இதழ்கள்
தமிழ்த் தூது · Tamil Thoodhu

அக்டோபர் 2026 இதழ்

அக்டோபர் 2026 · October 2026 · Issue 16
சிறப்பம்சங்கள் · Highlights
அக்டோபர் 2026 இதழ்

ஆசிரியர் பக்கம்

ஆசிரியர் பக்கம்

அன்புள்ள வாசகர்களே!

வணக்கம்! தமிழ்த் தூது தற்போது புதிய மாற்றங்களுடன் மிகவும் பொலிவாக வெளிவருகிறது என்று பல வாசகர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளது எங்களுக்கு மிகவும் ஊக்கத்தை அளித்துள்ளது. அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் படைப்புக்களை அனுப்பி வரும் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்! அவர்கள் தமிழ்த் தூது இணைய முகவரியில் தங்கள் ஈமெயிலைத் தந்து சேர்ந்து கொள்வது (subscribe) மிகவும் அவசியம். அப்பொழுதுதான் தமிழ்த்தூது ஒவ்வொரு மாதமும் அவர்கள் ஈமெயிலில் கிடைக்கும். அத்துடன் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கட்டாயம் அனுப்ப வேண்டும்.

நமது “தமிழ்த்தூது” மாத இதழ் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களுக்காகவே முக்கியமாக வெளியிடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் அடுத்த தலைமுறை தங்களின் தாய்மொழியையும், அதன் நீண்ட, நெடிய கலாச்சார, பண்பாட்டு கூறுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காகவே தமிழ்த்தூது இதழை பல சிரமங்களுக்கு இடையில் வெளியிடுகிறோம். அதனை உலகில் உள்ள நம் தமிழ் இன மக்களுக்கு பெருமளவில் அறிமுகப்படுத்தினால்தான் இளைய தலைமுறை பயனடையும். அதனால் நம் இணைய இதழை அவர்களுக்கு பகிர்ந்து நம் வாசக எல்லையை விரிவாக்க வேண்டுகிறோம். 

விரைவில் நவராத்திரி ஆரம்பமாகிறது. வாசகர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்கள்!

முனைவர் மோகனா சுகதேவ் (தலைமை ஆசிரியர்)

01/10/2026

ஆசிரியர் குழு: கௌரிசங்கர், அஞ்சலி சுகதேவ், அனுபமா சுனில், ஜெஃப்ரி ஜோஜூ.

குறளின் குரல்

குறளின் குரல்

திருக்குறள் என்றால் என்ன?

திருக்குறள் என்பது தமிழ் மொழியின் மிகப் போற்றப்படும் பழமையான இலக்கிய நூல்களில் ஒன்றாகும். இதைத் திருவள்ளுவர் எழுதியுள்ளார். இதை “உலகப் பொதுமறை” என்றும் அழைப்பார்கள்.


திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரும் தத்துவஞானியும் ஆவார். அவரை பொதுவாக “தெய்வப்புலவர்” என்று அழைக்கின்றனர்.


திருக்குறளை நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?

இந்தத் தமிழ் இலக்கியம் உலகளவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது 107-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களில் நம்மை வழிநடத்தும் ஒரு ஒளிவிளக்காக இது விளங்குகிறது.


குறள் என்றால் என்ன? அதன் அமைப்பு எப்படி?

“குறள்” என்பது இரு வரிகளைக் கொண்ட செய்யுளைக் குறிக்கும். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறள்கள் உள்ளன. ஆகவே, மொத்தம் 1330 குறள்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


அதிகாரம்: அறிவுடைமை குறள் எண்: 428

Anjuvathu anjaamai paedhaimai anjuvadhu anjal arivaar thozhil

அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் இருப்பது அறியாமை. அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சி அறிவோடு நடந்து கொள்வது அறிவுடையோர் தொழில்

குறள் கதை

கழுதையின் புத்திசாலித்தனம்

AI generated image

சலவைத் தொழிலாளி ஒருவர் ஆற்றிற்குத் துணிகளைச் சுமந்து செல்ல கழுதை ஒன்றை வாங்கி வந்தார். வாயில்லாத ஜீவன் தனக்காக உழைக்கிறதே என்று அதற்கு நல்ல உணவுகளைக் கொடுத்து அன்புடன் பார்த்துக் கொண்டார். அதனால் கழுதையும் அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தது.

ஒருநாள் கழுதைக்கு காட்டுக்குச் சென்று அங்கே உள்ள தனது நண்பர்களைக் கண்டு வர வேண்டும் என்று தோன்றியது. அதனால் யாருக்கும் தெரியாமல் சலவைத் தொழிலாளியின் இல்லத்தில் இருந்து வெளியேறி காட்டுக்குச் சென்றது.

காட்டில் உள்ள விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்பதைக் கண்ட கழுதை பயந்து போனது.

“நாம் உயிரோடு இந்தக் காட்டில் வாழ முடியாது போலிருக்கிறதே.. .. .. எப்படியாவது இங்கிருந்து உயிருடன் தப்பித்துச் சலவைத் தொழிலாளியிடமே சென்று விட வேண்டும்.. .. “ என்ற எண்ணத்துடன் ஓடத் தொடங்கியது.

வழியில் முள் ஒன்று அதன் காலில் ஆழமாக ஏறியதால் நடப்பதற்கே சிரமப்பட்டு நொண்டிக் கொண்டு சென்றது. அப்போது அங்கு வந்த ஒரு ஓநாயிடம் மாட்டிக் கொண்டது.

“ஐயையோ! இது என்னை உயிருடன் கொன்று தின்று விடுமே.. எப்படியாவது இதனிடமிருந்து பிழைக்க வேண்டுமே.. .  என்ன செய்யலாம்?” என்று கழுதை யோசிக்கும்போது மின்னலாக யோசனை ஒன்று தோன்றியது.

“ஓநாய் நண்பா! என் காலில் விஷ முள் ஒன்று ஏறி உள்ளது. எப்படியும் நான் இறக்கப் போகிறேன். விஷ முள்ளோடு என்னை உண்டால் உனக்கும் விஷம் ஏறி இறந்து விடுவாய். விஷ முள்ளை எடுத்து விட்டு என்னை உண். அப்பொழுதுதான் நீயாவது உயிர் பிழைப்பாய்.” என்று கழுதை கூறியது.

அதைக் கேட்ட ஓநாய் “நீ மிகவும் நல்லவனாக இருக்கிறாய். நீ சொன்னது போலவே செய்கிறேன். இப்பொழுதே உன் காலில் உள்ள முள்ளை எடுக்கிறேன்.” என்று காலில் உள்ள முள்ளைக் குனிந்து ஓநாய் எடுத்து விட்டு நிமிரும்போது கழுதை ஓநாயின் முகத்தில் எட்டி உதைத்தது.

அதன் பலமான காலின் உதையில் தெறித்து விழுந்த ஓநாய் மயங்கி விட்டது. தன் அறிவான செயலால் ஓநாயிடம் இருந்து தப்பித்து உயிர் பிழைத்துச் சலவைத் தொழிலாளியின் இல்லம் சென்று அடைந்தது.  

வெள்ளை நிறத்தொரு பூனை

இலக்கியச் சோலை

இந்தப் பகுதியில் பாரதியார், ஔவையார், அழ. வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்று தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடிய தேசியக் கவிஞர்களை முன்னிலைப்படுத்துவோம். ஒவ்வொரு இதழிலும் அவர்களின் புகழ் பெற்ற பாடல்களின் மொழிபெயர்ப்பையும் வழங்குவோம்.

