்டுத்து. நீ பாட்டுக்கு அவ நெறய கொண்டுவந்திருக்காங்கறியே" கேட்டுண்டிருந்த பிள்ளையாண்டான் விசனப்பட்டான்.
"ஆமாண்டா. உன் அப்பா அவ பேர்ல ஒரு ப்ளாட் வாங்கியிருக்கார். பெரியவ இவள மட்டமா நெனக்கப்டாதுன்னு அவாத்துல நகை நட்டுக்கு பதிலா கொடுத்ததா சொல்லியிருக்கோம்..எங்களுக்கு பசங்க சந்தோஷமே முக்கியம்.நீ நெறய சம்பாதிக்கறே. நெறய நகை வாங்கி போடு. அவ மனசு கஷ்டப்படறமாதிரி யாரும் இங்க எதுவும் பேசமாட்டா..நம்ம வீட்டு மனுஷா ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவா" என்றபடி உள்ளே போனாள் கல்யாணி.
வேறு அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த ராது, நிம்மதியுடன் கண்ணை துடைத்தபடி, "இவா மெச்சும் மருமகளா நடந்துப்பேன்" என உறுதி பூண்டாள். இந்த உண்மையை ஏற்கனவே தெரிந்து கொண்டிருந்த பெரிய மருமகளோ, இங்கிதத்துடன் தனக்கு எதுவும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் சகஜமாக இருந்தாள். இதுவன்றோ நல்ல குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமன்றோ? | ![]() |
சிறுகதை
அம்புஜாவின் முடிவு!
“சொல்றதைப் புரிஞ்சுக்கோங்கப்பா! இந்த காலத்துலே ரெண்டுபேரையும் ஒன்னா வச்சுக்கிறது கஷ்டம்மா. ஒருத்தர் என்னோட இன்னொருத்தர் தம்பியோட இருங்க. ஆறுமாசத்துக்கொருமுறை இடம் மாறுங்க . உங்களுக்கும் ஒரு மாறுதலாயிருக்கும் “
என்று பணிஓய்வு பெற்ற நாளிலிருந்து மகன்கள் சொல்ல மூத்த தம்பதியர் யோசனையில் ஆழ்ந்தனர்.பத்துநாட்களாகட்டும் தம்முடிவைச் சொல்வதாக் கூறினர்
உள்ளூர மகன்கள் தங்களை பிரிப்பதும் வார்த்தைக்கு வார்த்தை கஷ்டமென்பதும் புரிஞ்சுக்கோங்க என்று சலிப்பாக பேசுவதும் ஏற்புடையதாகயில்லை.
இவர்களை பாரமாக கருதாது பாசத்தைக் கொட்டி வளர்க்கையில் தங்கள் வசதிகளையும் ஆசாபாசங்களையும் தியாகம் செய்ததும் ஏனோ அசந்தர்ப்பமாய் நினைவில் வந்தது.
திடுதிப்பென்று ஒருநாள் வந்து நின்றான் பெரியவன் .
'அம்மா! என்னம்மா இன்னும் யோசனை? சனிக்கிழமையே கெளம்பலாம். யார் தம்பி வீட்டுக்கு போக நினைக்கிறீங்களோ அவங்க வழியிலே இறங்கட்டும் இன்னொருத்தர் என்னோடு வாங்க. உங்க இஷ்டம்தான் ரெண்டு பேரும் எங்க வேண்ணாலும் இருங்க. சரியா ?”
"பெரியவனே! பொறுடா! சின்னவனுக்கு போனைப்போடு .”
"என்னம்மா? என்னவோ பேசனும்னியாம்"
"ஆமாம்டா !ரெண்டு பேருமே எங்களை ஒன்னா வைச்சுக்கக் கஷ்டப்படறீங்க புரிஞ்சுகிட்டோம். ஆனா இந்த வயசுலேதான் தம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் உதவியா அனுசரணையா இருக்கனும். அது உங்களுக்கு எங்க வயசு வரும் போது தெரியும். அதனாலே ..."
"அதனாலே என்னம்மா வரலைன்னு முடிவெடுத்திட்டீங்களா? அப்பவே ஒன் மருமவ சொன்னா "
"அவ சொன்னதும் நீ கேட்டதும் இருக்கட்டும். இப்ப நான் சொல்றதை நீ கேளு.நாங்க ரெண்டு பேருமே முதியோர் ரெசிடென்ஷியல்ஷிப்புலே டபுள்பெட்ரூம் வீடு வாங்கிட்டோம்
"என்னது? "
"கிறுக்காம்மா நீ ?