பல நிற பூனைகள்

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்.

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

-         மகாகவி சுப்ரமணிய பாரதியார் 

நமது பண்பாடு

நமது பண்பாடு

நவராத்திரி கோலங்கள்

நவராத்திரி திருவிழாவின் போது தீய சக்திகளை அழித்து நலம் தரும் முப்பெரும் தேவியரை (துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி) வரவேற்க வாசலில் கோலமிடுவது மிக முக்கிய மரபாகும். நவராத்திரியின் 9 நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பான மாவு மற்றும் வடிவங்களைக் கொண்டு கோலமிடுவது ஆன்மீக ரீதியாக உகந்தது என ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள்.  

9 நாட்களுக்குரிய பிரத்யேக கோல முறைகள், பாரம்பரிய படி கோலங்கள் மற்றும் அம்மன் முக ரங்கோலி வடிவங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

9 நாட்களுக்கான நவராத்திரி கோலங்கள்

நவராத்திரி ஒன்பது நாட்களும் தேவியரை மகிழ்விக்க வேண்டிய வடிவங்கள் மற்றும் மாவுகளின் விவரம்:

  • முதல் நாள்: அரிசி மாவினால் ஆன பொட்டுக் கோலம் (புள்ளி கோலம்).

  • இரண்டாம் நாள்: கோதுமை மாவினால் வரையப்படும் கட்டம் கொண்ட கோலம்.

  • மூன்றாம் நாள்: முத்துக்கள் போன்ற மலர் வடிவக் கோலம்.

  • நான்காம் நாள்: அட்சதை கொண்டு இடப்படும் படிக்கோலம் (அக்ஷதா வடிவம்).

  • ஐந்தாம் நாள்: கடலை மாவினால் பறவை வடிவங்கள் கொண்ட பறவைக் கோலம்.

  • ஆறாம் நாள்: பருப்பு வகைகளைக் கொண்டு போடும் தேவி வடிவக் கோலம் (எண் கமலம்).

  • ஏழாம் நாள்: வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்படும் விளக்கு அல்லது மலர்க் கோலம்.

  • எட்டாம் நாள்: காவி நிறப் பொடியால் வரையப்படும் பத்ம (தாமரை) கோலம்.

  • ஒன்பதாம் நாள்: கற்பூரப் பொடி அல்லது வாசனைப் பொடிகளால் இடப்படும் ஆயுத வடிவம் அல்லது சக்கரக் கோலம்.

பாரம்பரிய படி கோலங்கள்

பூஜை அறை மற்றும் கொலு மேடையின் முன் போடுவதற்கு இந்த நேர்த்தியான நேர்கோட்டு படிக்கோலங்கள் மற்றும் காவி பார்டர் வைத்த கோலங்கள் மிகவும் மங்களகரமானவை. இவை வீட்டிற்கு தெய்வீகப் பொலிவைத் தரும்.

 துர்க்கை அம்மன் முக ரங்கோலிகள்

நவராத்திரி மாலை வேளைகளில் அல்லது துர்காஷ்டமி, மகாநவமி நாட்களில் வண்ணப் பொடிகளைக் கொண்டு அம்மனின் திருமுகத்தை ரங்கோலியாக வரைந்து வழிபடலாம்.

உணவே மருந்து

உணவே மருந்து

சிறுதானிய உணவு என்றதும் ராகி தோசையும், கம்பு தோசையும் மட்டும்தானா? இன்னும் சிலர், அது ஏதோ நோயாளிகள் உண்ண வேண்டியது என்று நினைக்கிறார்கள். வரகரிசியிலும் தினையிலும் சோறு தவிர வேறு எதையும் சமைக்க முடியாது என்பதும் பலரின் எண்ணம். உண்மையில் நாம் விரும்பிச் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் நம் பாரம்பரிய தானியங்களில் செய்ய முடியும். இவற்றைச் சுவையாகச் செய்வது எப்படி எனத் தெரிந்துகொண்டால் போதும், ஒவ்வொரு வேளை உணவுமே நமக்கு விருந்துதான்.  

 கம்பு வெஜிடபிள் கஞ்சி

தேவையானவை: ஊறவைத்த கம்பு - அரை கப், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் - 2, பிரியாணி இலை - 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) - 3 கப், நல்லெண்ணெய் - 3  டீஸ்பூன், பூண்டு - 3 பல், உப்பு, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப, எலுமிச்சைப்பழம் - அரை மூடி.

செய்முறை: கம்பை நன்றாகச் சுத்தம்செய்து ஊறவைக்கவும். இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும். பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும். இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

பலன்கள்: இதில் இரும்புச் சத்து மிக அதிகம். ரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

பாட்டி / இயற்கை வைத்தியம்

பாட்டி / இயற்கை வைத்தியம்

கர்ப்ப காலத்தில் பாட்டி வைத்தியம்!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் சின்னச் சின்ன உபாதைகளைச் சமாளிக்க சில எளிய பாட்டி வைத்திய முறைகள் உள்ளன.

மசக்கை மற்றும் குமட்டலுக்கு:

  • காலை நேரச் சோர்வு மற்றும் குமட்டலுக்கு இஞ்சி சாறில் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.

  • எலுமிச்சை சாற்றை முகர்வது அல்லது அதில் சிறிது உப்பு கலந்து அருந்துவது வாந்தியைத் தடுக்கும்.

  • செவ்வாழைப்பழம் சாப்பிடுவது செரிமானப் பிரச்சனைக்கு நல்லது.

இடுப்பு எலும்பு வலுவாக:

  • மூன்றாவது மாதத்தில் உளுந்தங்களி சாப்பிடுவது இடுப்பு எலும்புகளை வலுவாக்க உதவும்.

கை, கால் வீக்கத்திற்கு:

  • கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் ஏற்படுவது இயல்பானது.

  • இப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி போன்றவற்றை சாப்பிடலாம்.

  • ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து சட்டியில் வறுத்து, அது வெடிக்கத் தொடங்கும்போது தண்ணீர் ஊற்றி காய்ச்சி குடித்தால் கால் வீக்கம் குறையும் என்று கூறப்படுகிறது.

சுகப்பிரசவத்திற்கான உணவுகள்:

  • மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தயக் கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.

  • ஐந்தாவது மாதம் முதல், ஒரு டம்ளர் அரிசி கொதிநீரில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதிய நேரத்தில் சாப்பிடலாம்.

  • கர்ப்ப காலம் முதல் பிரசவ காலம் வரை சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்த முருங்கைக் கீரை சூப் சாப்பிடலாம். இது பிரசவத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

பிரசவ நாள் நெருங்கும்போது வயிற்றுவலி:

  • பிரசவ நாள் நெருங்கும் நேரத்தில் சிலருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படலாம்.

  • அப்போது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கஷாயம் வைத்து சாப்பிடலாம்.

  • இது சாதாரண வயிற்றுவலியாக இருந்தால் வலி நின்றுவிடும் என்று கூறப்படுகிறது.

  • அதே நேரத்தில் அது பிரசவ வலியாக இருந்தால், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைக் குறிக்கலாம்.

துளசி மற்றும் சுகப்பிரசவம்:

  • கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு கருவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

  • துளசி, பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல்நலனில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

  • கர்ப்ப காலத்தில் அவ்வப்போது துளசி இலைகளை மென்று சாப்பிடுவது, வலியின்றி பிரசவம் ஏற்பட உதவும் என்று பாரம்பரியமாகக் கூறப்படுகிறது.

  • கர்ப்பிணிகள் துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகைத் தேநீராக அருந்தலாம். இது பிரசவ காலத்தை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

  • அதேபோல், அவ்வப்போது சில துளசி இலைகளை மென்று வருவது வலியின்றி பிரசவம் ஏற்பட வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் உணவில் கவனம்:

  • கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களிலும், 7வது மாதம் தொடங்கி கடைசி 3 மாதங்கள் வரையிலும் கர்ப்பிணிகள் தங்களது உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

  • இந்த காலங்களில் திரவ உணவுகள் மற்றும் பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது.

  • இவை கருவின் வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

  • உணவில் பால், இளநீர், பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அதிகரிக்கலாம்.

குறிப்பு: மேலே உள்ளவை பாரம்பரியமாகக் கூறப்படும் “பாட்டி வைத்திய” முறைகள். கர்ப்ப காலத்தில் மூலிகைகள், கஷாயங்கள் அல்லது உணவு மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் மருத்துவர் அல்லது மகப்பேறு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது.

படிக்கலாம் வாங்க

படிக்கலாம் வாங்க

மாயக் குதிரையும் மரகதத் தீவும்

ஆசிரியர்: விழி. பா. இதயச்சந்திரன்

மொத்த பக்கங்கள் : 96

விலை: ரூ 120/-

வகை: சிறுவர் கற்பனைக் கதை

பொருத்தமான வயது: 8 முதல் 14 ஆண்டுகள்

கதைநாயகன் கவின், ஒரு சாதாரணப் பள்ளி மாணவன். ஒருநாள் அவனது வீட்டுத் தோட்டத்தில் இறக்கைகள் முளைத்த ஒரு மாயக் குதிரையைச் சந்திக்கிறான். அந்தக் குதிரை பேசும் ஆற்றல் கொண்டது! கவினைத் தன்னுடனே "மரகதத் தீவு" என்ற ரகசிய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அந்தத் தீவில் உள்ள விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் ஒரு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அதைத் தன் புத்திசாலித்தனத்தாலும், தைரியத்தாலும் கவின் எப்படி முறியடிக்கிறான் என்பதே விறுவிறுப்பான மீதிக்கதை.

குழந்தைகள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில், தூய்மையான மற்றும் எளிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் கதையோடு பயணிக்கும் வண்ணமயமான ஓவியங்கள், குழந்தைகளை புத்தகத்தோடு கட்டிப்போடுகின்றன.வெறும் கற்பனையாக மட்டுமில்லாமல், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் விலங்குகளிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற உயரிய கருத்துக்களைக் கதை அழகாகப் புகட்டுகிறது.

உலகளாவிய தமிழ் செய்திகள்

சாலமன் பாப்பையா மறைவு: புகழ்பெற்ற தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா செப்டம்பர் 11, 2026 அன்று மதுரையில் காலமானார். படித்தவர்களிடம் மட்டுமே இருந்த பட்டிமன்ற கலைவடிவத்தை பாமர மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. இவரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனப் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதினுக்கு திருக்குறள் பரிசு: பிரிக்ஸ் (BRICS) மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பதிப்பை பரிசாக வழங்கியுள்ளார். தமிழ் நாகரிகத்தின் உலகளாவிய அறிவையும் வாழ்வியல் தத்துவத்தையும் ரஷ்ய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், இரு நாட்டுப் பண்பாட்டு உறவை பலப்படுத்தவும் இது உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஆசிய மொழிகளில் திருக்குறள்: முன்னதாக ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்ற உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது, திருக்குறளை உஸ்பெக் (Uzbek) மொழியிலும் மொழிபெயர்க்க பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.

மெல்போர்ன் கலைவிழா 2026: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் செப்டம்பர் 19, 2026 அன்று 'கலைவிழா 2026' என்ற பிரம்மாண்ட பண்பாட்டு விழா நடைபெற உள்ளது. விண்ட்காம் விடிஏ தமிழ்ப் பள்ளி (VTA Tamil School) சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இந்த விழாவில் தமிழ் இசை, பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாடகங்கள் வழியாகத் தமிழ் கலாச்சாரம் உலக அரங்கில் கொண்டாடப்படவுள்ளது.

 

பூந்தளிர் / Children’s Section

இந்த சிறுவர் பகுதியை உங்களுக்காக திரு. கௌரிசங்கர் வடிவமைத்திருக்கிறார்.

This children's section has been designed for you by Mr. Gowrishankar.


01

தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி

Tamil – Tamil – English Dictionary

இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வார்த்தைகளுக்கு சமமான அர்த்தங்கள் தரும் வேறு தமிழ் வார்த்தைகளை நீங்கள்  தெரிந்து கொள்ள இந்த பயிற்சி உதவும்.

 (In order to learn synonyms and the meaning in English, this section helps you learn five Tamil words, their Tamil synonyms and the English words equivalent in meaning to those words.)

எண்

S.No.

தமிழ் வார்த்தை

Tamil Word

 

சமமான தமிழ் வார்த்தை

Synonym

 

சமமான ஆங்கில வார்த்தை -  Meaning in English

1

ஆயன் – Aayan

இடையன் – Idaiyan

Shepherd

2

ஆயத்தம் – Aayatham

முன்னேற்பாடு - Munnerpaadu

Progress

3

ஆயாசம் – Aayasam

களைப்பு – Kalaippu

 

Tiredness

4

ஆயுதம் – Aayutham  

 

படைக்கலம் - Padaikalam

 

Weapon

5

ஆவணம் – Aavanam  

உரிமைப்பத்திரம் – Urimaipathiram

Document


02

எதிர்ப்பதங்கள் – Opposites

இங்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான எதிர்ப்பதங்களையும், அதற்கு ஈடான ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 (To learn the antonyms, five Tamil words, their meaning in English, Tamil words having opposite meaning for them and the equivalent English words for the opposite Tamil words have been provided here.)

எண்

S.No.

தமிழ் வார்த்தை

Tamil Word  

 

Equivalent English word

 

தமிழில் எதிர்ப்பத வார்த்தை

Antonym

சமமான ஆங்கில வார்த்தை

Equivalent opposite English word

1

பகைவன் (Pagaivan)

Enemy

நண்பன் (Nanpan)

Friend

2

துன்பம் (Thunpam)

Pain

இன்பம் (Inpam)

 

Happiness

3

உண்மை (Unmai)

Truth

பொய் (Poi)

 

Lie

4

உபத்திரவம் (Upathiravam)

Nuisance

உதவி (Uthavi)

Help

5

எகத்தாளம் (Egathalam)

Mockery

பாராட்டு (Paraattu)

 

Appreciation


03

சென்னை மாநகரம் - பெருமைகள்

சென்னை மாநகரம் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும்.  இந்தியாவின் பழமையான பெருநகரங்கள் - கல்கத்தா மற்றும் சென்னை. அதன் பிறகு உருவானது  தான் மும்பை.

01. ராயல் என்பீல்ட் என்ற  மிகவும் பிரபலமான மோட்டார் பைக் உற்பத்தி தொழிற்சாலை சென்னையில்  இருக்கிறது;

02. இந்தியாவின் மிகவும் நீளமான கடற்கரை என்று சொல்லப்படுகின்ற மெரினா கடற்கரை இங்கு தான் உள்ளது. இந்த கடற்கடையின் நீளம் சுமார் 12 கிலோமீட்டர்.