" ரிஜிஸ்டர் பண்ணியாச்சு புதன் கிழமை பால்காய்ச்சப் போறோம். முடிஞ்சா வாங்க லொகேஷன் அனுப்புறேன். இதுகூட இப்பவும் உங்களை யோசிச்சுத்தான் வாங்கினோம்டா."
".........." , "....." "உனக்கு ரெண்டும் பொண்ணு. உனக்கு ரெண்டு பையன். வயசானப்பிறகு இப்போ நீ எங்களை புருஞ்சுக்கன்னு சொல்றாப்போலே ஒம் பையனுங்க சொல்லலாம்.. பெண்பிள்ளைகளைப் பெத்தவன் பொண்ணுங்க வீட்டிலா தங்க முடியும். அதான் யோசிச்சு எங்களுக்கப்புறம் உங்களுக்கு உபயோகப்படும்ன்னு வாங்கிருக்கோம்." அம்புஜா அவ்ளோதான் முடிந்தது என்பதுபோல நகர்ந்தாள். | ![]() |
சிறுகதை
அன்பின் இசை
"அப்பா , நான் உங்களை இன்னைக்கு அலுவலகத்தில் கொண்டு விடட்டுமா ?"
சட்டையை பேண்டுக்குள் நுழைத்து பெல்ட் போட்டுக் கொண்டிருந்த குமரன் மகனைப் பார்த்தார்.
" பரவாயில்லைப்பா. நானே போறேன். உன்னுடைய புதுப் பாடல் பதிவுக்கு ஒலிப்பதிவுக் கூடத்தில் இன்னைக்கு நேரம் கிடைச்சுருக்குன்னு சொன்னியே, அதைப் பாருப்பா."
"சாயந்திரம் உங்களோட பணி ஓய்வு பிரிவுபசார விழாவுக்கு நானும் லதாவும் அஞ்சு மணிக்கு உங்க ஆபீஸ் வந்துவிடுவோம்பா."
"சரிடா கண்ணா".
அவர் கிளம்பியவுடன் மனைவியிடம் சொன்னான்.
"38 வருஷமா தனக்குன்னு எதுவும் செஞ்சுக்காம குடும்பத்துக்காகவே உழைச்சிருக்காரு. நாளைலருந்து வீட்ல சும்மா இருப்பாரு. இனியுள்ள நாட்களைஅவருக்கு பிடிச்சபடி அர்த்தம் உள்ளதாக்குறதுக்கு என்னாலானதை செய்யணும்னு நினைக்கிறேன் லதா. உன்னுடைய ஒத்துழைப்பும் வேணும்." மனைவியிடம் விவரித்தான்.
" அப்போ உங்க கனவு?"
" நமக்கு வயசு இருக்கு. பார்த்துக்கலாம்."
லதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஒத்துக் கொண்டாள்.
ஒரு வாரம் சென்றிருக்கும் .
"அப்பா ..."
" கண்ணா ..."
ஒருவரை ஒருவர் அழைத்தபோது இருவர் கைகளிலும் ஒவ்வொரு வெள்ளை உறை இருந்தது.
" இதுல இருபது லட்ச ரூபாய்க்கு செக் இருக்குப்பா. நீங்க மறுக்காம வாங்கிக்கணும் . உங்களுக்கு படிப்பு மேல இருக்கிற ஆர்வம் எனக்குத் தெரியும். சின்ன வயசுல நீங்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்ள படிக்க ஆசைப்பட்டு வசதி இல்லாததினால் முடியலை. இப்போ நிறைய பல்கலைக்கழகங்களில் ஆறு மாசம், ஒரு வருஷம் ஆன்லைன் கோர்சஸ் இருக்குப்பா. தகவல்களை உங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கேன். உங்களுக்குப் பிடிச்ச யூனிவர்சிட்டில பிடிச்ச கோர்ஸ் படிங்கப்பா. இது என்னோட ஆசை."