 03. கிண்டியில் அமைந்திருக்கும்  குழந்தைகள் பூங்கா  தேசிய பூங்கா என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

 04. சென்னையில் மூன்று ஆறுகள் ஓடுகின்றன - அடையாறு; கூவம் ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறுகள்;  இவை சென்னை நகரின் பல பகுதிகளின் வழியாக பாய்ந்தோடி இறுதியில் கடலில் கலக்கின்றன.

05. இந்தியாவின் நவீன டெக்னாலஜி நிறுவனங்கள் அமைந்துள்ள இடம் பழைய மகாபலிபுரம் சாலை. இதன் நீளம் குத்துமதிப்பாக 30 கிலோமிட்டர் - சென்னையின் அடையாரை அடுத்து மத்திய கைலாஷ் என்ற முனையில்  தொடங்கி திருப்போரூர் வரை நீண்டு செல்கிறது. 

06. நிறைய கார் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன.  ஹூண்டாய் போர்ட் போன்றவை; எனவே இந்த நகரத்தை இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுகிறார்கள். டெட்ரோய்ட் என்ற கார்களின் நகரம் அமெரிக்காவில் இருக்கிறது.

07. உலகத்திலேயே லண்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக மாநகர அந்தஸ்து பெற்ற நகரம் - சென்னை - இது நடந்தது - 1688ல்.

08. கோயம்பேடுவில் அமைந்து இருக்கும் பேருந்து நிலையம் தான் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். தற்போது போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ஒரு பேருந்து நிலையத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

09. சிக்கன் 65 அவதாரம் எடுத்த நகரம் சென்னை - இதனை முதன் முதலில் தயாரித்து மக்களுக்கு அறிமுகம் செய்தவர்கள் - புஹாரி ஹோட்டல் நிறுவனத்தினர். சென்னையில் உள்ள  அண்ணா சாலையில் இந்த ஹோட்டலின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. தற்போது இந்த ஹோட்டலில் பல கிளைகள் நகரின் பல பகுதிகளில் அமைந்துள்ளன.  

10. உலகின் மிகப்பெரிய நூலகம் என்று சொல்லப்படுகின்ற அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ளது.

11. இந்தியாவின் மிகப்பெரிய வன விலங்குகள் பூங்கா - வண்டலூர் பூங்கா;

12. இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி 1794ல் இங்கு தொடங்கப்பட்டது.

13. இந்தியாவின் மிகப்பெரிய வணிக வளாகம் - ஸ்பென்சர் பிளாசா - இது 1863ல் தொடங்கப்பட்டது.

14. மெட்ராஸ் உயர்நீதி மன்றம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்றம் ஆகும்.

15. உலக மகா யுத்தத்தில் தாக்கப்பட்ட இந்தியாவின் ஒரே நகரம் – சென்னை.

16. இந்தியாவில் அதிக அளவில் சாலை மேம்பாலங்கள் அமைந்திருக்கும் இடம் சென்னை.

17. ஆசியாவின் மிகப்பெரிய Clover Leaf மேம்பாலம் சென்னை கத்திப்பாராவில் அமைந்திருக்கிறது. (இந்த மேம்பாலத்தில் சரியாக திசையறிந்து செல்வது என்பது ஒரு சாதனை என்று சொல்லப்படுகிறது)

18. கார்களின் நகரம் என்று சொல்வது போல, சிறந்த மருத்துவமனைகள் நிறைந்த இடம் சென்னை - உலகம் முழுவதும் இருந்து மருத்துவ உதவிகள்  பெறுவதற்கு இங்கு வரும் பயணிகள் மிக அதிகம்.

19. சதுரங்க விளையாட்டின் புலிகள் என்று சொல்லப்படுகின்ற grandmasters இருக்கின்ற இடம் - சென்னை. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞனந்தா, குகேஷ் போன்றவர்கள் சென்னையை சார்ந்தவர்கள்.

20. ராயபுரம் இந்தியாவின் மிகவும் பழமையான ரயில் நிலையம் - இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

21. உலகத்தின் மிகப்பெரிய ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை – Integral Coach Factory - இங்கு தான் உள்ளது.

22. சென்னை மருத்துவ கல்லூரி மிகவும் பழமையான மருத்துவக்கல்லூரி என்று சொல்லப்படுகிறது. 1664ல் தொடங்கப்பட்டது.

23. ஆசியாவின் முதல் விமான பயண சேவை தொடங்கிய நகரம் சென்னை – 1910.

24. ஒரகடம் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு Fortune 500 தெரிவு செய்த  22 நிறுவனங்கள் உள்ளன.

25. சென்னை ஒரு காலத்தில் அதிக அளவு திரையரங்குகள் இருந்த நகரமாக கருதப்பட்டது. தற்போது பெரும்பாலான திரையரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாற்றப்பட்டு விட்டன. திரையலகத்தை சார்ந்த நான்கு பிரமுகர்கள் தமிழ் நாட்டின் முதன் மந்திரிகளாக செயல்பட்டார்கள் - அண்ணாதுரை (கதாசிரியர்); கருணாநிதி (கதாசிரியர்); MGR - நடிகர்; ஜெயலலிதா - நடிகை;

26. மிகவும் பழமையான குதிரை பந்தய மைதானம் - கிண்டியில் உள்ளது;  மிகவும் பழமையான மோட்டார் பந்தய மைதானமும் இங்கு தான் உள்ளது - சோழவரம் .

27. ஹிக்கின்போதெம்ஸ் - என்று சொல்லப்படுகின்ற 1844ல் தொடங்கப்பட்ட புத்தக கடை அண்ணா சாலையில் உள்ளது.

28. EID - பாரி நிறுவனம் மிகவும் பழமையான நிறுவனம் - இது மிட்டாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளடக்கியது. 1780ல் தொடங்கப்பட்டது.

29. இந்தியாவின் மிகப்பெரிய கார் டயர் தயாரிப்பு நிறுவனம் என்று சொல்லப்படுகின்ற MRF நிறுவனம் இங்கு தான் உள்ளது.

30. மெட்ராஸ் ரெஜிமென்ட் என்று சொல்லப்படுகின்ற மிகவும் பழமை வாய்ந்த காலாட்படை கம்பெனி 1750ல் இங்கு தொடங்கப்பட்டது.

31. சென்னை வடபழனியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் பழமை வாய்ந்த AVM - திரைப்படங்கள் தயாரிப்பு நிறுவனம் இங்கு தான் உள்ளது.

32. செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலை பள்ளி - மிகவும் பழமை வாய்ந்த பள்ளிக்கூடம் - சென்னை நகரில் 1715ல் தொடங்கப்பட்டது.

இன்னும் பெருமையாக சென்னையை பற்றி சொல்வதற்கு நிறைய விபரங்கள் உண்டு.

சொல்வகை  - Match the words

இங்கு பதினாறு சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வகைப்படுத்துங்கள். ஒரு வகைக்கு நான்கு சொற்கள். எனவே நான்கு வகைகள் கிடைக்கும். (இந்த பயிற்சி உங்களுடைய சொற்களை வகைப்படுத்தும் திறமையை வளர்க்கும்).

(Sixteen Tamil words are provided here. Arrange them as per the following four categories (Four words per category.)

 உருவாக்கப்படவேண்டிய வகைகள்  - Categories to be arranged

மஞ்சள் நிறம் / Yellow
ஆரஞ்சு நிறம் / Orange
பச்சை நிறம் / Green
சிகப்பு நிறம் / Red

பதினாறு சொற்கள்

தக்காளி

(Tomato)

கூடைப்பந்து

(Basketball)

மிளகாய்

(Chilli)

ஆரஞ்சுப்பழம்

(Orange fruit)

பள்ளிப்பேருந்து

(School Bus)

 

கேரட்

(Carrot)

 

தங்கநகை

(Gold ornament)

 

பாசி

(Algae)

 

சூரியகாந்தி

(Sunflower)

குங்குமம்

(Saffron)

நில்

(Stop)  

ரத்தம்

(Blood)

பூசணி

(Pumpkin)

கவனி

(Wait)

கருவேப்பிலை

(Caraway)

புறப்படு

(Start)

தமிழ் விடுகதைகள் – Tamil Riddles

01. அன்றாடம் வருவான், அனைவருக்கும் சொந்தக்காரன். அவன் யார்?

He comes daily and belongs to everybody. Who is he?


02. பார்த்தால் சிறியவன், கடித்தால் கொடியவன். அவன் யார்?

He looks very small, however, he bites deadly. Who is he?


03. எல்லோரையும் ஏற்றி விடுவான், அவன்  மட்டும் ஏற மாட்டான். அவன் யார்?

He allows everybody to go upwards using him. However, he never moves. Who is he?


04. மழைக்காலக்குடை ஓன்று மணல் காட்டில் விரியுது. அது என்ன ?

It is an umbrella used to grow on the sand during rainy seasons. What is it?


05. வெள்ளை ஓரம் கொண்ட நீலச்சேலைக்காரி, ஓலமிடும் ஜாலக்காரி. அவள் யார் ?

She uses always a blue saree having white border and is  shouting tirelessly. Who is she?

மூளைக்கு வேலை

 கீழ்க்கண்ட தகவல்களை பயன்படுத்திக் கொண்டு  இங்கு கொடுக்கப்பட்ட வெளிர் கட்டங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அணைத்து வார்த்தைகளும் "ஊ" என்ற எழுத்தில் தான் தொடங்குகின்றன. வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளின் அருகில் தரப்பட்டுள்ளன.

(The meanings for the words are provided in English alongside Tamil words)

 01. உடல் (Body)

02. தினவு (Itching)

03. தொண்டு (Service)

04. உற்சாகப்படுத்துதல் (Morivation)

05. இடையில் நுழைதல் (Interference)

06. துருத்தி (Accordion)

 ஊ

1

2

3

4

5

6

கட்டங்களில் மறைந்துள்ள வார்த்தைகள் / Words hidden in the boxes

கொடுக்கப்பட்டு உள்ள குறிப்புகளின் உதவியால் இங்கே உள்ள கட்டங்களை மூன்று எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளால் நிரப்புங்கள். கட்டங்களை நிரப்பிய பின்னர், நிழலிட்ட கட்டங்களில் அடங்கியுள்ள எழுத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்தால், அழகான தமிழ் வாக்கியம் கிடைக்கும். அந்த வாக்கியம் என்ன ?

(Using the clues provided, fill in the boxes with three-letter words. Once all the boxes have been filled, combine the letters in the shaded boxes, one after another, to reveal a beautiful Tamil sentence. What is the sentence?)

 

 

 

 

 

தமிழில் அர்த்தம்

English Meaning

01

 

துப்பறிதல்

Investigation

02

 

 

 

பாதை

Route

03

 

 

 

கடிதம்

Letter

04

 

 

 

விதைத்தல்

Sowing

05

 

 

 

வலிமை

Strength

06

 

 

 

நாள்தோறும்

Daily

07

 

 

 

பேசுதல்

Conversation

08

 

 

 

காசு

Money

09

 

 

 

பாட்டு

Song

 

வாசகர் பக்கம்

சிறுகதை

யசோதா பாட்டியின் யூடியூப்

AI generated image

டக்டக்கென்று உரலில் வெற்றிலையை இடித்துக் கொண்டிருந்த யசோதா பாட்டியிடம்,

"பாட்டி! ஒரு குட் நியூஸ்!  உங்களுக்காவே ஒரு வீடியோ வந்திருக்கு. கொலுக்கு நவராத்திரி பேக்கேஜ் வரப் போறதாம்."

"அதென்ன கேபேஜா? ஒரு முட்டைகோஸ்க்கு என்ன பேக்கேஜ் வேண்டிக் கிடக்கு? "

"பாட்டி"..என்று கத்திய மாதங்கி,

“முதல்ல உங்க செவிட்டு மிஷினை எடுத்துக் காதுல மாட்டுங்க. நான் காது காதுன்னா நீங்க லேதுலேது அப்படிங்கிறேள்?"

யசோதா பாட்டி வாயில் வெற்றிலையை மென்று கொண்டே,

"மாதங்கி! யவயாத்திரினா வம்பது நாளும் வேழ பிச்சு எழுக்குமே?"

"பாட்டி! முதல்ல உங்க வாயில இருக்கற அந்தத் தழையை துப்பிட்டு பேசுங்க. ஒண்ணுமே புரியல. "

"அதெல்லாம் இருக்கட்டும். அடிக்கடி முதலை முதலைன்னு சொல்றே! ஆத்துக்குள்ள வந்துடுத்தா? பயமா இருக்குடி.”

செவிட்டு மிஷினை பாட்டி காதில் மாட்டிய மாதங்கி,

"கொலுப்படி, பொம்மைகள் எல்லாம் கொண்டு வந்து அலங்காரம் செஞ்சு பிரசாதமும் பண்ணித் தருவாளாம் பாட்டி. "

"அடச்சக்கை!அப்போ இந்த வருஷம் கொலுவை ஜமாய்ச்சுடலாம்.ஜாலி."

போனில் பேசிக் கொண்டே வந்த மாதவன்,

"அஸ்கு புஸ்கு!  எல்லாம் ஓசில செஞ்சுத் தருவாளா? பணத்தை எடுத்து வைக்கணும். உனக்கு ஜாலி. எனக்கு மணிபர்ஸ் காலி.”

பாட்டிக்குத் தெரியாமல் பக்கோடாவைக் கொறித்துக் கொண்டே வந்த மங்களம்,

“ஏய் லூசு! பாட்டிக்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் கத்து தந்துட்டயா? போச்சு.தெனம் ஒரு கதையைச் சொல்லப் போறா."

"அம்மா! கதை சொல்லும் பாட்டியின் குரலுக்கு வயதாகலாம். ஆனா நல்ல கதைகளுக்கு வயதே ஆகாது. பாட்டி சொல்லும் ஒவ்வொரு நல்ல கதைகளும் வரும் தலைமுறைக்கு போடும் விதை. "என்றபடி பாட்டியின் கதையைக் கேட்க ஓடினாள்.

வனஜா முத்துகிருஷ்ணன், சென்னை

சிறுகதை

ஆசை நிறைவேறுமா?

AI generated image

“அம்மா..! நானும் வரேன்மா உன்னோட..!”

“வேண்டாம். ஏதாவது சேட்டை செய்தால் எனக்குத்தான் கஷ்டம். இன்னொரு நாள் பார்ப்போம்” என்றாள் அம்மா.

அந்த வீட்டு எஜமானி அம்மா ஊஞ்சலில் மகாலட்சுமி போல உட்கார்ந்து ஆடுவதை அம்மா அடிக்கடி சொல்லக் கேட்டிருந்தாள் வள்ளி. அதனால், அந்த ஊஞ்சலில் ஒருமுறையாவது ஆட வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் ஏற்பட்டது.