குமரன் நெகிழ்ந்து நின்றார். " கண்ணா, இதுல என்னோட ஓய்வூதியப் பணத்துக்கான காசோலை இருக்கு. இத வச்சு உனக்கு பிடிச்ச மாதிரியான ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தை நீயே அமைச்சுக்கணும். வெளியில் தேடியலையவேண்டாம். உனக்குப் பிடிச்ச இசையை உருவாக்கி நீ ஒரு பெரிய இசைக்கலைஞனா வரணும்." இரு உறைகளும் இடம் மாறியபோது அன்பின் இசை எழுந்தது. | ![]() |
சிறுகதை
எதிர்பாராதது
மாலை சூரியன் செம்மஞ்சள் நிறத்தில் மறைந்து கொண்டிருந்தான்.
ஊரின் பழைய கிணற்றருகே பெண்கள் ஒவ்வொருவராகத் தண்ணீர் குடங்களுடன் வந்தார்கள். மழை இல்லாம கம்மாய் வறண்டு கிடந்தது. இந்த ஊருக்கு ஒரே விடிவெள்ளி இந்த பழைய கிணறு தான்.
மீனாட்சி குடத்தை இடுப்பில் வைத்து கொண்டு மகளை கையில் பிடித்துக் கொண்டு வந்தாள்.
அந்த சிறுமியை தாயின் கால்களுக்கு இடையே தடுக்கி விட்டவாறு நடக்கவே சனியனே கொஞ்சம் தள்ளி தான் நடந்தா என்னவாம் என்று மகளிடம் எரிந்து விழுந்தாள்.
குழந்தையை வீட்டில் விட்டுட்டு வரலாமில்ல என்று கேட்ட பரிமளாவிடம்
புரியாம பேசாத அக்கா புள்ளைய யாரை நம்பி விட்டுட்டு வர்றது என்று சலித்துக் கொண்டாள் மீனாட்சி.
போன வாரம் ஆராயி அவ பேத்தியை வீட்ல விட்டுட்டு தண்ணி எடுக்க வந்தப்போ எதிர் வீட்டு ராமு குழந்தைய நாசம் பண்ணி போலீஸ் ஆஸ்பத்திரின்னு அலைஞ்சது மறந்து போச்சா என்றாள் சாந்தி.
மீனாட்சி பரிமளா சாந்தி மற்றும் அந்தத் தெரு பெண்கள் அனைவரும் 100 நாள் வேலை திட்டத்தில் கம்மாயை தூர் எடுத்து கரை கட்டிக் கொண்டிருந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை மட்டுமல்ல எதிர்பாராமல் சுகக்கேடு ஏற்பட்டாலும் கஷ்டம் தான்.
மாற்றுத்திறனாளி மகளை பள்ளியில் விட்டு விட்டு வந்த பரிமளா தன்னுடைய வேலை முடிந்து வீட்டுக்கு போகும்போது பள்ளியில் இருந்து மகளை அழைத்துச் செல்வது வழக்கம்.. அன்றும் அதே போல பள்ளிக்கு மகளை அழைக்கச் சென்றவளுக்கு உங்க மகளுக்கு உடம்பு சரியில்லை உங்களை கைபேசியில் கூப்பிட்டேன். ஆனா ஸ்விட்ச் ஆஃப் என்று பதில் வந்தது.. உங்களுக்காக காத்திருக்கக் கூடாதுன்னு புள்ளைய ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு டீச்சரமா கூட்டிட்டு போயிருக்காங்க என்று பள்ளி உதவியாளர் பதில் சொன்னார்..
பிறகு பரிமளா ஆஸ்பத்திரிக்கு ஓடியதும் பிள்ளையை பார்த்ததும் வேறு கதை ஆனால் உடல்நிலை சரியில்லாத குழந்தையை விட்டுட்டு போகும்போது தகவல் சொல்லிட்டு போக வேண்டாமா? இப்படி திடீர்னு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று டீச்சர் அம்மா கடிந்து கொண்டது பரிமளாவிற்கு ஞாபகம் வந்தது. | ![]() |
ஐரோப்பா பயணம் போகலாமா?
ஐரோப்பா பயணம் போகலாமா? (பகுதி 7)

பாரீஸிலிருந்து பெல்ஜியத்துக்குப் பேருந்தில் பயணிக்கும்போதே சாப்பாட்டு பார்சலைக் கையில் தந்து விட்டார்கள். சப்பாத்தி, சைட் டிஷ், புலாவ். திரும்பவும் பாரீஸ் சிட்டியை முழுக்கக் கடந்து தான் போக வேண்டியிருந்தது. Football stadium, தலைநீட்டிய காம்ப்ளான் குழந்தை, நகரத்தையே அழகாக்கும் சீன் நதி எல்லாவற்றிடமும் விடைபெற்றுக் கொண்டோம்.