ஒரு நாள் அந்த ஊஞ்சலில் ஆட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றாள். எஜமானி அதைத் தன் மகள் வீட்டிற்கு ஊஞ்சலை அனுப்பிவிட்டார். ஏமாற்றத்துடன் திரும்பினாள்.

வள்ளியின் ஊஞ்சல் ஆசை நிறைவேறாமலே காலம் ஓடியது. அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கத் தொடங்கினாள்.

ஒருநாள் ஆசிரியர், “என் நிறைவேறாத ஆசை” என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னார். "சிறந்த கட்டுரைக்கு சுதந்திர தின விழாவில் பரிசு வழங்கப்படும்" என்றார்.

வள்ளி தனது நிறைவேறாத ஊஞ்சல் ஆசையைப் பற்றி அழகாக எழுதி இருந்தாள். “நிச்சயம் ஒருநாள் என் ஆசை நிறைவேறும். அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று முடித்திருந்தாள்.

சுதந்திர தின விழாவில் வள்ளிக்கு முதல் பரிசு கிடைத்தது.

வீட்டிற்கு வந்தபோது, ‘அன்பளிப்பு’ என்ற அட்டையுடன் தோட்டத்தில் ஓர் அழகான ஊஞ்சல் இருந்தது.

அதைப் பார்த்த வள்ளி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். உடனே பள்ளிக்குச் சென்று தாளாளருக்கு நன்றி கூறினாள்.

நம்பிக்கையுடன் ஆசைப்படுங்கள்; ஒருநாள் அந்த ஆசை நிச்சயம் நிறைவேறும்.

ருக்மணி வெங்கட்ராமன் சென்னை

வெற்றி நிச்சயம்

AI generated image

மெரினா கடற்கரையில் அமர்ந்திருக்கும்  முரளிக்கு, அவனுடைய அப்பா தந்த ஒரு வருடக் கெடு முடிவடைந்து ஒரு மணி நேரமாகி விட்டது. திரையுலகில் கதாநாயகனாக சாதிக்க முடியாவிட்டால் அவனுடைய எதிர்காலம் ஊரில் இருக்கும் அவனுடைய அப்பாவின் ஜவுளிக் கடையோடுதான் என்பது அவனுக்கும், அவன் தந்தைக்குமிடையே உள்ள எழுதப்படாத ஒப்பந்தம்.

கடந்த வருடம் இதே நாள்..!

"இங்க பார்றா மகனே...! அடுத்த வருசம் இதே நேரத்துக்கு நீ ஜெயிச்சிட்டியானா நீ சொல்றபடி நாங் கேப்பேன்.. தோத்துட்டேன்னு வையி, ஒழுங்கு மரியாதையா ஊருக்கு வந்து, எம்பேச்சைக் கேட்டு நடக்கோணும். ஏதாச்சும் குறுக்கு சால் ஓட்டுனேன்னு வையி.. உங்கொப்பனோட மறுபக்கத்த பாப்பே!"

எச்சரிக்கையாகவும்,  மிரட்டலாகவும் சொல்லியனுப்பிய அப்பாவின் முகம் எதிரே வந்து பயமுறுத்தியது. தோற்றுப் போனவனாகப் போய் நின்றால் அதைச் சாக்கிட்டு அவருடைய தங்கை மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்குவார். சவாலில் ஜெயித்திருந்தாலாவது அப்பாவிடம் சண்டை போட்டுக் காதலியைக் கரம் பிடித்திருக்கலாம். சவாலிலும் தோற்று, காதலிலும் தோற்பதற்கு பதில், வாழ்க்கையைத் துறந்து விடுவதே மேலென முடிவெடுத்தவன்,

தண்ணீரில் குதிக்க ஆயத்தமாக,

அவனுடைய அலைபேசி “வெற்றி நிச்சயம் ” என ரீங்கரித்தது.

அலைகடலில் இறங்குவதா?அலைபேசியை எடுப்பதா? தடுமாறியவன் ‘கடைசியாக யாரிடமாவது பேசி விட்டுத்தான் உயிரை விடலாமே’ என்று அலைபேசியை எடுத்துப் பார்த்தான். புதிய எண். “யாருங்க” என்றான் சுரத்தேயில்லாமல்.

"வாழ்த்துகள் முரளி..! நான் இயக்கப் போகும் திரைப்படத்துக்கு உன்னைக் கதாநாயகனாகப் போடத் தயாரிப்பாளர் சம்மதிச்சிட்டாரு. உடனே வேலையை ஆரம்பிக்கணும். இது என்னோட புது நம்பர் .”

இயக்குனரிடமிருந்து உற்சாகக்குரல் வர, திடீரென அவன் மனதிலிருந்த ஏதோவொரு மாயத்திரை அகன்றது.

“எனக்கு இப்ப நடிக்கறதுல இன்ட்ரஸ்ட் இல்லை சார். ஊரோட போய் அப்பாவுக்கு உதவியா இருந்து ஜவுளிக் கடையை ஜவுளிக் கடலாக்கணும்னு முடிவெடுத்திருக்கேன் சார்”.

ஊரில் முரளியின் அப்பா அவன் அம்மாவிடம்,

“உம்மகன் சவால்ல ஜெயிச்சாலும் சரி தோத்தாலும் சரி, கல்யாணம் மட்டும் அவனோட விருப்பப்படி தான்னு சொல்லிட்டு, எப்ப ஊருக்கு வர்றான்னு கேளு” என்றார்.

விஜி சம்பத்

ஐரோப்பா பயணம் போகலாமா? (பகுதி 6)

ஐரோப்பா பயணம் போகலாமா? (பகுதி 6)

மறுநாள் காலை  க்ரொசான்ட், பிரட், இத்யாதியை முழுங்கினோம்.அறையைக் காலி செய்து லக்கேஜூடன் பேருந்தில் ஏறினோம். ஒவ்வொரு முறையும் பஸ் கிளம்பும் முன், ரமேஷ் ஒரு கணபதி சுலோகம்.   நவீன் வெங்கடேசப் பெருமாளை அழைப்பார். கோரஸான வேண்டுதலோடு பாரீஸூக்குத் தென்மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ள Versailles அரண்மனையை நோக்கிப் புறப்பட்டோம்.

Versailles Palace

யுனஸ்கோவின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் இந்த அரண்மனை 17வது நூற்றாண்டின் பிரெஞ்சு கலாச்சாரத்தின் தலைசிறந்த  சின்னமாக விளங்குகிறது. பதினான்காம் லூயி அவர்களால் கி,பி,1623 ல் வேட்டையாடத்  தங்குமிடமாகக் கட்டப்பட்டு அதன் பின்னர் கி.பி.1661ல் அரண்மனையாக மாற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற ஆண்டான கி.பி.1710 வரை அரண்மனையாகத் திகழ்ந்துள்ளது. இந்த அரண்மனை பற்றிய விபரங்களை நவீன் சுருக்கமாக விளக்கியபின், ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் படலம் ஆரம்பமானது.

பேருந்தின் முன்பகுதியிலிருந்த மைக்கில் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பைச் சொன்னார்கள். பெரும்பாலும் அவரவர் மகன் அல்லது மகளின் தூண்டுதலால் அவர்களே பணம் கட்டி பெற்றவர்களை உலகம் சுற்றிப் பார்க்க அனுப்பியிருந்தார்கள். ஸ்ரீ ஜானகி் டூர்ஸ் பற்றித் தாங்கள் யார் முலம் கேள்விப் பட்டோம் என்பதைச் சொன்னார்கள்.