எங்கள் குழுவில் மனோரமா மேடத்துக்கு அழகான குரல். பழைய பாட்டு, புதுப்பாட்டு எல்லாம் பாடி அசத்தினார். ஸ்ரீப்ரியா உற்சாகமாகப் பாட ஆரம்பிக்க, குட்டி ஜெய்ஸ்ரீ சேர்ந்து கொள்ள சங்கீத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சித்ரா கர்னாடக சங்கீதம் அழகாகப் பாடினார். உப்பிலி சார் (குட்டி ஜெய்ஸ்ரீ அப்பா) நல்ல குரல்வளத்துடன் பழைய பாடல்கள் பாடினார். வெங்கடேசன் சார் உற்சாகமாக எம்.ஜி.ஆர். பாட்டுப் பாடினார். இந்தக் கலகலப்பில் பெல்ஜியமே வந்து விட்டது. பெல்ஜியம் அட்டோமியத்தில் இறங்கினோம். புகைப்படம் எடுத்துக் கொள்ள இருபது நிமிடக் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அந்த அட்டோமியம் 120 மீட்டர் உயரத்தில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒன்பது எஃகுக் கோளங்களுடன் காட்சியளிக்கிறது. இது ஒரு இரும்புப் படிகத்தை 165 பில்லியன் அளவுக்குப் பெரிதாக்கிக் காட்டும் எனச் சொல்கிறார்கள். தினமும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை திறந்திருக்கும். அதன் முன்னால் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு உடனே கிளம்பி விட்டோம்.
மாலையில் பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸில் (Brussels) உள்ள Grand Place என்னுமிடத்துக்கு வந்தோம். சுற்றிவர அழகான கட்டிடங்களும் நடுவே பெரிய சதுக்கமும் இருக்கின்றது. இந்தக் கட்டிடங்கள் அனைத்தும் 17ம் நூற்றாண்டு கோதிக் பாணி கட்டிடக் கலையைப் பறைசாற்றுவதாக உள்ளது.
இது யுனஸ்கோ பாரம்பரியத் தளம் என்பதோடு ஐரோப்பாவின் மிக அழகான சதுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை இந்த சதுக்கத்தில் பிரம்மாண்ட மலர்க்கம்பளம் விரிக்கப்பட்டு விழாவாகக் கொண்டாடப்படும் என்று சொன்னார்கள்.
இதனையொட்டியிருந்த நம்ம ஊர் ரெங்கநாதன் தெரு போல் குறுகலான சந்துகளில் நுழைந்தோம். நிறைய சாக்லேட் கடைகள் இருக்கின்றன. போகும் வழியில் பள்ளிகொண்ட நிலையில் ஒரு சிலை இருந்தது. அவரைத் தொட்டால் நினைத்தது நடக்குமாம். (அட, எல்லாருமே நம்மை மாதிரித் தான் சில பல நம்பிக்கைளோடுஇருக்காங்க!) நாங்களும் தொட்டோம்.
கொஞ்ச தூரம் நடந்து போனால் நடுத் தெருவில் ஒரு சின்னப் பையன் மூச்சாப் போகும் சிலை. அதுதான் அந்த ஊரின் சிறப்பு அம்சங்களில் பிரதானமானது. நம்ம வூட்டுப் புள்ளை இப்படி நடுத்தெருவுல மூச்சாப் போனா கண்டபடி திட்டுவோம். இவிங்க கொண்டாடறாங்க!
![]() | 61 செ.மீ. உயரமுள்ள அந்த வெண்கல சிலை கி.பி.1619ல் Jerome Duquesnoy என்பவரால் கட்டப்பட்டது. அச்சிலை ‘கள்ளங்கபடமற்ற துடுக்குத்தனமான, வசீகரமான’ மனப்பான்மையை வெளிப்படுத்துதாகத் தெரிவித்தார்கள். அந்தப் பையனைப் பார்த்தவுடன் எங்களுக்கும் ஒரு யூரோ ஞாபகம் வந்தது. எந்த சாக்லேட் கடையில் டாய்லெட் இருக்கோ, அங்கேயே சாக்லேட் வாங்குவது என்று தீர்மானித்தோம். நல்லவேளை ஒரு சாக்லேட் கடையின் அடித்தளத்தில் இரண்டு டாய்லெட்கள் இருக்குன்னு சொன்னாங்க. அங்கேயே வேலையை முடித்துக் கொண்டு அதற்கு நன்றிக்கடனாக எல்லாரும் சேர்ந்து ஏறத்தாழ இருநூற்றைம்பது யூரோவுக்கு சாக்லேட்டுகள் வாங்கினோம். ஒரு பெல்ஜியம் சாக்லேட்டே ஒரு யூரோ. நூற்றிப்பத்து ரூபாய்க்கு அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்தால், நல்லாத்தான் இருக்கு! அதுக்காக இவ்வளவா? |
அங்குள்ள கடைகளில் எல்லாம் பெரும்பாலும் அந்தக் குழந்தை மூச்சா பொம்மைகள் தான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி போனபோது ஒரு ஹோட்டல் வாசலில் இந்த சிலையைப் பார்த்தேன். அந்த ஹோட்டல் முதலாளி பெல்ஜியம் போயிட்டு வந்திருப்பார் போல. பெல்ஜியம் waffles ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னாங்க. Waffles மேல் cream, வாழைப்பழத் துண்டுகள், strawberry துண்டுகள் எல்லாம் போட்டு அமர்க்களமாக இருந்தது. ஒன்று 8 யூரோ. அந்த சதுக்கத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டு நெதர்லாந்து நோக்கிப் பயணம் துவங்கியது. நாளை ஆம்ஸ்டர்டாமில் சந்திப்போம் மக்களே! | ![]() |
சிறுகதை
கரைந்து போன காதல்..
இப்போதெல்லாம் பள்ளியில் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த சுகுமார் அடிக்கடி அவங்க அப்பா கடைக்கு வர ஆரம்பித்தான்.
"என்னடே, இந்த டீக்கடையெல்லாம் கடையாவே மதிக்கமாட்ட இப்ப அடிக்கடி வர்றியே என்ன விஷயம்?" என்றார் அப்பா .
காரணம் இல்லாமல் ஒன்றும் ஐயர் ஆத்தோட போகவில்லை. தினம் சரியாக எட்டு மணிக்கு அந்த டீக்கடையைகடந்து செல்லும் வெள்ளை ஸ்கூட்டியில் வரும் மஞ்சள் சுடிதார் தேவதை, அவன் கண்ணை மட்டுமல்ல கருத்தையும் கவர்ந்திருந்தாள். அதுவும் கடையை கடக்கும் போது லேசான ஓரப் பார்வையில் இதழோரம் சிறு புன்னகை..ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் அவனுள் பாய்ந்தது.
பள்ளி முடித்து கல்லூரி வந்த போது காதலும் மாறிப் போனது. இன்று மஞ்சள் சுடிதார் சுந்தரியை இன்னொருவனுடன் ஒரு ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருப்பதை பார்த்தானோ அப்பவே அவனுள் இருந்த காதல் செத்துப் போனது.
அன்று தன்னைப் பார்த்து புன்னகைத்தவள் இன்று ஒரு பணக்கார இளைஞனுடன் ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கிறாள்.ஹோட்டலில் பார்த்த பணக்கார இளைஞனைப் போல் தான் முன்னேறி இருந்தால் தன்னுடன் வந்திருப்பாளோ?
அவனுள் ஒரு வெறி எழுந்தது. தான் படித்த படிப்பும், தன் அப்பாவின் கடையையும் இணைத்து சிறிய ரெஸ்டாரன்ட் தொடங்கினான். கிராமிய பாரம்பரிய உணவுகளைஅப்பா அம்மா தயாரிக்க, அவற்றை புது விதமாக விளம்பரப்படுத்தினான்.மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாக, நகரெங்கும் பல கிளைகள்.... ஓயாமல் செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது நிறைய ஆன்லைன் ஆர்டர்கள். வசதிகள் பெருகிவிட பிசியாகி போனது அவன் வாழ்க்கை. அவனுடைய அந்தப் பெரிய ஹோட்டலின் வாசலில் வந்து ஒரு பெண் தயங்கியவாரே நின்று கொண்டிருந்தாள்.