திருமதி சித்ரா தனது  ஐம்பதாவது பிறந்த நாளுக்காகவும், திருமதி. ஜெய்ஸ்ரீ தனது அறுபதாவது பிறந்த நாளுக்காகவும்  இப்பயணம் மேற்கொண்டதாகச்  சொன்னார்கள். இருவருக்கும் அனைவரது சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னோம்.  இந்த அறிமுகம்,  ஒவ்வொருவரைப் பற்றியும் அனைவரும் அறிந்துகொள்ள வசதியாக இருந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் எங்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

அறிமுகப் படலம் முடிவதற்குள் அரண்மனை வந்து விட்டது. ஏற்கனவே அனைவரது பாஸ்போர்ட் எண்களை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்து விட்டார்கள்.

இறங்கியுவடன் முந்தைய தினம் சிட்டி டூருக்கு வந்த இர்னியும் மற்றொரு பிரெஞ்சு வழிகாட்டியும் தயாராக இருந்தார்கள். எங்கள் எல்லாரது கழுத்திலும், காதிலும் உபகரணங்களை மாட்டிக் கொண்டோம். அந்த வழிகாட்டி அவரது மைக்கில் பேசுவது எங்கள்  ஹெட்செட்டில் கேட்கும். எங்கள் வழிகாட்டி பரபரவென்று சொல்லிக்கொண்டே போனார். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கூட்டத்தில் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்த அவரைப் பின்தொடர்ந்து,   அவர் சொல்வதை அரைகுறையாகக் கேட்டுக் கொண்டே அங்கிருந்த சித்திரங்களையும், சிலைகளையும் பார்த்தோம். ஒவ்வொன்றும் அற்புதமாக, ரசிக்கும் வண்ணம் இருந்தது. ஹெட்செட் நழுவினாலோ, வழிகாட்டி குறிப்பிட்ட தூரம் விட்டு விலகினாலோ எதுவும் கேட்காது. இதுல புகைப்படங்கள் எடுக்க வேறு நின்று விடுவோம். தலையில் ஜானகி டூர்ஸ் கொடுத்த நீலத்தொப்பியைக் கழற்றாமல் இருந்ததால் குழுவினரை அடையாளம் காண முடிந்தது.

திறந்திருக்கும் நேரம் திங்கங்கிழமை தவிர காலை 9.00 முதல் மாலை 5.30 வரை. ஆன்லைனில் முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.

இங்கே கண்டு ரசித்தவை :

கண்ணாடி அரங்கம். 357 கண்ணாடிகளைக் கொண்ட கண்கவர் கலைக்கூடம்.

அடுத்து, அரசர் மற்றும் அரசிக்கான பிரம்மாண்டமான கலைக்கூடங்கள். கலைநயம் மிக்க படுக்கை அறைகள், அரசரைச் சந்திக்க வரும் விருந்தினர்களுடன் அளவளாவும் பிரம்மாண்ட வளாகம்.

இவற்றை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. மேலேயுள்ள வண்ண வண்ண சித்திரங்களைப் பார்க்கவா, எதிரே தெரியும் மெகா சைஸ் ஓவியங்கள் மற்றும் தீர்க்கமான சிலைகளைப் பார்க்கவா, வழிகாட்டி காதுக்குள் கதைத்துக் கொண்டிருப்பதைக் கேட்கவா, எதுவும் புரியவில்லை. கேட்பதை விட்டுப் பார்க்க ஆரம்பித்தேன். கண்ணால் சிறைபிடித்ததை அலைபேசியில் சிறைபிடித்துக் கொண்டோம். அந்தக் காலத்தில் எல்லா அரசர்களும் ஏராளமான மனைவிகளுடன் உல்லாசமாக இருந்திருப்பது புரிகிறது. மன்னரின் படுக்கை  பெரிதாகவும், ராணியின் படுக்கை சற்றே சிறிதாகவும் இருந்தது. இதை வைத்துத் தான் king size bed, queen size bed என்று சொல்றாங்களோ!

இந்த அரண்மனைக்கு எதிரே 800 ஹெக்டேரில் பிரம்மாண்ட தோட்டம் அமைந்துள்ளது. அரண்மனையிலிருந்து பார்த்தால் கொள்ளை அழகுடன் காட்சியளித்தது. இதனை வடிவமைத்தவர் Andre Le Notre. பதினான்காம் லூயி மன்னரது விருப்பப்படி கட்டியது. இப்போதும் மிக அழகாகப் பராமரிக்கிறார்கள். Fountain Show எல்லாம் உண்டாம். நேரமில்லாததால் மேலிருந்து பசேலென்று குளிர்ச்சியாய்த் தெரிந்த பூங்காவைக் கண்களுக்குள் படம் பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.

வசந்தா கோவிந்தராஜன், சென்னை

சிறுகதை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் 

AI generated image

அருண், முகேஷ், ரமேஷ் மூணு பேரும் நெருங்கிய நண்பர்கள். அவர்களின் +2 ப்ரீ போர்ட் பரிட்சைகள் நடந்து முடிந்தது.

இந்த பரீட்சையில் பாஸ் பண்ணாவிட்டால் ஃபைனல்ஸ் எழுத முடியாது என்கிற பயம் அவர்களுக்கு. அதனால் நிறைய அவமானங்கள் வேறு வரும் . மூன்று பேரும் டீச்சர் வீட்டில் நுழைந்து ஆன்ஸர் பேப்பரை மாத்திடலாமென்று திட்டமிட்டார்கள்.

ப்ளான்படி மூன்று பேரும் டீச்சர் வீட்டில் போய் கதவை தட்டினார்கள். கதவு தானாக திறந்தது. சற்று கலவரத்துடன் உள்ளே நுழைந்தார்கள். வீட்டில் சாமான்கள் தாறுமாறாக கிடந்தன. பக்கத்தில் ஸ்டோர்ரூமிலிருந்து ஏதோ முனகல் சத்தம்.

தைரியமாக ஸ்டோர் ரூம் பக்கம் போய் மெள்ள கதவை திறந்து பார்த்தால் டீச்சரும் அவள் பெற்றோர்களும் வாயில் துணி அடைத்து கட்டி போடபட்டிருந்தார்கள். முகேஷ்  உடனே ஒடி போய் டீச்சர் வாயிலிருந்து துணியை எடுத்தான்.

டீச்சர் மெல்லிய குரலில் வீட்டில் திருடர்கள் புகுந்து விட்டதாக கூறினாள். அருண் டீச்சர் மற்றும் அவள் பெற்றோர் கட்டையும் அவிழ்த்து விட்டான். சத்தம் கேட்டு அந்த திருடர்களில் இரண்டு பேர் ஸ்டோர் ரூம் பக்கம் வர அருண், முகேஷ், ரமேஷ், மூவரும் பக்கத்திலிருந்த கம்பு, அண்டா, பேட் இவைகளால் அந்த திருடர்களை தாக்கினார்கள். 

 அவர்களின் கால்களில் தடியால் அடிக்க ரமேஷும் முகேஷும் இருவரும் அவர்கள் காலை கட்டி போட்டு  வாயில் துணி அடைத்து விட்டனர். டீச்சர் தன் கைப்பேசியில் போலீஸுக்கு போன் பண்ணி போலீஸ் வந்து அந்த நான்கு பேரையும் பிடித்து போனது.