தன் கண்களையே நம்ப முடியவில்லை. தயங்கி நின்ற பெண் அதே மஞ்சள் சுடிதார்.. | ![]() |
நவராத்திரி கொண்டாட்டம்
சிட்னியில் நவராத்திரி கோலாகலம்
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி பண்டிகை, பெண்களால் இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களில் வசிக்கும் இந்தியர்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த வருடம் (2026 ) நவராத்திரி விழாவின் போது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் என் மகள் குடும்பத்தோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சுமார் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே நவராத்திரி பற்றி திட்டமிட ஆரம்பித்து விடுகிறார்கள். கொலு விஜய நாட்கள், விருந்தினர்கள் லிஸ்ட் , தம்பூலத்தோடு கொடுக்கப்படவேண்டிய அன்பளிப்பு, சுண்டல் மற்றும் சிற்றுண்டி வகைகள்,அணிய வேண்டிய புடவை, நகைகள் எல்லாம் கவனமாகப் பட்டியல் இடப்படுகின்றன.
நான் போன வீடுகளில் பண்பாடும் பாரம்பரியமும் இம்மியளவும் குறையாமல் சாஸ்திரப்படி கலசம், கடவுள் பொம்மைகளில் ஆரம்பித்து மிக நேர்த்தியாக ரசனையோடு கொலு வைத்து இருந்தார்கள். முக்கியமாக என் கவனத்தை கவர்ந்த விஷயம் ஒன்று....பாட்டரியால் இயங்கும் பொம்மைகள். வாகனங்கள் , லெகோ போன்ற நவீன பொம்மைகள் இல்லாமல் பாரம்பரிய களிமண் , வெண்கல , பீங்கான் , காகிதக் கூழ் பொம்மைகள் மற்றும் மரப்பாச்சிகள் பெரும்பாலும் வைக்கப்பட்டு இருந்தன. வீட்டு வாசல்களிலும் கொலுவின் முன்பும் வித விதமான மாவுக் கோலங்கள் மற்றும் ரங்கோலிகள் இடப் பட்டு இருந்தன.
விருந்தினர் சிலர் முறையாக கர்நாடக சங்கீதம் கற்று இருந்ததால் அம்பாள் மீது பாட்டுக்கள் பாடினர். சிலர் தினம் லலிதாசஹஸ்ரநாமம் , தேவிமஹாத்மியம் போன்ற ஸ்லோகங்களை பாராயணம் செய்து வந்தனர் . தாய்நாட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் இந்தப் பெண்களது சிரத்தையும் நம் கலாச்சாரத்தைப் பின்பற்றும் பாங்கும் என்னைப் பெரிதும் கவர்ந்தது . நான் சந்தித்த பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுப் பெண்களே . ஆபீஸ் மற்றும் வீட்டு வேலை, குழந்தைகள் பராமரிப்பு ஆகிய பொறுப்புகளுக்கு நடுவில் ஆவலோடு சிரத்தையாக நவராத்திரிக் கொண்டாடுவதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது . சிலர் சிரமம் பார்க்காமல் பத்து கிலோமீட்டர்கள் தொலைவு காரை ஓட்டிக்கொண்டு வந்து தாம்பூலம் வாங்கிக் கொண்டனர் . சுண்டலோடு சர்க்கரைப் பொங்கல் , வடை , வெரைட்டி ரைஸ் பிரசாதமாக கொடுக்கப் பட்டன.
எல்லா கொலுவும் பிரமாதமாக இருந்தன . மாதிரிக்கு சில புகைப்படங்கள் இணைத்து இருக்கிறேன் .



மொத்தத்தில் இந்த வருட நவராத்திரி அனுபவம் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்ததோடு மிகுந்த மனநிறைவையும் கொடுத்தது . | ![]() |
கவிதை
கோலம்

கோலம் போடும் பெண்களைக் கவனித்தால் தெரியும் சிறியது பெரியது கணக்கில்லை கோலம் போட்டு முடிந்ததும் தள்ளி நின்று முழுக் கோலத்தையும் தன் குழந்தைபோல் வாஞ்சையுடன் பார்த்துத் திருப்தியடையும் அவர்கள் தாய்மையின் அகராதி. | ![]() |
வாங்க, வரையலாம்!
Drawings submitted for the drawing competition held at Dhandeeswaram Nagar Library, Velachery, Chennai, in October 2026.






வாங்க, சிரிக்கலாம்!
![]() | ![]() |
![]() | ![]() |
![]() |














வாசகர் கருத்துக்கள்0