டீச்சர் தன்  மாணவர்கள் நான்கு பேரையும் தழுவி கொண்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.  அவர்கள் இங்கு வர காரணம் கேட்க, நான்கு பேரும் கோரஸாக “உங்களை பார்க்கத்தான் டீச்சர்” என்று மழுப்பினர். 

 அருண், முகேஷ்  மற்றும் ரமேஷ் மூன்று பேரும் "நாம இங்க வந்து பிடி பட்டிருந்தால் எவ்வளவு அவமானம்.! இப்ப எல்லாரும் பெருமையா பேசும்படி காரியம் செய்தோம்” என்று கடவுளுக்கு நன்றி சொன்னார்கள்.

சந்தியா ஷங்கர்

கவிதை

வாங்க, சிரிக்கலாம்!

AI generated image

1.ஆசிரியர்: இந்த Period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும்.

 மாணவன்: அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா?

 ஆசிரியர்: ?????

 2.ஆசிரியர்: ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க?

 மாணவன்: நீங்கதான சார், நேற்று சொன்னீங்க துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்......

 3.ஆசிரியர்: படிப்பைப் பயன்படுத்தாத தொழில் ஒன்று சொல்லுங்கோ?

 மாணவன்: அதைக் கூடப் படிச்சால் தானே தெரிய வரும்!

 4.ஆசிரியர் : இரண்டாம் உலகப்போர் தோன்ற என்ன காரணம் சொல்லு?

 மாணவன் : முதல் உலகப் போர்ல நிறைய தப்பு செஞ்சுருப்பாங்க, அதையெல்லாம் திருத்தி அடுத்த தடவை இன்னும் நல்லா போரை நடத்தணும்னு முடிவு

ஆசிரியர் : ??? 

 5.ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?

 மாணவன்: எங்க அப்பா, அம்மா சண்ட போடும் போது பார்க்கலாம் சார்

6. ஆசிரியர்: ஒரு தேர்வு எழுதுவதற்கான காகிதம் தயாரிக்க பதினைந்து மரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் நீங்கள் செய்ய வேண்டியது...

 மாணவன்: இனி நாங்கள் பரீட்சையே எழுத மாட்டோம் சார்.. நீங்க கவலைப் படாதீங்க.

7. ஆசிரியர்: 1869-ல் என்ன நடந்தது?

 மாணவன்: எனக்கு தெரியாது சார்.

 ஆசிரியர்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873-ல் என்ன நடந்தது?

 மாணவன்: காந்திஜிக்கு நாலு வயசு சார்.

 8.ஆசிரியர்: என்னப்பா... எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?

 மாணவன்: கொஸ்டீன் பேப்பர் லீக் ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!

 9.ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...

 மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...

 10.ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன் ?

 மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார் ! 

11. ஆசிரியர்: அமெரிக்கா எங்கே உள்ளது.

 மாணவன்: தெரியாது சார்.

 ஆசிரியர்:  bench மேல் ஏறி நில்லுடா.

 மாணவன்: ஏறி நின்னா தெரியுமா சார்.

12. ஆசிரியர்: உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு

 மாணவன்: தூங்க வைக்கிறது நீங்க, எழுப்புறது நானா? என்ன கொடுமை சார் இது?

கோவிந்தராஜன், சென்னை

ஓவியங்கள்

Drawings by the students of St. Antony's Higher Secondary School, Velachery, Chennai

A Lakshmi

Jaicharan IVA
Madhusri VIB

S Krithish VIA

T Poorani XD

சிறுகதை

அணில் கடித்த பழம்

AI generated image

"டேய் அண்ணா" மூன்று வயது திலகா தன்   அண்ணன் சரவணனை அப்படித் தான் கூப்பிடுவாள். 

"நீ பழம் சாப்ட்டிருக்கியா?”

"ம், ஒருவாட்டி அப்பத்தா ஊரிலிருந்து வரும்போது கொய்யாப்பழம் கொண்டு வந்துச்சு" 

" நல்லாருக்குமா?" 

" ம், கொய்யாப்பழம், சாப்டவே நல்லா இருந்துச்சு"

" அப்பத்தா மறுபடி எப்ப வரும்?"

"இனிமே வராது. செத்துப் போச்சு"

" நான் பழமே சாப்ட முடியாதா? "அழுது கொண்டே கேட்ட தங்கையைப் பார்க்கப் பாவமாக இருந்தது சரவணனுக்கு. 

" பக்கத்துத் தோட்டத்துல  கொய்யாப்பழம் இருக்கும். அணில் கடிச்ச பழம் இருந்தா வாட்ச்மேன் தாத்தா குடுப்பாராம். அங்க போய்க் கேட்டு பாக்கலாம். வரியா?" 

" சரி, வா, போலாம்"என்றாள் ஆர்வத்துடன். 

இருவரும் தோட்டத்துக்குப் போனார்கள். இவர்களைக் கண்டதும் வாட்ச்மேன்" எங்க வந்தீங்க? "என்று அதட்டினார். 

" தாத்தா, எந்தங்கச்சி பழமே சாப்டதில்ல. அணில் கடிச்ச பழம் இருந்தா, குடுப்பீங்கன்னு கணேசு சொன்னான். அதான் வந்தோம்" என்றான் சரவணன். 

அங்கு விளையும் பழங்களை நன்கு பழுக்கு முன்பு  பறித்து, விடுவார்கள். 

அணில்கள் கொறித்தவை வியாபாரத்துக்கு ஆகாது என்பதால், அவைகளை வேலை செய்பவர்கள் எடுத்துக் கொள்வார்கள். 

ஆவலுடன்  நின்றிருந்த குழந்தைகளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "இன்னும் பழுக்க நாலைஞ்சு நாள் ஆகும்.  இப்ப இதை எடுத்துட்டு ஓடுங்க" என்று ஒரு பழத்தைக் கொடுத்து அவர்களை விரட்டினார். ஓனர் பார்த்தால் வேலைக்கு அல்லவா கேடு. 

நாலைந்துநாள் கழித்து....... 

சாத்தியிருந்த வேலியின் இடைவெளியில் இருவரும் நுழையும் போதே இவர்களைப் பார்த்து, விட்ட ஓனர்  குச்சியுடன் காத்திருந்தாள். அவளைப் பார்த்து விட்டு அவர்களும் நின்று விட்டார்கள். 

சட்டை கூட போடாமல் பயத்துடன் நின்றிருந்த குழந்தைகளை அந்தப் பெண்மணி அருகில் அழைத்தாள். 

"திருட்டுக் கழுதைகளா! பழத்தைத் திருட வந்தீங்களா?" கோபத்துடன் குச்சியை ஓங்கினாள்.

"திருடறதா? அப்படீன்னா? " 

ஓங்கிய கை இறங்கியது. வாட்ச்மேனைக் கூப்பிட்டு, 

“  பையில் பழங்களைப் போட்டு வீட்டில் கொண்டு குடுத்துட்டு வாங்க” என்று சொன்னாள். பணக்காரி என்றால் இரக்கம் இருக்கக் கூடாதா? 

சுபாஷிணி ரமணன்

எழுத்துப் பயிற்சி - ந்

Let's learn to write

ந்
Pronunciation help n as in net
Group Mellinam
Examples நாய் - Dog நிலா - Moon
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்
ந்

© 2026 Tamil Thoodhu · tamilthoodhu.com

வாசகர் கருத்துக்கள்0